×

கொரோனா தடுப்பூசி போடுவது ஒரு சவால்தான், தோல்வியில்லை: இதுவரை 3,000 பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது: ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: தமிழகத்தில் இதுவரை சுமார் 3,000 பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கோவின் செயலியில் ஒரே நேரத்தில் அதிகளவு பேர் தடுப்பூசி போட முன்பதிவு செய்ய முயன்றதால் சிறிது நேரம் செயலி முடங்கியது. கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்வதற்கான கோவின் செயலியும் சரியாக இயங்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி மையத்தில் இருவர் மட்டுமே தடுப்பூசி போட்டிருக்கிறார்கள். மதுரை மாவட்டத்தில் இன்று 500 நபர்களுக்கு தடுப்பூசி போடவேண்டிய நிலையில் 150 பேருக்கு மட்டுமே போடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் மையத்தில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில் திட்டமிட்டப்படி ஒரு நாளில் ஒவ்வொரு மையத்திலும் 100 பேருக்கு தடுப்பூசி போட்டாக வேண்டிய கட்டாயம் இல்லை. கொரோனா தடுப்பூசி போடுவதில் இலக்கை நோக்கிய திட்டம் இல்லை என்று தெரிவித்தார். மேலும், அவர் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை சுமார் 3,000 பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி போடுவது ஒரு சவால்தான், தோல்வியில்லை. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. முன்பதிவு செய்தவர்களை அடிப்படையாக கொண்டு 166 மையங்கள் தேர்வு செய்யப்பட்டது. இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏதுமில்லை என தகவல்கள் வந்துள்ளன. விருப்பத்திற்கேற்பவே கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

Tags : Corona ,Radhakrishnan , Corona, Vaccine, Health Secretary, Radhakrishnan, Information
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...