பட்டுக்கோட்டை அருகே சோகம் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த அண்ணன், தம்பி பலி

பட்டுக்கோட்டை: தஞ்சை மாவட்டம் மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்யாணஓடை கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (38). இவரது மனைவி முத்துலெட்சுமி (21). இவர்களுக்கு தினேஷ் (12), கவுதம் (10) என்ற 2 மகன்கள். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் காலை அதேபகுதியில் விளையாடிவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக மறவக்காடு வாய்க்கால் வழியாக நடந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தினேஷ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதைப் பார்த்த அவரது தம்பி கவுதம் ஓடி சென்று அண்ணனை ஆவலுடன் பிடித்துள்ளார்.

அப்போது கவுதம் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சென்ற பெற்றோர், 2 மகன்களின் உடல்களையும் பார்த்து கதறி அழுதனர். மதுக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மின்கம்பி அறுந்தவுடன் மின்சார வாரியத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். மின்சாரத்தை துண்டிக்காமல் அலட்சியமாக ஊழியர்கள் இருந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு மின்சார வாரியத்தின் அலட்சியமே காரணம் என அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

மூதாட்டி பரிதாப சாவு

பேராவூரணி அருகே உள்ள களத்தூர் கிராமத்தை சேர்ந்த குமரேசன் மனைவி பக்கிரியம்மாள்(68). நேற்று முன்தினம் காலை களத்தூர் பட்டவர் சுவாமி கோயில் அருகே ஆடு மேய்க்க சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் தேடிச்சென்ற போது கோயில் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து பக்கிரியம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரது மகன் சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் திருச்சிற்றம்பலம் போலீசார் பக்கிரியம்மாள் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>