×

உலக அரங்கில் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணியுடன் நிறைவு..!

மதுரை: உலக அரங்கில் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி, பொங்கல் பண்டிகையான நேற்று முன்தினம் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்றது. நேற்று 15-ந்தேதி மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

இந்நிலையில் உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பச்சை கொடியசைத்து துவக்கி வைத்தனர். 8 சுற்றுகளாக நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 700 மாடுபிடி வீரர்கள் மற்றும் 720-க்கும் மேற்பட்ட  காளைகள் பங்கேற்கின்றது. 12 காளைகளை அடக்கிய விராட்டிபத்து கிராமத்தை சேர்ந்த மாடுபிடி வீரர் கண்ணனுக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட உள்ளது. இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசை வெல்லும் மாடுபிடி வீரருக்கு முதல்வர் பழனிசாமி தரப்பில் கார் பரிசாக அளிக்கப்படுகிறது. 2-வது இடத்தில 9 காளைகளை அடக்கிய அரிட்டாபட்டியை சேர்ந்த கருப்பணனுக்கு 2ம் பரிசாக பைக் வழங்கப்பட்டது. 8 காளைகளை அடக்கிய சக்தி என்பவருக்கு ஒரு சவரன் தங்கக் காசு பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த மாட்டிற்கு குருவித்துறை சந்தோஷ் என்பவரின் காளைக்கு கார் பரிசு வழங்கப்பட்டது.

இதுகுறித்து வெற்றிபெற்ற கண்ணன் கூறுகையில் முதல் பரிசு பெற்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

இன்றைய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 41 பேர் காயம் அடைந்துள்ளனர். அதில் 18 மாடுபிடி வீரர்கள், 14 காளை உரிமையாளர்கள், 5 பார்வையாளர்கள், காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் ஒரு பெண் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 11 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Tags : World ,Madurai Alankanallur Jallikattu , Madurai, Alankanallur, Jallikattu, Completion
× RELATED சில்லி பாயின்ட்…