×

அழகான உறுதியான தலைமுடிக்கு ஆலோவேரா!

நன்றி குங்குமம் தோழி

தலைமுடி, ஒவ்வொரு பெண்ணிற்கும் மிகவும் முக்கியமானது. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் பெண்கள் அதிக நேரத்தை செலவு செய்வது வழக்கமான ஒன்று தான். தலைமுடி ஒருவருடைய அழகை நிர்ணயிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நமது உடலின் ஆரோக்கியத்தில் சில சிக்கல்கள் ஏற்படும் பொழுது அதற்கான அறிகுறிகளை நமது தலைமுடி உதிர்தல், தடிமன் குறைதல் மற்றும் நரைமுடி அதிகம் தோன்றுதல் போன்ற அறிகுறிகள் தென்படும். காலத்தின் சீதோஷ்ணநிலைக்கு ஏற்ப நம்முடைய தலைமுடியினை பெண்கள் எவ்வாறு பராமரிக்கலாம் என்று ஆலோசனை வழங்குகிறார் பிரபல சீயக்காய் நிறுவனத்தின் பிராண்டு மேலாளர் சுகன்யா.

உலர்நிலை, பளபளப்பின்மை மற்றும் சேதம் ஆகியவை பருவமழை காலத்தில் கூந்தலில் ஏற்படும் பாதிப்பின் மூன்று முக்கிய அறிகுறிகளாகும். ஆண்டு முழுதும் நமது தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிப்பது அவசியம் என்றாலும், பருவமழை பெய்கின்ற காலத்தின் போது, தலைமுடியை உலர்வாக்கி உயிரோட்டமற்றதாக மாற்றும். இந்த காலகட்டத்தில் கூடுதல் அக்கறை, கவனிப்பும் தேவை. கெராட்டின் என அழைக்கப்படுகிற புரதத்தின் மீது முடி இழைகள் உருவாவதால் கெராட்டின் உற்பத்தியை ஊக்குவிக்கும், ஒரு சமநிலையான தலைமுடி பராமரிப்பு செயல்பாட்டை ஒருவர் பின்பற்றுவது மிகவும் அவசியம்.

புரதம் நிறைந்துள்ள ஆலோவேரா, பருவமழை காலம் ஏற்படுத்தும் சேதங்களிலிருந்து உங்களின் தலைமுடிக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக இருக்கும். ஆலோவேரா தலைமுடிக்கு மட்டும் இல்லை சருமத்திற்கும் சிறந்த மருந்து. உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலை போக்கும் மேஜிக் ஆலோவேராவில் உள்ளது. தலையில் ஏற்படும் பூஞ்சை மற்றும் பொடுகு பிரச்னையை போக்குகிறது. சுற்றுச்சூழல் மாசினால் ஏற்படும் சேதங்களிலிருந்தும் தலைமுடியை பாதுகாக்கிறது. உங்க தலைமுடியின் pH-ன் சமநிலையை  மீட்டுத் தரும் சக்தி ஆலோவேராவிற்கு உண்டு. பருவமழை காலத்தில் சருமம் மற்றும் தலைமுடி பளபளப்பாகவும், புதுப் பொலிவோடு இருக்க வீட்டிலேயே சில அழகு குறிப்புகளை பின்பற்றலாம்.

* பொடுகு பிரச்னைக்கு : ஒரு கப் ஆலோவேரா ஜெல்லில் இரண்டு தேக்கரண்டி ஆர்கானிக் ஆப்பிள் சிடார் வினிகரை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை மண்டையோட்டின் மீது தடவவும். 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரை கொண்டு மிதமான ஷாம்பூவை பயன்படுத்தி தலைமுடியை அலசவும். பொடுகு பிரச்னை இனி இல்லை.

* பளபளப்பான தலைமுடிக்கு : இரண்டு தேக்கரண்டி ஆலோவேரா ஜெல், ஒரு தேக்கரண்டி யோகர்ட் மற்றும் இரண்டு தேக்கரண்டி தேனை ஒன்றாக கலந்து தலைமுடியின் வேர் பகுதியிலிருந்து நுனி வரை தடவவும். 10-15 நிமிடங்கள் கழித்து தலையில் நன்றாக மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து மிதமான ஷாம்பூவை கொண்டு கூந்தலை அலசவும்.

* முடி வளர்ச்சிக்காக : ஒரு கப் ஆலோ வேரா ஜெல், இரண்டு தேக்கரண்டி விளக்கெண்ணெய் மற்றும் இரண்டு தேக்கரண்டி வெந்தயப்பவுடர் சேர்த்து நன்றாக கலக்கவும். தலைமுடியின் வேர் பகுதியிலிருந்து அதன் முனைகள் வரை இதனை தடவவும். ஒரு ஷவர் கேப்-ஐ கொண்டு உங்களது தலைமுடியை இறுக்கமாக கட்டி இரவு முழுதும் அப்படியே விட்டுவிடவும். காலை எழுந்தவுடன் இளம்சூடான வெந்நீரில் தலைமுடியை அலசவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், முடி ஆரோக்கியமாக வளரும்.

* தலைமுடியின் உறுதிக்கு : தலைமுடி வலுவாகவும் மற்றும் உடைவதி லிருந்து பாதுகாக்க முட்டையின்  வெள்ளைக்கருவுடன் ஆலோவேரா மிக பொருத்தமான கலவையாகும். இரண்டு முட்டையின் வெள்ளைக்கரு, இரண்டு தேக்கரண்டி ஆலோ வேரா ஜெல் மற்றும் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக கலக்கவும். இந்த கலவையை மண்டையோட்டின் மீது தடவி 5 முதல் 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து, ஒரு ஷவர் கேப்-ஐ கொண்டு தலைமுடியை இறுக்கி கட்டி, இரவு முழுதும் அப்படியே விட்டுவிடவும். காலை எழுந்தவுடன் இளம்சூடான வெந்நீரில் தண்ணீரை கொண்டு தலைமுடியை அலசவும். ஒரு வாரத்தில் இருமுறை இந்த மாஸ்க்கை பயன்படுத்தி வந்தால் கூந்தல் வலுவாகவும் உறுதியாகவும் வளரும்.

* தலைமுடி வறட்சிக்கு : ஒரு பாத்திரத்தில் ஒரு கப் ஆலோவேரா ஜெல், இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் இரண்டு தேக்கரண்டி தேனை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை தலைமுடியின் மீது நன்கு தடவி, 10 முதல் 15 நிமிடங்கள் வரை இளம் சூடான டவலை கொண்டு தலைமுடியை சுற்றவும். பிறகு மிதமான ஷாம்பூவை பயன்படுத்தி தலைமுடியை அலசவும். தலைமுடி வறட்சியாகாமல் பாதுகாக்க முடியும்.

- ப்ரியா  
படங்கள் : சதீஷ்

Tags :
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!