தமிழ் மொழி, கலாச்சாரத்தை மத்திய அரசு நசுக்க திட்டம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

அவனியாபுரம்: தமிழ் மொழி, கலாச்சாரத்தை மத்திய அரசு நசுக்க திட்டமிடுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.  மதுரை அவனியாபுரத்தில் நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு நடந்தது. ஜல்லிக்கட்டை பார்வையிட காலை 11.20 மணிக்கு பார்வையாளர் மேடைக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வந்தார். திமுக நிர்வாகிகள் பொன் முத்துராமலிங்கம், மூர்த்தி, மணிமாறன், எம்எல்ஏ டாக்டர் சரவணன், எஸ்.ஆர்.கோபி உள்ளிட்டோர் வந்தனர். பகல் 12 மணிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேடைக்கு வந்தார்.  அவருடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மேலிடப் பொறுப்பாளர்கள் தினேஷ் குண்டுராவ், வேணுகோபால், மாணிக்கம் தாகூர் எம்பி ஆகியோரும் உடன் வந்தனர்.

கூட்டத்தைப் பார்த்து ‘வணக்கம்’ சொன்ன ராகுல்காந்தி, உதயநிதி ஸ்டாலினுடன் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்து, ஜல்லிக்கட்டை பார்வையிட்டார். மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்களுக்கு இருவரும் தங்கக்காசுகள் பரிசு வழங்கினர்.

  விழா மேடையில் ராகுல்காந்தி பேசும்போது, ‘‘ஜல்லிக்கட்டில் பார்வையாளராக பங்கேற்றதில் மகிழ்ச்சி. ஜல்லிக்கட்டு பாதுகாப்பாக நடத்தப்படுகிறது. தமிழ் மொழியை, கலாச்சாரத்தை பாதுகாத்து, ஜல்லிக்கட்டு மூலம் பரப்பி வருபவர்களுக்கு நன்றி. தமிழக மக்களோடு நிற்க வேண்டியது எனது கடமை’’ என்றார்.  உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘‘இனி ஒவ்வொரு வருடமும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வந்து பார்க்க இருக்கிறேன். இங்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது’’ என்றார். முன்னதாக ராகுல் காந்தி மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: ஜல்லிக்கட்டை நேரடியாக பார்வையிட்ட பின்தான் காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை. வீரர்கள்தான் காயமடைகின்றனர் என தெரிகிறது.

நாட்டின் கலாச்சாரங்களை அழிக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபடுகிறது. தமிழ் மக்களின் உணர்வுகளை, மொழியை நசுக்குவதன் மூலம் தமிழ் உணர்வை நசுக்கிவிடலாம் என் எண்ணுகிறது. தமிழ் உணர்வை கலாச்சாரத்தை யாராலும் நசுக்க முடியாது.

தமிழ் மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர்களிடமிருந்து பலவற்றைக் கற்றுக் கொண்டேன். எதை நோக்கி நாடு நகர வேண்டும் என்பதை அவர்கள் காட்டியுள்ளனர். மத்திய அரசு விவசாயிகளை புறக்கணிக்க மட்டுமல்ல. அவர்களின் போராட்டத்தை, வாழ்வாதாரத்தை நண்பர்களின் நலனுக்காக அழிக்கவும் மத்திய அரசு சதி செய்கிறது. விவசாயிகள்தான் நாட்டின் முதுகெலும்பு. அவர்கள் பலவீனமானால், நாடு பலவீனமாகும். விவசாயிகளுக்கு பக்கபலமாக தொடர்ந்து இருப்பேன். வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுமாறு, மத்திய அரசை கட்டாயப்படுத்துவேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

‘நீங்க இந்திரா காந்தி பேரனா...’=ராகுலை பார்த்த மூதாட்டி பரவசம்

ஜல்லிக்கட்டு விழாவை பார்வையிட்ட பின், ராகுல்காந்தி மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள தென்பழஞ்சி கிராமத்தில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்றனர். அவருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பானையில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை போட்டு, ராகுல் காந்தி பொங்கல் விழாவை கொண்டாடியதை அனைவரும் ரசித்தனர். பின்னர் பொதுமக்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார். அப்போது, அவருடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட மூதாட்டி, “ஐயா... நீங்க... இந்திரா காந்தி பேரனா” என கேட்டதும், அதனை புரிந்து கொண்ட அவர், மூதாட்டியை கட்டித் தழுவினார். ராகுலின் இந்த எளிமையான அணுகுமுறையால் கிராம மக்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.

Related Stories: