அவனியாபுரம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலம்.! 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காயம்: அலங்காநல்லூர், சிராவயலில் இன்று களை கட்டுகிறது

அலங்காநல்லூர்:  பொங்கல் விழாவை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடந்தன. இதில் இன்ஸ்பெக்டர், வீரர்கள் உட்பட சுமார் 100 பேர் காயமடைந்தனர். உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மற்றும் சிராவயல் மஞ்சு விரட்டு போட்டிகள் இன்று நடக்கின்றன.  பொங்கல் விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் 3 நாட்கள் ெதாடர்ச்சியாக ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். நடப்பாண்டில் பொங்கலன்று நேற்று முன்தினம்(ஜன.14) மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடந்தது. நீதிமன்ற உத்தரவு, கொரோனா விதிமுறைகளின்படி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டன. நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வந்த வீரர்களே அனுமதிக்கப்பட்டனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அகில இந்திய காங். துணைத்தலைவர் ராகுல் காந்தி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, காங்.மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 523 காளைகள் பங்கேற்றன. 420 வீரர்கள் பங்கேற்றனர். அவர்கள் சீறி வந்த காளைகளை போட்டிபோட்டு அடக்கினர். 26 காளைகளை பிடித்த மதுரை முத்துப்பட்டி திருநாவுக்கரசு மற்றும் விஜய் இருவருக்கும் காங்கிரஸ் கமிட்டி சார்பில் புதிய டூவீலர்கள் வழங்கப்பட்டன. 3வது பரிசாக ஜெயகார்த்திக்கிற்கு பரிசுகளுடன், கோப்பை வழங்கப்பட்டது. மதுரை வில்லாபுரம் கார்த்திக்கின் காளை சிறந்த காளையாக தேர்வானது. 2 பார்வையாளர்கள், மாட்டின் உரிமையாளர்கள் 10 பேர், ஜல்லிக்கட்டு வீரர்கள் 46 பேர் உட்பட 58 பேர் காயமடைந்தனர்.  காரை தட்டிச் சென்ற வீரர்: பொங்கல் விழாவின் 2ம் நாளான நேற்று மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே பாலமேடு, மஞ்சமலை ஆற்றுத்திடலில் ஜல்லிக்கட்டு நடந்தது. காலை 8 மணிக்கு அமைச்சர் உதயகுமார் கொடியசைத்து ஜல்லிக்கட்டை துவக்கினார். முன்னதாக, மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் ஜல்லிக்கட்டு விழா கமிட்டி நிர்வாகிகள், மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

674 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 600 வீரர்கள், 8 சுற்றுகளில் களமிறக்கப்பட்டனர். 18 காளைகளை அடக்கிய மதுரை கருப்பாயூரணி சீமான் நகரைச் சேர்ந்த கார்த்திக்(25) முதல் பரிசாக காரை தட்டிச் சென்றார். 17 காளைகளை அடக்கி 2வது பரிசாக ஒரு பவுன் தங்கக்காசை மதுரை அருகே பொதும்பை சேர்ந்த கார் டிரைவர் பிரபாகரன்(24) பெற்றார். அலங்காநல்லூர் அருகே உள்ள பி.மேட்டுப்பட்டியை சேர்ந்த கார்த்திக் 10 காளைகளை பிடித்து 3ம் இடம் பிடித்தார். சிறந்த காளைகளுக்கான பரிசை பாலமேடு யாதவர் உறவின் முறைக்கு சொந்தமான காளை பெற்றது. காங்கேயம் பசுவும், கன்றும் முதல் பரிசாக வழங்கப்பட்டது. 2வது பரிசாக விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பை சேர்ந்த காளிமுத்துவின் காளைக்கு ஒரு பவுன் தங்க காசு, 3வது பரிசாக மதுரை, சிக்கந்தர்சாவடியை சேர்ந்த வீரபாண்டிக்கு வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது. போட்டியின்போது உசிலம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வீக பாண்டி, 12 மாடுபிடி வீரர்கள், 7 உரிமையாளர்கள், 9 பார்வையாளர்கள் உட்பட 29 பேர் காயமடைந்தனர்.

