×

இந்தியாவின் பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் பாதிப்பு ஏற்பட இந்திய ராணுவம் அனுமதியளிக்காது: ராணுவ தளபதி நரவனே பேச்சு..!

டெல்லி: இந்தியாவின் பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் பாதிப்பு ஏற்பட இந்திய ராணுவம் அனுமதியளிக்காது என ராணுவ தளபதி நரவனே தெரிவித்துள்ளார். சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவ தளபதியாக, ஜெனரல் கே.எம்.கரியப்பா பொறுப்பேற்றார். இதனை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 15 ஆம் தேதி இந்திய ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ராணுவ வீரர்கள் மற்றும் போரில் வீர மரணமடைந்த தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, இன்று இந்திய ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது. ராணுவ தினத்தையொட்டி இந்திய ராணுவத்தினருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். டெல்லியில் இந்திய ராணுவத்தின் பெருமையை பறைசாற்றும் விதமாக ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் ராணுவ தளபதி முகுந்த் நரவனே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களின் தியாகம் ஒருநாளும் வீண் போகாது.

கல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் தியாகம் வீண் போகாது. இந்தியாவின் பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் பாதிப்பு ஏற்பட இந்திய ராணுவம் அனுமதியளிக்காது. நாம் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சித்து வருகிறோம். ஆனால் நமது பொறுமையை சோதித்துப் பார்க்க நினைத்தால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்.

 பாகிஸ்தான் அரசு பயங்கரவாதிகளுக்கு தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதல்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளன. பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ சுமார் 300 முதல் 400 பயங்கரவாதிகள் வரை தயார் நிலையில் உள்ளனர். அந்த நாட்டின் மோசமான திட்டங்களுக்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்..

மேலும், கடந்த ஒரு ஆண்டில் எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் 200க்கும் அதிகமான பயங்கரவாத தாக்குதல்களை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. இந்திய ராணுவத்தை நவீனமயமாக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு இந்திய ராணுவம் சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ராணுவ உபகரணங்களை வாங்கியுள்ளது. மேலும் மூலதன கொள்முதல் அடிப்படையில் கடந்த ஆண்டில் 13,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Indian Army ,Naravane ,India , India, Sovereignty, Army, Army Commander, Naravane, Speech
× RELATED இந்திய ராணுவத்துக்கு 118 மார்க் 1ஏ ரக...