நாடு முழுவதும் தொற்று பாதித்த நிலையில் நாளை முதல் கொரோனா தடுப்பூசி: மதுரையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

சென்னை: தமிழகத்தில் முதல் கட்டமாக 5.36 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நாளை தொடங்குகிறது. மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதை தொடங்கி வைக்கிறார். கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, இந்த 2 தடுப்பூசிகளும் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 5.36 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மற்றும் 20 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி கடந்த வாரம் தமிழகம் வந்தது. இதனைத்தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த தடுப்பூசி பிரித்து அனுப்பப்பட்டது. தற்போது, அனைத்து மாவட்டங்களில் உள்ள தடுப்பூசி சேமிப்பு கிடங்குகிகளில் இது சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்கள பணியாளர்களை கணக்கெடுக்கும் பணியும் நடைபெற்றது. இதில், முதல்கட்டமாக சுகாதாரப்பணியாளர்கள் 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்க முடிவு செய்யப்பட்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில், 4.50 லட்சம் பேர் மட்டும் தான் கோவிட் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். இதன்படி, இவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணியை நாளை மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி அளிக்கும் மையத்தில் முதல்வர் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணியை தொடங்கி வைக்கிறார். இதில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

தமிழகம் முழுவதும் 2,850 இடங்களில் கொரோனா தடுப்பூசி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில், முதல்கட்டமாக 160 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நாளை தொடங்குகிறது. சென்னையில் ராஜிவ்காந்தி, ஓமந்தூரார், கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, ராயப்பேட்டை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் எழும்பூர் மகப்பேரு மருத்துவமனை ஆகிய அரசு மருத்துவமனைகளிலும் மாநகராட்சிக்கு உட்பட்ட போரூர், ஈஞ்சம்பாக்கம், மாதவரம், திருவெற்றியூர் ஆகிய இடங்களில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடும் பணி நாளை நடைபெறுகிறது.

இதேபோன்று, ஒவ்வொரு சுகாதார மாவட்டங்களிலும் இரண்டு முதல் நான்கு இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. முக்கியமாக கோவையில் 4, மதுரையில் 5, திருச்சியில் 5, சேலத்தில் 7 இடங்களில் நாளை தடுப்பூசி போடப்படும். இதற்காக அனைத்து இடங்களிலும் வசதிகள் தயார்நிலையில் உள்ளது.

பிரதமர் அலுவலகம் அறிக்கை

தடுப்பூசி விநியோகம் குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘தேசிய அளவிலான கொரோனா தடுப்பூசி திட்டத்தை நாளை காலை 10.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். நாடு முழுவதும் மேற்கொள்ளப்படுவதால், இது உலகின் மிகப் பெரிய தடுப்பூசி திட்டமாக இருக்கும்.  இந்த தொடக்கத்தின் போது, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 3,006 இடங்கள் காணொலி காட்சி மூலம் இணைக்கப்படும். தொடக்க நாளில், ஒவ்வொரு இடத்திலும் சுமார் 100 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்படும்.

முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த தடுப்பூசி திட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை (ஐசிடிஎஸ்) ஊழியர்கள் உட்பட அரசு மற்றும் தனியார் துறை சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும். இந்த தடுப்பூசி திட்டம், மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் உருவாக்கிய ‘கோ-வின்’ என்ற ஆன்லைன் டிஜிட்டல் தளத்தை பயன்படுத்தும். கோவி-19 தொற்று, தடுப்பூசி அறிமுகம் மற்றும் கோ-வின் மென்பொருள் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க 24 மணி நேர உதவி மையம் - 1075 ஏற்படுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மதுரை அரசு மருத்துவமனைகளில் நாளை நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாம்களை காலை 10.30 மணிக்கு பிரதமர் மோடி காணொலி முறையில் பங்கேற்று தொடக்கி வைக்கிறார். இதற்கான முன்னேற்பாடுகளை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.

முக்கிய நிபந்தனைகள்

* 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட அனுமதிக்கப்படும்.

* கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி கொடுக்கக்கூடாது.

* 14 நாட்கள் இடைவெளி அடிப்படையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நபர்களை பிரிக்க வேண்டும்.

* முதல் ேடாஸில் எந்த தடுப்பூசி வழங்கப்பட்டதோ, அதே மருந்தைதான் இரண்டாவது டோஸாகவும் வழங்க வேண்டும். தடுப்பூசியை மாற்றி போடக்கூடாது.

* ரத்தப்போக்கு அல்லது ரத்தம் உறைதல் கோளாறு உள்ளவர்களுக்கு தடுப்பூசியை எச்சரிக்கையுடன் வழங்க வேண்டும்.

* நோய்த்தொற்றின் (செரோ-பாசிட்டிவ்) அல்லது ஆர்டி-பி.சி.ஆர் பாசிடிவ் கொண்டவர்கள், நாட்பட்ட நோய்கள் (இருதய, நரம்பியல், நுரையீரல், வளர்சிதை மாற்றம், சிறுநீரக பாதிப்பு), நோயெதிர்ப்பு பாதுகாப்பு, எச்.ஐ.வி பாதிப்பு கொண்டவர்களை அதிக கவனத்தில் கொண்டு தடுப்பூசி கொடுக்கலாம்.

* கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு என்று பிரத்யேகமான தனித்தனி வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.

Related Stories: