போராடும் விவசாயிகள்: 9-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என மத்திய அரசு திட்டவட்டம்..!

டெல்லி: டெல்லியில் போராடி வரும் விவசாய அமைப்பு பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய 9-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேவேளையில் திருத்தங்கள் கொண்டு வரத் தயார், ஆனால் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துவிட்டது.

இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏற்கனவே 8 கட்ட பேச்சுவார்த்தையில் முக்கியமான பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படவில்லை. இந்த நிலையில் இன்று 9-ம் கட்ட பேச்சுவார்த்தை மத்திய அரசுக்கும் - விவசாயிகள் சங்கங்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை சுமார் 5 மணி நேரம் நீடித்தது. இறுதியில் மத்திய அரசு நடத்திய 9-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது

3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் 51 நாட்களாக போராடி வருகின்றனர். மேலும், 10-ம் கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: