×

பொங்கலுக்கு 417 கோடிக்கு மது விற்பனை: திருச்சி மண்டலம் முதலிடம்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போகி மற்றும் பொங்கல் என இரண்டு நாளில் தமிழகத்தில் 417.18 கோடிக்கு   மது விற்பனையாகியுள்ளது.  தமிழகத்தில் 5,300 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 80 முதல் 90 கோடி வரையில் விற்பனை நடக்கிறது. இதேபோல், பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற விடுமுறை தினங்களில் இந்த வருவாய் இரட்டிப்பாகும். அந்தவகையில், 2021 ஆங்கில புத்தாண்டு அன்று 297 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையானது. இதேபோல், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 5 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.  இதனால், மது விற்பனை மூலம் ₹2 லட்சம் வருவாய் கிடைக்கும் கடைகளில் 10 லட்சம் வரையிலான மதுபானங்களும், 4 லட்சம் வருவாய் கிடைக்கும் கடைகளில் 18 லட்சம் வரையிலான மதுபானங்களும் இருப்பு வைக்கப்பட்டன.

மதுரை, கோவை, சென்னை மண்டலங்களில் அதிக விற்பனை நடைபெறும் என கணிக்கப்பட்டதால் அந்த மண்டலங்களில் கூடுதலாக மதுபானங்கள் இருப்பு வைக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும், புதுவகை மதுபான இருப்பும் அதிகம் ைவக்கப்பட்டது. எனவே, 5 நாள் தொடர் விடுமுறையை முன்னிட்டு பொங்கல் பண்டிகைக்கு ₹750 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.  இந்நிலையில், கடந்த 13ம் தேதி போகி பண்டிகை மற்றும் நேற்று முன்தினம் 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டதை அடுத்து இந்த இரண்டு நாளிலும் டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அலைமோதியது. பல இடங்களில் அரசு விதித்த கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் கடைபிடிக்கப்படவில்லை. சானிடைசர், முகக்கவசம் இல்லாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் குடிமகன்கள் மதுவகைகளை பெட்டி பெட்டியாக வாங்கி சென்றனர்.

அந்தவகையில், இந்த ஆண்டு போகி மற்றும் பொங்கல் பண்டிகை ஆகிய 2 நாளில் மட்டும் தமிழகத்தில் 417.18 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனையாகியுள்ளது.  அதன்படி, கடந்த 13ம் தேதி போகி பண்டிகை அன்று 147.75 கோடிக்கும், 14ம் தேதி பொங்கல் பண்டிகை தினத்தன்று 269.43 கோடிக்கும் மதுவிற்பனையாகியுள்ளது. மொத்தமாக 2 நாளில் மட்டும் 417.18 கோடிக்கு தமிழகத்தில் மதுவிற்பனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    13ம் தேதி (போகி)    14ம் தேதி (பொங்கல்)
மண்டலம்    விற்பனை
சென்னை    39.08 கோடி    54.47 கோடி       
திருச்சி    29.23 கோடி    56.39 கோடி       
சேலம்    26.72 கோடி    53.18 கோடி
மதுரை    28.15 கோடி    55.27 கோடி        
கோவை    24.57 கோடி    50.12 கோடி  
    147.75கோடி    269.43 கோடி
417.18 கோடி (மொத்தம்)



Tags : Trichy ,region , Liquor sales for Pongal worth Rs 417 crore: Trichy region tops the list
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...