ஆதனூர் தீபன் ராஜ்(24), அலங்காநல்லூர் கண்ணன்(25) இருவருக்கும் மார்பில் குத்து விழுந்தது. இவர்கள் உள்ளிட்ட 9பேர் பலத்த காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.  முதல்வர் பங்கேற்பு: பொங்கல் திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று,  உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதற்காக இங்குள்ள கோட்டை முனியசாமி வாடிவாசல் வண்ணம் பூசி தயார் நிலையில் உள்ளது. போட்டியில் களமிறங்க 764 வீரர்கள், 850 காளைகளின் உரிமையாளர்கள் அனுமதி டோக்கன் பெற்றுள்ளனர். ஜல்லிக்கட்டு காளைகள் சேகரிக்கும் இடம் வரை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி தயார்படுத்தப்பட்டுள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கின்றனர். இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டை இருவரும் துவக்கி வைக்கின்றனர். இதற்காக குளிர்சாதன வசதியுடன் பிரத்யேக மேடை அமைக்கப்பட்டுள்ளது.

சிராவயல் மஞ்சு விரட்டு: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள சிராவயலில் நடைபெறும் மஞ்சுவிரட்டு புகழ் பெற்றதாகும். சுமார் 300 ஆண்டுகளுக்கு மேலாக மஞ்சுவிரட்டு இங்கு நடைபெறுகிறது. பொங்கல் விழாக்களை முன்னிட்டு தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதால் தமிழக மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

மூன்றிலிருந்து முதலிடம்

பாலமேடு ஜல்லிக்கட்டில் முதல் பரிசாக கார் வென்ற கார்த்திக் கூறும்போது, ‘‘நான் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ முடித்துள்ளேன். வேலை இல்லாததால், எனது மாமாவுடன் சேர்ந்து கம்பி கட்டும் வேலை செய்து வருகிறேன். கடந்த முறை 3வது பரிசு பெற்றேன். இம்முறை முதலிடம் பிடித்திருக்கிறேன். மகிழ்ச்சியளிக்கிறது’’ என்றார்.

 

‘2ம் பரிசு வேண்டாம்... கோர்ட்டுக்கு போகிறேன்’

பாலமேடு ஜல்லிக்கட்டில் 17 காளைகள் பிடித்து 2வது பரிசு பெற்றதாக அறிவிக்கப்பட்ட பிரபாகரன், தனக்கான ஒரு பவுன் தங்கக்காசு, கோப்பையை வாங்க மறுத்து விட்டார். பிரபாகரன் கூறுகையில், ‘‘நான் 17 மாடுகளை பிடித்து, கடைசியில் 18வது மாட்டையும் பிடித்தேன். எல்லைக்கோடு வரை மாட்டுடன் சென்றேன். ஆனால், கமிட்டியில் இருந்தவர்கள் பிடிக்கவில்லை என்று அறிவித்துவிட்டனர். கடந்த முறை கார் பரிசு பெற்றேன். இந்த முறையும் காரை பரிசு பெற்று விடக்கூடாது எனக் கருதி திட்டமிட்டு, கமிட்டியினர் 17 மாடுகள் என அறிவித்து விட்டனர். நான் காளையை பிடித்தது வீடியோவில் பதிவு இருக்கிறது. அதையும் போட்டு பார்க்க வேண்டுகிறேன். ஒருதலைப்பட்சமாக இந்த முடிவு அறிவிக்கப்பட்டதால், எனக்கு பரிசு வேண்டாம். நான் கோர்ட்டுக்கு போகிறேன்’’ என்றார்.

கார் முதல் கட்டில் வரை

பாலமேடு ஜல்லிக்கட்டில் மதுரை மாவட்ட போலீஸ் சார்பில் காவலன் செயலி மற்றும் யூடியூப் மூலம் உலகம் முழுவதும் உள்ள மக்கள் பார்க்கும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. வென்ற வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் கார், டூவீலர், கட்டில், பீரோ, மிக்சி, கிரைண்டர், சைக்கிள், தங்கக் காசு, வெள்ளிக்காசு உள்ளிட்ட பல்வேறு பரிசுப்பொருட்களை குவித்தனர்.

வேளாண் சட்டம் எதிர்த்து வாடிவாசலில் போராட்டம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டின்போது, மாடுபிடி வீரர்களான சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியை சேர்ந்த வினோத், அவனியாபுரத்தை சேர்ந்த பால்பாண்டி ஆகிய இருவரும் வாடிவாசல் முன்பாக வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: