பாஜ, ஆர்.எஸ்.எஸ் சதி திட்டம் எடுபடாது திமுக என்றுமே இந்துக்களுக்கு எதிரி அல்ல: மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை:  திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் சமுத்துவ பொங்கல் விழா ஆவடி, கோணாம்பேடு கிராமத்தில் நேற்று முன் தினம் நடந்தது.   மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கினார்.   விழாவில், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: பொங்கல் விழாவை தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் மட்டுமல்ல, உலகெங்கும் வாழக்கூடிய தமிழர்கள் தங்களது இல்லங்களில் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். ஜாதி, மதங்களை கடந்து சமூக உணர்வோடு இந்த விழாவை கொண்டாட வேண்டும் என்று கலைஞர் நமக்கெல்லாம் ஒன்றை சுட்டி காட்டினார்கள். தை முதல் நாளன்று தமிழ்புத்தாண்டு என உருவாக்கி கொண்டாட கூடிய, அந்த உணர்வை வெளிப்படுத்தும்  வகையில் கடந்த சில ஆண்டு காலமாக நாம் அப்படித்தான் பொங்கலை கொண்டாடி வருகிறோம். இதற்காகவே கலைஞர் அரசாணையை பிறப்பித்தார்.  தை பிறந்தால், வழி பிறக்கப்போகிறது. வேறு வழியே கிடையாது. இதை நிரூபிப்பதற்காகத்தான் பொதுமக்களாகிய நீங்கள் இங்கே குழுமியிருக்கிறீர்கள்.

 கோயில் பக்கத்தில் தான் மேடை அமைக்கப்பட்டு, நான் பேசிக்கொண்டு இருக்கிறேன். பராசக்தி படத்தில் கலைஞர் எழுதிய கதை வசனம் தான், எனக்கு ஞாபகத்தில் வருகிறது. அதில், கோயில் கூடாது என்பது எங்கள் கொள்கை அல்ல. கோயில் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக்கூடாது. மேலும், பாஜ ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட மதவாத அமைப்புகள் என்னதான் சதி செய்தாலும், திமுக என்றுமே இந்துக்களுக்கு விரோதி அல்ல. அவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யும் பொய் பிரச்சாரம் மக்களிடம் ஒருபோதும் எடுபடாது.  தமிழகத்தில் நடைபெற்று வரும், அதிமுக ஆட்சியில் வேலை வாய்ப்பு இல்லை. பெண்களுக்கு முன்னேற்றம் கிடையாது. விவசாய பெருங்குடி மக்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். பாஜ  கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்புக்குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், அதிமுகவோ விவசாயிகளை பாதிக்கும் என தெரிந்தும் வேளாண் சட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

இன்னும் 4 மாதங்களில் திமுக ஆட்சிக்கு வரத்தான் போகிறது. கலைஞர் எப்படி விவசாய கடன்களை ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து போட்டு தள்ளுபடி செய்தாரோ, அதேபோல நானும் முதல் கையெழுத்து போட்டு விவசாய கடன்களை தள்ளுபடி செய்வேன். அதுமட்டுமல்ல, கூட்டுறவுவங்கியில் 5 பவுன் வரை வாங்கிய நகை கடனையும் முழுமையாக ரத்து செய்வேன்.  நான் ஒன்றும், மற்றவர்களை போல், தவழ்ந்து வந்து இந்த நிலைக்கு வரவில்லை. கட்சியில் அடிமட்டத்தில் இருந்து கடின உழைப்பால், படிப்படியாக உயர்ந்தேன். கலைஞரிடம், என்னை பற்றி பலர் கேட்ட போது, உழைப்பால் உயர்ந்தவர் என பெருமையாக கூறினார். இந்த பாராட்டையே, பெரும் பாக்கியமாகவே கருதுகிறேன்.  இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, விழாவில் தமிழர் பாரம்பரிய முறையில் மு.க.ஸ்டாலின் பெண்களுடன் பொங்கல் வைத்தார். இதனை அடுத்து, பொய்கால் குதிரை ஆட்டம், சிலம்பாட்டம், கிராமிய இசைக்கச்சேரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தது. மேலும், திருவள்ளூர் மத்திய மாவட்ட எல்லை முதல் விழா மேடை வரை மாவட்ட செயலாளர் சா.மு.நாசர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் தாரை, தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.  நிகழ்ச்சியில், சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திருவள்ளுவர் நாளை நடைமுறைப்படுத்தியது திமுக அரசு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: திருவள்ளுவர் திருநாள், தை 2. தமிழறிஞர் பெருமக்களின் ஆய்வு நோக்கிலான கோரிக்கை அடிப்படையில் திருவள்ளுவர் நாளையும் திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கையும் நடைமுறைப்படுத்தியது முத்தமிழறிஞர் கலைஞரின் திமுக அரசு. தமிழர் பண்பாட்டு அடையாளமான திருக்குறளை நினைவில் வைத்து, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற குறள்நெறியை எந்நாளும் கடைபிடிப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழில் அஞ்சல் துறை தேர்வு அறிவிப்புக்கு நன்றி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: அஞ்சல்துறை கணக்கர் பணிக்கான தேர்வுகள் தற்போது தமிழிலும் நடத்தப்படும் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். நடவடிக்கை எடுத்த அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலத்தில் மத்திய அரசுப் பணிகளுக்கான அனைத்துத் தேர்வுகள் மற்றும் நடைமுறைகளிலும் தமிழைக் கட்டாயம் சேர்க்க மத்திய அரசு கவனமுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பென்னிகுவிக்கை வணங்குகிறேன்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டதாவது: தென்தமிழக விவசாயிகளின் வாழ்வு செழிக்க முல்லைப் பெரியாறு அணையினை இடையறாத தன் சொந்த முயற்சியால் கட்டித் தந்த ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுவிக்கின் பிறந்தநாள் இன்று. நன்றியுடன் அவரை வணங்குகிறேன்.

Related Stories: