×

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 14 நாட்களுக்குள் இந்த தடுப்பூசியை பயன்படுத்தக் கூடாது: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி..!

சென்னை: தமிழகத்தில் நாளை 166 மையங்களில் முதற்கட்டமாக 6 லட்சம் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது என்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திட்டத்தை நாளை தொடங்க உள்ளனர். அந்த வகையில் முதல்வர் பழனிசாமி அவர்கள், மதுரையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக பிரதமர் மோடி கலந்துகொள்ளும் கொரோனா தடுப்பூசி வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்கிறார். இதேபோல், 166 மையங்களில் முதற்கட்டமாக 6 லட்சம் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 10,199 முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக பல்வேறு கட்டங்களாக ஏற்கனவே மாதிரி ஒத்திகைகள் பார்க்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும் இதனை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் தேவையான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. எனவே எவ்வித தடையுமின்றி திட்டமிட்டப்படி தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி நாளை தொடங்கப்படும். மருத்துவத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தடுப்பூசி குறித்து நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தில் 10 சிறந்த மருத்துவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள உள்ளனர். தடுப்பூசி மீதுள்ள வதந்திகளை தவிர்க்கும் வகையில் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களும் இந்த தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 14 நாட்களுக்குள் இந்த தடுப்பூசியை பயன்படுத்தக் கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.


Tags : victims ,Corona ,interview ,Vijayabaskar , Corona, Vaccine, Minister Vijayabaskar, Interview
× RELATED கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் இல்லை