எதற்கெடுத்தாலும் அவசர சட்டம் இயற்றும் பாஜ அரசு ஜல்லிக்கட்டுக்கு ஏன் அவசர சட்டம் இயற்றவில்லை: காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டுமென அன்றைய மத்திய பாஜ அரசு நினைத்திருந்தால் நாடாளுமன்றத்தில் மிருகவதைத் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருக்க முடியும். இல்லையெனில் எதற்கெடுத்தாலும் அவசரச் சட்டம் இயற்றுகிற பாஜ அரசு, தமிழக மக்களின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற்றுள்ள ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கலாம். இதை அன்றைய பாஜ அரசு ஏன் செய்யவில்லை என்பதற்குக் காங்கிரஸ் கட்சியை இன்று விமர்சனம் செய்கிறவர்கள் பதில் கூற முடியுமா?. இத்தகைய அவசரச் சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அன்று நாடாளுமன்றத்தில் 50 உறுப்பினர்களைப் பெற்றிருந்த அதிமுக எந்த அழுத்தத்தையும் கொடுக்காதது ஏன்?.

இந்த போக்கை எதிர்த்துத் தான் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக 2017 ஜனவரி 8ம் தேதி முதல் 23ம் தேதி வரை 15 நாட்கள் சென்னை மெரினா கடற்பரப்பில் 20 லட்சம் மக்கள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். மெரினா புரட்சியை எதிர்கொள்ள முடியாத அதிமுக அரசு இறுதியாக அவசரச் சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்தது. எனவே, மத்திய பாஜ அரசு ஜல்லிக்கட்டு நடத்த முட்டுக்கட்டை போட்டதை மூடி மறைத்துவிட்டு காங்கிரஸ் மீது பழிபோடுவதை நிறுத்திக் கொள்வது நல்லது. தமிழர்களின் வீர விளையாட்டை நேரில் காண வரும் ராகுல்காந்தியை வரவேற்க மதுரை விமான நிலையத்தில் பெருந்திரளாக அணி திரள்வோம்.

Related Stories: