தமிழகத்தில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி

சென்னை: தமிழகத்தில் முதல் கட்டமாக 5.36 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக ெகாரோனா தடுப்பூசி இன்று போடப்படுகிறது. தமிழகத்தில் இதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் இன்று தொடங்கி வைக்கிறார். மேலும் 10 மருத்துவர்கள் இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்கின்றனர்.  இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, இந்த 2 தடுப்பூசிகளும் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 5.36 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மற்றும் 20 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி கடந்த வாரம் தமிழகம் வந்தது. இதனைத்தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த தடுப்பூசி பிரித்து அனுப்பப்பட்டது. தற்போது, அனைத்து மாவட்டங்களில் உள்ள தடுப்பூசி சேமிப்பு கிடங்குகளில் இது சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்கள பணியாளர்களை கணக்கெடுக்கும் பணியும் நடைபெற்றது. இதில், முதல்கட்டமாக சுகாதாரப்பணியாளர்கள் 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்க முடிவு செய்யப்பட்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில், 4.50 லட்சம் பேர் மட்டும் தான் கோவிட் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணியை இன்று மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி அளிக்கும் மையத்தில் முதல்வர் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணியை தொடங்கி வைக்கிறார். இதில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கின்றனர். மேலும் தடுப்பூசி தொடர்பாக பொதுமக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக தமிழகத்தின் 10 தலைசிறந்த மருத்துவர்கள் இன்று தடுப்பூசி போட்டு கொள்ள உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 2,850 இடங்களில் கொரோனா தடுப்பூசி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில், முதல்கட்டமாக 166 மையங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. சென்னையில் ராஜிவ்காந்தி, ஓமந்தூரார், கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, ராயப்பேட்டை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை ஆகிய அரசு மருத்துவமனைகளிலும் மாநகராட்சிக்கு உட்பட்ட போரூர், ஈஞ்சம்பாக்கம், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடும் பணி நாளை நடைபெறுகிறது. இதைத்தவிர்த்து அப்போலோ மற்றும் எம்ஜிஎம் மருத்துவமனையிலும் தடுப்பூசி போடப்படுகிறது. ஒவ்வொரு சுகாதார மாவட்டங்களிலும் இரண்டு முதல் நான்கு இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. இதற்காக அனைத்து இடங்களிலும் வசதிகள் தயார்நிலையில் உள்ளது.

தடுப்பூசி மையத்திற்கு வருபவர்களின் ஆவணங்களை ஆய்வு செய்து தடுப்பூசி அளித்த பின்பு அவர்களின் உடல்நிலையை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளுக்காக ஒவ்வொரு மையத்திலும் 5 தடுப்பூசி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு எதாவது பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க ஒரு மருத்துவர் மற்றும் ஒரு பல்நோக்கு பணியாளர் அந்த இடத்தில் தயார் நிலையில் இருப்பார்கள். அவசர காலத்திற்கு தேவையான அனைத்து மருந்துகளும் மையத்தில் தயார் நிலையில் இருக்கும். ஒவ்வொரு மையத்திலும் இரண்டு மணி நேரத்திற்கு 25 நபர்கள் வீதம் தினசரி 100 பேருக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசி திட்டங்கள் பாதிக்காத வகையில் இந்த கொரோனா தடுப்பூசி போடும் பணியை செயல்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

யார் போடலாம்; யார் போடக்கூடாது

*  கொரோனா தடுப்பூசியை யாரெல்லாம் போட்டுக் கொள்ளலாம், யார் போடக் கூடாது என மத்திய சுகாதாரத் துறை சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.

* 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போட வேண்டும்.

* ஒரு டோஸ் தடுப்பு மருந்து கொடுத்தால் அதன் பிறகு 14 நாட்கள் கழித்தே அடுத்த டோஸ் கொடுக்க வேண்டும்.

* முதல் டோசில் எந்த வகை தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டதோ, அதே தடுப்பு மருந்துதான் இரண்டாவது டோசிலும் கொடுக்கப்பட வேண்டும். தடுப்பு மருந்துகளை மாற்றி கொடுக்கக் கூடாது.

* குறிப்பிட்ட மருந்துகள், உணவுப் பொருட்கள், தடுப்பு மருந்துகள் அல்லது ஊசி மருந்துகளால் ஒவ்வாமை ஏற்படக் கூடியவர்கள், கொரோனா தடுப்பு மருந்து முதல் டோசின் போது ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடக் கூடாது.

* காய்ச்சல் இருப்பவர்கள், மாதவிடாய் சரியான இடைவெளியில் இல்லாதவர்கள், நோய் எதிர்ப்பு குறைபாடு உடையவர்கள் தடுப்பூசி போடக்கூடாது.

* கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போடக் கூடாது.

* கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள், பிளாஸ்மா சிகிச்சை பெற்றவர்கள், நோயால் உடல்நலம் குன்றி மருத்துவமனைகளில் இருப்பவர்கள் தடுப்பூசி போடக் கூடாது.

மையங்களின் எண்ணிக்கையை 5 ஆயிரமாக உயர்த்த வலியுறுத்தல்

* தடுப்பூசி விநியோகம் மற்றும் வழங்கப்படுவது குறித்து உடனுக்குடன் தகவல்களை அறியும் வகையில் உருவாக்கப்பட்ட கோவின் மொபைல் ஆப்பையும் பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்.

*  தடுப்பூசி வழங்க நாடு முழுவதும் 3,000க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையை 5,000 ஆக அதிகரிக்கும்படி மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

*  தடுப்பூசி, கோவின் சாப்ட்வேர் குறித்த சந்தேகங்களை அறிய, ‘1075’ என்ற இலவச உதவி எண் அமைக்கப்பட்டுள்ளது.

*  சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் செலவை மத்திய அரசே முழுமையாக ஏற்கிறது.

Related Stories: