தேர்தல் ஆணையம் உத்தரவு: மக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் டார்ச் லைட்: கமல் ஹாசன் நன்றி

புதுடெல்லி: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கீடு செய்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, அனைத்து அரசியல் கட்சிகளும் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கடந்த மக்களவை தேர்தலில் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. இதே சின்னத்தை சட்டப்பேரவை தேர்தலிலும் ஒதுக்க அக்கட்சி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்தது. ஆனால், கடந்த மாதம் 14ம் தேதி தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், மக்கள் நீதி மய்யத்திற்கு பதிலாக எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு செய்தது. புதுச்சேரியில் மட்டும் டார்ச் லைட் சின்னத்தில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடலாம் என தெரிவித்தது.

இதை எதிர்த்து மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதிலளிக்க தேர்தல் ஆணையம் அவகாசம் கோரியது. இதையடுத்து, வழக்கு அடுத்த மாதம் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்

பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னத்தை தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளதாக நடிகர் கமல் நேற்று தனது டிவிட்டரில் கூறி உள்ளார். அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், ‘234 தொகுதிகளுக்கும் மக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளி பாய்ச்சப் போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்த நாளில் இது நிகழ்ந்திருக்கிறது. இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், என்னுடன் துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: