தூய்மைப் பணியாளர்கள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா

பூந்தமல்லி: பொங்கல் விழாவை முன்னிட்டு திருவேற்காடு நகராட்சியில்  தூய்மை பணியாளர்கள் நடத்திய சமத்துவ பொங்கல் விழா நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில்  அமைச்சர் பாண்டியராஜன் மற்றும் தமிழ் திரைப்பட காமெடி நடிகர் தாமு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  தூய்மைப் பணியாளர்களுடன் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர். மேலும் குப்பைகள் தரம் பிரிப்பது குறித்து தூய்மைப் பணியாளர்கள் நாடகத்தின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தாமு,  தூய்மை பணியாளர்களுடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடியது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் கொரோனாவை வென்று நாம் 2021ம் ஆண்டை காண பெரும் பங்காற்றியது தூய்மைப் பணியாளர்கள் என்றும் தூய்மைப் பணியாளர்கள் தினந்தோறும் குப்பைகளை கூட்டி, பெருக்கி, கழிப்பதாகவும் தற்போது குப்பைகளை தரம் பிரித்து வகுப்பதால் அவர்களுக்குள் கணிதம் செயல்படுகிறது.

 எனவே ஒவ்வொரு தூய்மை பணியாளர்களும் கணித ஆசிரியர்கள் என்றும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் கணிதம் செயல்படுவதாகவும் தெரிவித்தார். நகராட்சி ஆணையர் செந்தில்குமரன், பொறியாளர் நளினி, சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ், நகராட்சி பணியாளர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகளும், பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பும் வழங்கப்பட்டது.

Related Stories: