×

சூதாட்டம், மது விற்பனை கோவையில் பாஜ பிரமுகர்கள் உள்பட 86 பேர் கைது

கோவை: கோவை சிங்காநல்லூர் சாரதி நகர் பகுதியில் உள்ள ரெயின்ட்ரி கன்ட்ரி கிளப் வளாகத்தில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிங்காநல்லூர் போலீசார் நேற்று அங்கு விரைந்தனர். கிளப் முதல் தளத்தில் சூதாட்டம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சூதாட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.56 ஆயிரம் சூதாட்ட பணத்தை பறிமுதல் செய்தனர். கிளப் உரிமையாளர் தேவராஜ் மீது வழக்கு பதிவுசெய்து, அவரை தேடி வருகின்றனர். சூதாட்டத்துக்கு ரொக்கப்பணம் பயன்படுத்துவதற்கு பதிலாக 10, 20 என எண் பொறிக்கப்பட்ட டோக்கன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைதானவர்களில் 3 பேர் பா.ஜ பிரமுகர்கள். இவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் தினமான நேற்று, டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. கோவை புறநகரில் பல்வேறு பகுதிகளில் போலீசார் மதுபான விற்பனையை தடுக்க சோதனை நடத்தினர். இதில் 52 இடத்தில் மதுபானம் மறைத்து வைத்து விற்பனை செய்த 52 போலீசாரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 468 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர். இதேபோல், கோவை சுண்டக்காமுத்தூர் சுடுகாட்டில் சீட்டாட்டம் நடத்திய முருகவேல் மற்றும் முருகன் உள்பட 4 பேரை கைது செய்தனர். மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 86 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags : Coimbatore , Gambling, sale of liquor, BJP personalities, arrests
× RELATED கோவையில் அதிமுகவினர்...