காணும் பொங்கல் கொண்டாட்டம் மெரினா கடற்கரைக்கு வர பொதுமக்களுக்கு தடை: மீறினால் நடவடிக்கை போலீசார் எச்சரிக்கை

சென்னை: காணும் பொங்கலையடுத்து இன்று மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. புத்தாண்டு அன்று மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. மெரினா கடற்கரையில் அதிக கூட்டம் கூடும் என்பதாலும், அதன் மூலம் கொரோனா பரவல் அதிகரித்துவிடும் என்பதாலும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதேபோல பொங்கல் பண்டிகை என்பதால் மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும் என்பதால் 3 நாட்கள் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடைவிதித்திருந்தனர்.   இந்தநிலையில் இன்று (16ம் தேதி) காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப் படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கூடுவார்கள். அவர்கள் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வருவார்கள். புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் மாட்டு வண்டிகளிலும் மெரினா கடற்கரைக்கு வருவார்கள்.

இந்நிலையில், காணும் பொங்கலான இன்று (16ம் தேதி) மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் போலீசாரும், காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் கடற்கரைக்குள் வர தடை விதிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் கமி‌ஷனர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது காணும் பொங்கல் தினமான இன்று என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று ஆலோசனை நடத்தினர். இதையடுத்து காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வராத அளவுக்கு தடுப்பு வேலிகள் அமைத்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மெரினா கடற்கரைக்குள் வாகனங்களில் செல்ல முடியாத படி சர்வீஸ் சாலை முழுவதும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு போலவே காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரை சீல் வைக்கப்பட்டுள்ளது. கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகிறது. தடையை மீறி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து இன்று காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரையில் மட்டும் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதைப்போன்று திருவான்மியூர் கடற்கரை, நீலாங்கரை கடற்கரை, கோவளம், மாமல்லபுரம் போன்ற கடற்கரை பகுதிகளுக்கும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வண்டலூர் உயிரியில் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா போன்ற இடங்களில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் தடை விதிக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

காணும் பொங்கல் தினத்தன்று பொதுமக்கள் மெரினா கடற்கரை, கோவளம், நீலாங்கரை போன்ற கடற்கரை பகுதிகளுக்கும், வண்டலூர் உயிரியில் பூங்கா, சிறுவர் பூங்கா போன்ற பகுதிகளுக்கு குடும்பமாகவும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சென்று கொண்டாடி மகிழ்ந்து வந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு பூங்கா, தியேட்டர்களில் குறைவான நபர்கள் அனுமதிக்கப்படுவதால் இந்த ஆண்டு காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய உறவினர்களின் வீடுகளுக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

Related Stories: