×

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் நாளை 9ம் கட்ட பேச்சுவார்த்தை

புதுடெல்லி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு ஏற்கனவே 8 கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது. இதில், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை எதிர்த்தும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதை நேற்று முன்தினம் விசாரித்த உச்ச நீதிமன்றம், 3 வேளாண் சட்டங்களையும் அமல்படுத்த இடைக்கால தடை விதித்தது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, 4 பேர் கொண்ட குழுவையும் அமைத்தது. இந்நிலையில், நேற்றும் 50வது நாளாக விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்தது. போகி பண்டிகையான நேற்று, போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் புதிய வேளாண் சட்ட நகல்களை எரித்து, சட்டங்களை திரும்ப பெறக்கோரி முழக்கமிட்டனர். வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடைபெறும் எனவும் விவசாயிகள் அறிவித்துள்ளனர். இதனிடையே, விவசாயிகளின் பிரச்னை தொடர்பாக நாளை மத்திய அரசு 9வது கட்டமாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இதிலும், முடிவு ஏற்படாமல் இழுபறி நீடிக்கும் வாய்ப்பை அதிகமாக இருப்பதாக கருதப்படுகிறது.

* ‘அரியானாவில் ஆட்சி கவிழாது’
அரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜ - ஜனநாயக் ஜனதா கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. புதிய வேளாண் சட்டங்களுக்கு துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதன் காரணமாக, மாநிலத்தில் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது. பரபரப்பான இந்த சூழலில், துணை முதல்வர்  துஷ்யந்த் சவுாலா நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார். இதில், கட்டாரும் பங்கேற்றார். பின்னர், கட்டாரும் துஷ்யந்த்தும் கூட்டாக அளித்த பேட்டியில், ‘‘அரியானா அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. கூட்டணி அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்யும்,’’ என்றனர்.

Tags : phase ,talks ,Delhi , 9th round of talks with protesting farmers in Delhi tomorrow
× RELATED தோல்வியை நோக்கி நகர்கிறது டெல்லி...