அதிமுக கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு: அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

தண்டையார்பேட்டை: சென்னை ராயபுரம் தொகுதி சட்டமன்ற அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில், அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று, பொதுமக்களுக்கு பொங்கல், இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஜாதி, மதம் பாராமல் அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகை பொங்கல் திருநாள். இந்த திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட தமிழக அரசு அறிவித்த 2,500 ரூபாயுடன், பொங்கல் தொகுப்பு வழங்கியதற்கு தமிழக மக்கள் அனைவருமே மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

சசிகலாவை உயர்த்தி பேசினாலும் வால்பிடித்து பேசினாலும் ஒருபோதும் ஏற்று கொள்ள முடியாது. ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வைத்து கொண்டு செயல்படுவதை ஒருபோதும் ஏற்று கொள்ள முடியாது, அவர்கள் மீது  கட்சி உரிய நடவடிக்கை எடுக்கும். அதிமுகவுக்கும் அமமுகவுக்கும் இருக்கும் பிரச்னை அண்ணன், தம்பி பிரச்னை. அவற்றை உட்கார்ந்து பேசி தீர்த்து கொள்வோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து கூறியிருக்கிறார். தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட்டவரும், இரட்டை இலை சின்னத்தை முடக்க நினைத்த கட்சியும் ஒரு நாளும் அதிமுகவுடன் சேர முடியாது, அண்ணன் தம்பியாக இருக்க முடியாது. அதிமுகவை பொறுத்தவரை அறிவிக்காத வாக்குறுதிகளைகூட செய்து வருகிறது.

தேர்தல்  சமயத்தில் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் கலந்தாலோசித்து முடிவு அறிவிக்கப்படும். அதிமுகவுக்கும், பாமகவுக்கும் இடையே எந்தவித சிக்கலும் இல்லை. எதிர்கட்சியில்  இருக்கும் சில கட்சிகள் தேர்தல் சமயத்தில் அதிமுகவுக்கு வரவாய்ப்பு உள்ளது. இவ்வாறு ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Related Stories: