×

கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மது அருந்தக் கூடாது: அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

திருச்சி: கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மது அருந்தக்கூடாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வரும் 16ம் தேதி முதல் போடப்பட உள்ளது. இதற்காக அனைத்து மாவட்டங்களுக்கும் தடுப்பூசி அனுப்பும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அதன்படி, நேற்று திருச்சியிலிருந்து 9 சுகாதார மாவட்டங்களுக்கு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டது. இதை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, விஜயபாஸ்கர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி: இத்திட்டத்தை 16ம் தேதி மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தடுப்பூசி போட்டு தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் 5,36,500 கோவிட் தடுப்பூசி உள்ளது. முதல் கட்டமாக 6 லட்சம் தடுப்பூசிகள் போடுவதற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 100பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போட்ட உடன் எதிர்ப்பு சக்தி வந்துவிட்டது என பொதுமக்கள் நினைத்துவிட வேண்டாம். முதல் டோஸ் போட்ட பின்பு 28வது நாளில் 2வது டோஸ் போட வேண்டும். 42வது நாளுக்கு பிறகு நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

மது உடல் நலத்திற்கு கேடானது. எனவே கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மது அருந்தக்கூடாது. எவ்வித அச்சமும் இன்றி அனைவரும் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கோவிட் தடுப்பூசி போடுபவர்களை தனிமைப்படுத்த வேண்டாம். தமிழ்நாட்டில் 10 சதவீதம் இருந்த பாஸிட்டிவ், தற்போது 1.2 சதவீதம் குறைந்து உள்ளது. தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம். சமூக வலைதளங்களில் தவறாக பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : vaccinators ,Corona ,Vijayabaskar , Corona vaccinators should not drink alcohol: Minister Vijayabaskar warns
× RELATED கொரோனா தடுப்பூசி போடுபவர்களை...