×

சென்னையில் போகி கொண்டாட்டம் பழைய பொருட்களை எரித்ததால் புகைமூட்டம்: நோயாளிகள், முதியவர்கள் பாதிப்பு; 2.6 டன் டயர்கள் பறிமுதல்

சென்னை: சென்னையில் போகி பண்டிகையை நேற்று மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். அப்போது, பழைய பொருட்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் புகைமூட்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக நோயாளிகள், முதியவர்கள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினருக்கு பாதிப்பு ஏற்பட்டது. தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையின் தொடக்கமாக போகி பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். அப்போது பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதன் அடிப்படையில் பழைய பொருட்களை தீயிட்டு எரித்து வருகின்றனர். அதாவது போகியன்று விடியற்காலையில் எழுந்து பழைய பாய், உபயோகமற்ற பொருட்கள், உடைந்த பானைகள் போன்றவற்றை வீட்டருகில் தீயிட்டுக் கொளுத்துவது வழக்கம்.

இதைத்தொடர்ந்து, பொங்கல் அன்று புதுப்பானை, புத்தரிசி என பல புதியவைகளோடு தை மாதத்தை பொங்கலிட்டு வரவேற்பார்கள். இதற்கு மற்றொரு காரணமாக மனதில் எக்கச்சக்கமான கவலைகளையும், வெறுப்பு, பொறாமை என பல தீய எண்ணங்களையும் வைத்துக்கொண்டு மனிதர்கள் வாழ்கிறார்கள். இவை அனைத்தையும் மனதில் இருந்து எரித்துவிட்டு பொங்கல் முதல் புதிய மனிதனாக வாழவேண்டும் என்ற தத்துவத்தையும் போகி உணர்த்துகிறது. ஆனால், இன்று பெரும்பாலானோர் போகி பண்டிகையை கொண்டாடுவது இல்லை. மேலும் கொண்டாடுபவர்களில் சிலரும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வகையிலான பொருட்களை எரிக்கின்றனர்.

குறிப்பாக பிளாஸ்டிக் பொருட்கள், பழைய டயர்கள் போன்ற சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பொருட்களை எரிக்கின்றனர். இதனால் கடுமையான புகைமூட்டம் ஏற்படுவதுடன் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. கடந்த ஆண்டு போகி கொண்டாட்டத்தின்போது எரிக்கப்பட்ட பழைய பொருட்களால் சென்னையில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டது. இதனால் விமான சேவையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதன்படி இந்த ஆண்டும் சுற்றுச்சூழல் மாசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை மாநகரம் மற்றும் அனைத்து மாவட்ட தலைமையிடங்களிலும் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. எனவே சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைக்கும் பொருட்களை எரிக்க வேண்டாம் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்து இருந்தது.

ஆனால், இதை பலரும் கேட்கவில்லை. சென்னையில் ஆங்காங்கு இரவு முதலே பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப்கள், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரித்து போகிப்பண்டிகையை கொண்டாடினர். குறிப்பாக சிறுவர்கள் ஆங்காங்கு கூடி பழைய பொருட்களை எரித்தனர். இதனால் சென்னையில் புகைமூட்டம் ஏறப்பட்டது. குறிப்பாக தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா, கலங்கரை விளக்கம், கோயம்பேடு, அடையாறு, மயிலாப்பூர், தி.நகர் என பல்வேறு இடங்களில் புகைமூட்டம் ஏற்பட்டது.

இதனால் முக்கிய சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மிகவும் மெதுவாக வாகனங்கள் இயக்கப்பட்டன. இதேபோல் வீடுகளுக்குள்ளும் புகை சென்றதால், நோயாளிகள், குழந்தைகள், முதியவர்கள் பாதிக்கப்பட்டனர். ஒருசில இடங்களில் வாகன ஓட்டிகள் கண் எரிச்சலை சந்தித்தனர். நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரத்தில் காற்று தரக்குறியீடு 113 ஆகவும், அம்பத்தூரில் 241 ஆகவும் இருந்தது. இதன்படி பார்த்தால் ராயபுரத்தில் காற்று தரக்குறியீடு மிகவும் மோசமாக இருந்துள்ளது. இதை தவிர்த்து டயர்களை எரிப்பதை கண்காணிக்க 32 குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இவர்களில் நடத்திய சோதனையில் 2.6 டன் டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கடந்த ஆண்டு விட இந்தாண்டு காற்று மாசு குறைவாக இருந்ததாகவும், புகை மண்டலம் அதிக அளவு தென்படவில்லை என்றும் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

* 17 விமானங்கள் தாமதம்
போகி பண்டிகையை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் நேற்று அதிகாலை தங்களது வீடுகளின் முன்பு பழைய பொருட்களை தீயிட்டு எரித்தனர். இதில் ஏற்பட்ட புகை மண்டலம் சென்னை விமான நிலைய ஓடுபாதை மைதானத்தை சூழ்ந்தது. அதோடு பனிப்பொழிவும் காணப்பட்டது. இதனால் ஓடுபாதை தெளிவாக தெரியவில்லை. ஆனாலும் காலை 7.30 மணி வரை விமான சேவையில் எந்தவித பாதிப்பும் இல்லை. இருப்பினும் விமானங்கள் தரை இறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. காலை 7.30 மணிக்கு மேல் சென்னையில் தரையிறங்க வேண்டிய பெங்களூரு, கொல்கத்தா, நாக்பூர், அகமதாபாத், ஐதராபாத், டெல்லி உள்ளிட்ட 9 விமானங்கள், சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தது. இதேபோல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய பெங்களூர், அகமதாபாத், மும்பை, புனே, கொச்சி, பாட்னா உள்ளிட்ட 8 விமானங்கள் தாமதமாக புறப்பட்டது. மொத்தம் 17 விமானங்கள் தாமதத்தால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Tags : Boogie Celebration ,elderly , Boogie Celebration in Chennai Smoke from burning old items: Patients, the elderly affected; Seizure of 2.6 tonne tires
× RELATED கோவை இ.எஸ்.ஐ-யில் மீண்டும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடிவு