திமுக ஆட்சி அமைந்தவுடன் விவசாய கடன், நகைக் கடன்களை ரத்து செய்வோம்: சமத்துவ பொங்கல் விழாவில் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: திமுக ஆட்சி அமைந்த உடன் விவசாய கடன், நகை கடன்களை ரத்து செய்வோம் என்று சமத்துவ பொங்கல் விழாவில் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நத்தம் ஊராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இப்பொங்கல் விழாவில் கலந்து கொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழர் திருநாள், பொங்கல் திருநாள், உழவர்கள் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டிய திருநாள். தலைவர் கலைஞரால் அறிவிக்கப்பட்ட தை 1 தமிழர் புத்தாண்டாகக் கொண்டாடுகிற நாள்.

தமிழ்நாட்டில் இருக்கும் தமிழ் மக்கள் மட்டுமல்ல, உலகெங்கும் இருக்கும் தமிழர்கள் அத்தனை பேரும் இந்த விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். தலைவர் கலைஞர் முதல்வராக இருந்த நேரத்தில் தான் இதை, சமத்துவப் பொங்கலாகக் கொண்டாட வேண்டும் என்று நமக்கெல்லாம் அறிவுரையாக எடுத்துச் சொன்னார். அதைத் தான் நாம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வருகிற போது உறுதியோடு சொல்லுகிறேன் ‘நீட்’ தேர்வை உடனடியாக தமிழகத்திலிருந்து விலக்குவதற்கான எல்லா முயற்சிகளிலும் கடைசி வரையில், அதில் உறுதியாக இருந்து அதை நிறைவேற்றும் முயற்சியில் நான் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதற்குத் தயாராக இருக்கக்கூடியவன் தான் இந்த ஸ்டாலின் என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறேன்.

விவசாயக் கடனை ரத்து செய்யுங்கள் என்று விவசாயப் பெருங்குடி மக்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உயர் நீதிமன்றமும் உத்தரவு போட்டது. அதனை நிறைவேற்ற முடியாத இந்த அரசு, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றத்தில் போய் தடை கேட்டது. இப்போது நான் சொல்கிறேன். இன்னும் 4 மாதங்களில் ஆட்சிக்கு வரப் போகிறோம். அப்போது தலைவர் கலைஞர் வழிநின்று, விவசாயிகள் கடனை ரத்து செய்வதற்கான உத்தரவைத் திமுக அரசு போடும் என்று நான் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

வறுமையின் காரணமாக தங்களது வீட்டில் இருக்கும் நகைகளை அடமானம் வைத்து அதற்கு வட்டிக்கு வட்டி கட்டும் சூழ்நிலை நிலவுகிறது. அதற்காக 5 சவரன் வரையிலான நகைக்கடனை ரத்து செய்வோம் என்று கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது சொன்னோம். இப்போதும் சொல்கிறோம். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வர இருக்கிறோம். எப்படி விவசாயிகள் கடனை ரத்து செய்வோம் என்று சொன்னோமே அதுபோல இந்த ஐந்து சவரன் நகைக்கடன் பிரச்னைக்கும் தீர்வு காணப்படும் என்று உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வேளாண் மசோதா விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தில் இப்போது என்ன தீர்ப்பு வந்திருக்கிறது? அந்தத் தீர்ப்பைப் பொறுத்த வரையில் நமக்குத் திருப்தி இல்லை. அது வேறு. அந்த வேளாண் சட்டங்களைத் திரும்ப வருகிற வரையில் தொடர்ந்து போராடுவோம் என்று விவசாயிகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதனை ஆதரிக்கிறோம். வரவேற்கிறோம். உங்களோடு இணைந்து இறுதிவரை வாதாட, போராட நாங்கள் காத்திருக்கிறோம் என்பதை உறுதியோடு சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

உச்ச நீதிமன்றம் ஒரு குழுவும் அமைத்திருக்கிறார்கள். அதில் யார் யார் இடம்பெற்று இருக்கிறார்கள்? அவர்களுக்கு வேண்டியவர்களை, அவர்களுக்குச் சாதகமானவர்களை நியமித்து இருக்கிறார்கள். அதனால் நியாயம் கிடைக்காது, நீதி கிடைக்காது என்று நாங்கள் மட்டுமல்ல, போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளும் கருதுகிறார்கள். எனவே இதற்கெல்லாம் ஒரு முடிவு கிடைக்க வேண்டுமென்றால் அதற்கு வழி எதிர்வரும் தேர்தல். தை பிறந்தால் வழி பிறக்கும். ஒவ்வொரு ஆண்டும் தை பிறக்கிறது ஆனால் இந்த ஆண்டு தை பிறக்கும் போது வழி பிறந்தே தீர வேண்டும். நீங்கள் ரெடி ஆகி விட்டீர்கள் இல்லையா? நாங்க ரெடி நீங்க ரெடியா?. இவ்வாறு அவர் பேசினார். வறுமையால் நகைகளை அடமானம் வைத்து அதற்கு வட்டிக்கு வட்டி கட்டும் சூழ்நிலை நிலவுகிறது. அதற்காக 5 சவரன் வரையிலான நகைக்கடனை ரத்து செய்வோம்.

Related Stories: