×

ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுக்கு 274 ரன் குவிப்பு: பந்துவீச்சில் நடராஜன் அசத்தல்

பிரிஸ்பேன்: இந்திய அணியுடனான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன் குவித்துள்ளது. கபா மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பெய்ன், முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். அந்த அணியில் தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வரும் தொடக்க வீரர் வில் புகோவ்ஸ்கிக்கு பதிலாக மார்கஸ் ஹாரிஸ் சேர்க்கப்பட்டார்.  இந்திய அணியில் காயம் காரணமாக பூம்ரா, அஷ்வின், ஜடேஜா, விஹாரி ஆகியோர் இடம் பெறாத நிலையில், தமிழக வீரர்கள் டி.நடராஜன், வாஷிங்டன் சுந்தர் இருவரும் அறிமுகமாகினர்.  மயாங்க் அகர்வால், ஷர்துல் தாகூருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. வார்னர், ஹாரிஸ் இருவரும் ஆஸ்திரேலிய இன்னிங்சை தொடங்கினர். வார்னர் 1 ரன் மட்டுமே எடுத்து சிராஜ் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் ரோகித் ஷர்மாவிடம் பிடிபட்டார். ஹாரிஸ் 5 ரன் எடுத்து தாகூர் பந்துவீச்சில் சுந்தர் வசம் கேட்ச் கொடுத்து பெவியன் திரும்ப, ஆஸி. அணி 8.1 ஓவரில் 17 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது. இந்த நிலையில், மார்னஸ் லாபுஷேன் - ஸ்டீவன் ஸ்மித் ஜோடி 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 70 ரன் சேர்த்தது.

ஸ்மித் 36 ரன் எடுத்து (77 பந்து, 5 பவுண்டரி) சுந்தர் சுழலில் ரோகித் வசம் பிடிபட்டார். இதையடுத்து, லாபுஷேனுடன் மேத்யூ வேடு இணைந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். லாபுஷேன் 145 பந்தில் அரை சதம் அடித்தார். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 113 ரன் சேர்த்தது. மேத்யூ வேடு 45 ரன் (87 பந்து, 6 பவுண்டரி) விளாசி நடராஜன் வேகத்தில் தாகூரிடம் பிடிபட்டார்.  உறுதியுடன் விளையாடி சதம் அடித்த லாபுஷேன் 108 ரன் எடுத்து (204 பந்து, 9 பவுண்டரி) நடராஜன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து, கேமரான் கிரீன் - கேப்டன் டிம் பெய்ன் ஜோடி 6வது விக்கெட்டுக்கு நிலைத்து நின்று நிதானமாக ரன் சேர்த்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன் குவித்துள்ளது (87 ஓவர்). கிரீன் 28 ரன், பெய்ன் 38 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இந்திய பந்துவீச்சில் நடராஜன் 2, சிராஜ், சுந்தர், தாகூர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

ஒரே டூரில் 3 அறிமுகம்!
ஐபிஎல் டி20 தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி தனது துல்லியமான யார்க்கர் பந்துவீச்சால் அனைவரது கவனத்தையும் ஈர்த்த தமிழக வேகம் நடராஜன், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் ‘வலைப்பயிற்சி’ பந்துவீச்சாளராக அழைத்துச் செல்லப்பட்டார். அப்படி சென்றவர் ஒருநாள், டி20, டெஸ்ட் என 3 வகை கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணிக்காக அறிமுகமாகி, ஒரே டூரில் 3 வகை கிரிக்கெட்டிலும் அறிமுகமான முதல் இந்திய வீரராக சாதனை படைத்துள்ளார். நடப்பு தொடரில் இந்திய வீரர்கள் பலர் அடுத்தடுத்து காயம் அடைந்த நிலையில்,  அதிர்ஷ்ட தேவதையின் கடைக்கண் பார்வை நடராஜன் மீது விழ இந்த வாய்ப்புகள் தேடி வந்தன. அதை இரு கரங்களாலும் பற்றிக் கொண்ட அவர், சர்வதேச கிரிக்கெட்டிலும் தனது திறமையை நிரூபித்து முத்திரை பதித்துள்ளார்.

4 டெஸ்டிலும் தாக்குப்பிடித்த 2 பேர்
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்டதை நெருங்கியுள்ள இந்திய அணி, உடல்தகுதியைப் பொறுத்த வரை காலிப் ‘பெருங்காய’ டப்பாவாகவே மாறியுள்ளது. முதல் டெஸ்டில் முகமது ஷமி, 2வது டெஸ்டில் உமேஷ் யாதவ், 3வது டெஸ்டில் ஒரேயடியாக ஜடேஜா, விஹாரி, அஷ்வின், பூம்ரா என மொத்தம் 6 பேர் காயம் காரணமாக விலக நேரிட்டது. கேப்டன் விராத் கோஹ்லி முதல் டெஸ்ட் போட்டியுடன் நாடு திரும்பிவிட்டார். அகர்வால் 2வது மற்றும் 3வது டெஸ்டில் சேர்க்கப்படவில்லை. ரோகித் முதல் 2 டெஸ்டில் இல்லை. மொத்தத்தில், 4 டெஸ்ட் போட்டியிலும் களமிறங்கியது ரகானே, புஜாரா மட்டுமே. பிரிஸ்பேன் டெஸ்டின் முதல் நாளான நேற்று நவ்தீப் சைனியும் காயம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

வேகமாக மாறிய ரோகித்!
36வது ஓவரின் 5வது பந்தை வீசியபோது சைனி காயம் அடைந்து வெளியேறினார். இதனால் கடைசி பந்தை ரோகித் ஷர்மா வீசினார். வழக்கமாக சுழற்பந்துவீச்சில் ஈடுபடும் ரோகித் நேற்று மிதவேகப் பந்துவீச்சாளராக மாறி அந்த பந்தை வீசியது அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.

* பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியின் முதல் நாளான நேற்று, இந்திய வீரர்கள் சிராஜ், சுந்தர் இருவரையும் சில ரசிகர்கள் நிறவெறியுடன் தகாத வார்த்தைகளால் அழைத்து கிண்டல் செய்ததாக ஆஸி. நாளிதழ் ஒன்றில் தகவல் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரில் ‘ஹாட்ரிக்’ தோல்வியை சந்தித்த மும்பை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பறிகொடுத்தது.
* ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் விளையாடுவதற்காக மெல்போர்ன் வரும் வீரர், வீராங்கனைகள் 14 நாள் தனிமைப்படுத்தலில் வைக்கப்படுகின்றனர்.
* காலேவில் நடக்கும் முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இலங்கை 135 ரன்னுக்கு சுருண்ட நிலையில், இங்கிலாந்து 2ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 320 ரன் குவித்து வலுவான நிலையில் உள்ளது. பேர்ஸ்டோ 47, டான் லாரன்ஸ் 73 ரன் எடுத்தனர். கேப்டன் ஜோ ரூட் 168 ரன், பட்லர் 7 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.
* வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியின் லெக் ஸ்பின்னர் ஹேடன் வால்ஷுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.Tags : Australia ,Natarajan , Australia 274 for 5: Natarajan stunning in bowling
× RELATED மீண்டும் செய்திகள் வழங்க முடிவு ஆஸ்திரேலியாவில் பேஸ்புக் சமாதானம்