இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் கட்டுவதில் பல லட்சம் மோசடி: தி.நகர் அதிமுக எம்எல்ஏ சத்யா மீது சபாநாயகரிடம் பரபரப்பு குற்றச்சாட்டு: மாநகராட்சி ஆணையர் மீதும் புகார்

சென்னை: இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் கட்டுவதில் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ள தி.நகர் அதிமுக எம்எல்ஏ சத்யா மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த சென்னை மாநகராட்சி ஆணையர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் தனபாலிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் எஸ்.பிரவீன்குமார், சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபாலிடம் அளித்த புகாரில் கூறி இருப்பதாவது:

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தி.நகர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பி.சத்தியநாராயணன் என்ற சத்யா. 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக பதவி வகித்து வருகிறார். அவரது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை செலவிடுவதில் முறைகேடு நடந்துள்ளது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

அதன்படி, சென்னை மாநகராட்சி 10வது மண்டலத்திற்கு உட்பட்ட கோட்டம் 135, பக்தவச்சலம் சாலையில் இருக்கும் விளையாட்டு திடலில் இறகு பந்து கூடாரம் (உள்விளையாட்டு அரங்கம்) அமைப்பதற்கு அடித்தளம் அமைக்க 23 லட்சத்து 73 ஆயிரத்து 900 செலவழிக்கப்பட்டுள்ளது. அதே உள்விளையாட்டு அரங்கத்திற்கு தரைத்தளம் அமைக்க மீண்டும்18.83 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. மீண்டும் அந்த அரங்கத்திற்கு மரத்தால் ஆன தரை தளம் அமைக்கும் பணிக்கு 21.11 லட்சம் நிதி செலவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் மேற்கூரை அமைக்க 18.06 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. பின்னர் 2017-18ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் எலக்ட்ரிக்கல் லைட் அமைக்கும் பணிக்காக 20.95 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையின் ஷெட்யூல்படி செலவு செய்திருந்தால்கூட உள்விளையாட்டு அரங்கம் கட்ட 50 லட்சம் கூட தாண்டியிருக்காது. ஆனால் நிதிமுறைகேடு செய்ய வேண்டும் என்ற காரணத்தின் அடிப்படையில் 5 கட்டங்களாக பிரித்து அப்பட்டமான நிதி மோசடியில் எம்எல்ஏ சத்யா ஈடுபட்டுள்ளார்.

கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மு.க.ஸ்டாலின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் வெறும் 33.33 லட்சத்தில் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் 2017-18ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. ஆனால் தி.நகர் எம்எல்ஏ நிதியின் கீழ் உள்விளையாட்டு அரங்கம் அமைக்க 1 கோடியே 1 லட்சத்து 55 ஆயிரத்து 494 செலவிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் இரு வேறு கோட்டங்களில் ஒரே மாதிரியான உள்விளையாட்டு அரங்கம் கட்ட எப்படி இவ்வளவு பெரிய தொகை வித்தியாசம் வரும் என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும். சென்னை, மாநகராட்சி அதிகாரிகள் துணையோடு பகிரங்க மோசடியில் தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் சத்யா ஈடுபட்டுள்ளார். இந்த மோசடிக்கு சென்னை மாநகராட்சி ஆணையர், 10வது மண்டல உதவி ஆணையர், செயற்பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். எனவே சட்டமன்ற உறுப்பினர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டு முறைகேட்டில் ஈடுபட்டுள்ள தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் சத்யாவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். மோசடிக்கு உதவிய சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Related Stories: