மத்திய அரசு விவசாயிகள் 9ம் கட்ட பேச்சும் தோல்வி: வரும் 19ல் மீண்டும் ஆலோசிக்க முடிவு

புதுடெல்லி: மத்திய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, டெல்லி எல்லையில் பல்வேறு மாநில விவசாயிகள் 51 நாட்களை கடந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை மத்திய அரசு, விவசாயிகளுடன் 8 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு காண முடியவில்லை. இப்பிரச்னையை தீர்த்து வைக்க உச்ச நீதிமன்றம் 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இக்குழுவில் உள்ளவர்கள் வேளாண் சட்டத்தை ஆதரித்தவர்கள் என்பதால், குழு முன்பாக ஆஜராக மறுத்த விவசாயிகள், மத்திய அரசுடனான பேச்சவார்த்தை தொடரும் என தெரிவித்தனர். இதன்படி, 9ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இதில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், இணை அமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோரும், 40 விவசாய சங்க பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.  சுமார் 5 மணி நேரம் நடந்த இப்பேச்சவார்த்தையில், 3 சட்டங்களையும் ரத்து செய்தே தீர வேண்டுமென விவசாயிகள் உறுதியுடன் கூறினர். இதனால், எந்த முன்னேற்றமும் இல்லாமல் தோல்வி அடைந்தது. அடுத்ததாக, வரும் 19ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இருதரப்பிலும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: