×

மகாராஷ்டிரா, பீகார் பாணி அரசியல் தோல்வி எதிரொலி தமிழகத்தில் துணை முதல்வர் பதவி கேட்க பாஜ திட்டம்: கூட்டணியை முடிவு செய்ய முடியாமல் அதிமுக திணறல்

சென்னை: மகாராஷ்டிரா, பீகார் பாணி அரசியல் தோல்வி அடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் துணை முதல்வர் பதவியை கேட்க பாஜ திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமக, பாஜ, தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணி குறித்து தங்களின் இறுதியான நிலைப்பாட்டை தெரிவிக்காமல் கண்ணாமூச்சி காட்டி வருகிறது. அதில் பாஜ கட்சி ஒருபடி மேலே போய் ‘சென்ட்ரல் பவர்’ மூலம் பாலிடிக்ஸ் செய்து வருகிறது. அந்த அதிகாரத்தை பயன்படுத்தி அதிக சீட்டை அதிமுகவிடம் இருந்து பெறுவதில் உறுதியாக உள்ளது.

இதற்காக மறைமுக வேலைகளில் டெல்லியில் உள்ள பாஜ தலைவர்கள் இறங்கி உள்ளனர். அதன் ஒருகட்டமாக, அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, நடிகர் ரஜினிகாந்தை வைத்து புதிய கட்சி தொடங்க வைத்து, அந்த கட்சியில் கூட்டணி அமைத்து தமிழக தேர்தலை சந்திக்க திட்டம் போட்டது. ஆனால், கடைசி நேரத்தில் ரஜினி, அரசியலில் இருந்து விலகி விட்டதாக அறிவித்து விட்டார். இந்த அறிவிப்பு, பாஜ தலைவர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தற்போது, அதிமுகவுடன்தான் பாஜ கூட்டணி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால், அதிமுக கூட்டணியில் அதிக இடங்களுடன், கூடுதலாக துணை முதல்வர் பதவியையும் கேட்டு தற்போது நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. காரணம், மகாராஷ்டிராவில் பாஜவும், சிவசேனாவும் சம பலத்துடன் போட்டியிட்டது. இதில் பாஜ அதிக இடங்களில் வெற்றிபெற்றாலும், சிவசேனா முதல்வர் பதவியை கேட்டு நெருக்கடி கொடுத்தது. இதற்கு பாஜ உடன்படாததால், சிவசேனாவும், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது. இதனால் மகாராஷ்டிராவில் பாஜ தனித்து விடப்பட்டு விட்டது.

அதேபோன்று, சமீபத்தில் நடந்து முடிந்த பீகார் தேர்தலில் பாஜவும், ஐக்கிய ஜனதாதளமும் சம பலத்துடன் போட்டியிட்டது. இதில் பாஜ அதிக இடங்களில் வெற்றிபெற்றது. ஆனால், ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ்குமாரே முதல்வராக பதவியேற்றார். இந்த இரண்டு மாநிலங்களிலும், முதல்வர் பதவி கிடைக்காதது டெல்லி பாஜ தலைவர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. அதனால் தமிழகத்தில் தேர்தலுக்கு முன்பே, தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய பதவிகளை கேட்டு உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று பாஜ தலைமை நினைக்கிறது.

அதன்படியே, தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிக சீட் மற்றும் துணை முதல்வர் பதவி உள்ளிட்ட சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. இதை வலியுறுத்தியே இன்று, சென்னை வரும் பாஜ தலைவர் ஜே.பி.நட்டாவும் தமிழக பாஜ தலைவர்களிடம் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், 20 சதவீத இடஒதுக்கீட்டை அங்கீகரித்தால் மட்டுமே அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேசுவோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறி வருகிறார். பாமக சார்பிலும், மறைமுகமாக துணை முதல்வர் பதவி கேட்கப்பட்டு வருகிறது.

அதேபோன்று, தேமுதிக சார்பிலும், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு இணையான சீட் வேண்டும் என்று நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி, கூட்டணி கட்சிகளின் பல்வேறு நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் அதிமுக திணறி வருகிறது. காரணம் துணை முதல்வராக அதிமுகவை சேர்ந்த ஓ.பி.எஸ் இருந்து வருகிறார். எனவே, இதற்கு அதிமுக சம்மதிக்குமா என்பது நூறு சதவீதம் கேள்விக்குறியாகவே உள்ளது. இதனால், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளும் தாமதமாகி வருகிறது. ஆனாலும், கூட்டணி கட்சிகளை சமாளித்து எப்படியாவது நாடாளுமன்ற தேர்தலின்போது ஏற்பட்ட கூட்டணியே வருகிற சட்டமன்ற தேர்தலிலும் தொடர வேண்டும் என்று அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Maharashtra ,Bihar ,Deputy Chief Minister post ,BJP ,AIADMK ,Tamil Nadu , Maharashtra, Bihar-style political defeat echoes BJP's plan to ask for Deputy CM post in Tamil Nadu: AIADMK unable to end alliance
× RELATED ராணுவ வீரர்கள் சென்ற ரயில் தடம் புரண்டது: பீகாரில் பரபரப்பு