வரும் 27ம் தேதி சசிகலா விடுதலை அதிமுகவில் திடீர் சலசலப்பு: தேர்தலுக்கு முன் கட்சி உடையுமா?

சென்னை: ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா வருகிற 27ம் தேதி விடுதலையாகிறார். அவர் விடுதலையாவதற்குள் அதிமுகவில் வரவேற்பும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. இதனால் கட்சி மீண்டும் உடையுமா என்ற பரபரப்பு தற்போது உருவாகியுள்ளது.

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. சசிகலா தலைமையில் ஒரு பிரிவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு பிரிவும் உருவானது. ஆனால் சசிகலா சிறைக்குச் சென்றதும், முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியை மதிக்காமல், டிடிவி தினகரன் தன்னிச்சையாக செயல்பட்டதால், அவரையும், அவரது ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார். பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்த்து, துணை முதல்வர் பதவியையும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியையும் வழங்கினார். சசிகலாவும் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் தொடர்ந்து நீடித்து வருகிறார்.

இதனால் சசிகலா எப்போது வந்தாலும் அவரிடம் கட்சியை விட்டுக்கொடுக்க மூத்த தலைவர்கள் தயாராக இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில், சசிகலாவுக்கு மீண்டும் கட்சியில் இடமில்லை என்று தெளிவாக கூறிவிட்டனர். இந்தநிலையில், சசிகலாவுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேட்டியளித்தார். இந்த பேட்டிக்கு, அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பதில் அளித்தார். அப்போதும், சசிகலா விவகாரம் முடிந்துபோன ஒன்று. அவரை மீண்டும் கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறினார். இந்தநிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறும்போது, அதிமுக, அமமுகவுக்கு இடையில் நடப்பது பங்காளி சண்டைதான். சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்ததும், கட்சியை பலப்படுத்தும் முடிவைத்தான் எடுப்பார்.  ஜெயலலிதாவை அம்மா என்றும், சசிகலாவை சின்னம்மா என்றும்தான் அழைப்பார்கள் என்று கூறினார்.

சசிகலாவை தாய் ஸ்தானத்தில் வைத்து அமைச்சர் பேசியது அதிமுகவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கோகுல இந்திரா, சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தார். தற்போது ராஜேந்திரபாலாஜி ஆதரவு தெரிவித்துள்ளார். ஏற்கனவே சசிகலாவுக்கு ஆதரவாக செல்லூர் ராஜூ உள்பட பல அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மோதலில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தேர்தலுக்கு முன்னரே அதிமுக உடையுமா என்ற பரபரப்பும் அதிமுகவில் எழுந்துள்ளது.

Related Stories: