மும்பையில் தனியார் நிறுவனங்களில் சிசிடிவி கேமரா பொருத்த மேலும் 2 மாதம் அவகாசம்

மும்பை: மும்பையில் தனியார் நிறுவனங்களில் சிசிடிவி கேமரா பொருத்துவதற்கான  காலஅவகாசம் 7ம் தேதி முடிவடைந்த நிலையில் மேலும் 2 மாதங்கள் நீடித்து  போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.  மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர்  26ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 166 பேர் கொல்லப்பட்டனர்.  இந்த சம்பவத்தை தொடர்ந்து முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்  பொருத்தும் திட்டம் மும்பையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்களில் கேமரா பொருத்தும் திட்டம் கடந்த ஆண்டு நவம்பரில் அமல்படுத்தப்பட்டது.  இதன்படி ஓட்டல்கள், நகைக்கடைகள், விருந்தினர் மாளிகை, சூப்பர்மார்க்கெட்,  கல்வி நிறுவனங்கள், ஷாப்பிங் மால்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த  மும்பை போலீசார் உத்தரவிட்டனர்.

 இதற்கான காலஅளவு கடந்த 7ம் தேதியுடன்  நிறைவடைந்தது. பெரும்பாலானோர் இன்னும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்ததால்   தனியார் நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கான  காலஅவகாசத்தை மேலும் 2 மாதங்கள் நீடித்து மும்பை காவல்துறை செய்தி  தொடர்பாளர் சைதன்யா புரோலு வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறப்பட்டுள்ளதாவது: தனியார் நிறுவனங்களில் சிசிடிவி கேமரா பொருத்தும் திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எனினும் இந்த திட்டத்தை வலுக்கட்டாயமாக அமல்படுத்த விரும்பவில்லை. இதனால் கேமரா பொருத்துவதற்கான காலஅவகாசத்தை மேலும் 2 மாதங்கள் நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது. நகர் முழுவதும் 5000 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை 1510 அபாயமான இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>