இலங்கை - இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் இன்று ஆரம்பம்

காலே: இலங்கை-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி காலே நகரில் இன்று தொடங்குகிறது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் இன்று தொடங்கி ஜன.18ம் தேதி வரையிலும், 2வது டெஸ்ட் ஜன.22 முதல் ஜன.26ம் தேதி வரையிலும் நடக்க உள்ளன. கொரோனா பீதி காரணமாக 2 போட்டிகளும் காலே சர்வதேச மைதானத்தில் மட்டுமே நடக்கின்றன. போட்டிக்கு முன்பு 14 நாட்கள்  தனிமைப்படுத்துதல் இல்லாவிட்டாலும் 2 கட்ட கொரோனா சோதனைக்கு பிறகுதான் வீரர்கள் இன்று களம் காண உள்ளனர்.

இந்த 2 அணிகளும் இதுவரை 34 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 15 போட்டிகளில் இங்கிலாந்தும், 8 போட்டிகளில் இலங்கையும் வென்றுள்ளன. எஞ்சிய 11 போட்டிகள் டிரா ஆகின. கடைசியாக மோதிய 5 டெஸ்ட்களில் 3ல் இங்கிலாந்து வென்றுள்ளது. மீதி 2 போட்டிகள் (மார்ச், 2020) கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்தாகின. இங்கிலாந்து அணி கடந்த ஆண்டு தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரை 3-0, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2-1, பாகிஸ்தானுக்கு எதிராக 1-0 என்ற கணக்கில் தொடர்ந்து வென்றுள்ளது. தொடர் வெற்றி தந்த உற்சாகத்துடன் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்று களம் காண்கிறது.

அந்த அணியில் ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், சாம் கரண், ஸ்டூவர்ட் பிராடு ஆகியோர் கலக்க காத்திருக்கின்றனர்.அதே போல் கேப்டன் திமத் கருணரத்னா தலைமையிலான  இலங்கை அணியும் புத்தாண்டு வெற்றிக்காக வரிந்துகட்டுகிறது. டிசம்பர் மாதம் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0-2 என்ற கணக்கில் இலங்கை ஒயிட்வாஷ் ஆனது. அதனால் உள்ளூரில் நடக்கும் புத்தாண்டின் முதல் போட்டியை வெற்றியுடன்  தொடங்க நினைக்கிறது.  

விக்கெட் கீப்பர்கள் தினேஷ் சண்டிமல், குசால் பெரைரா, குசால் மெண்டிஸ், டிக்வெல்லா ஆகியோர் பேட்டிங்கிலும் அசத்துவார்கள் என்பதால், இவர்களில் ஒருவர் தவிர மற்றவர்கள் பேட்ஸ்மேன்களாக இடம் பெறும் வாய்ப்பு அதிகம். விஸ்வா பெர்னாண்டோ, தனஞ்செயா டி சில்வா, தசுன் ஷனகா ஆகியோரும் பந்துவீச்சில் அசத்த இருக்கிறார்கள். ஆனால் அதற்கு இங்கிலாந்து வாய்ப்பு தர வேண்டும். அடுத்து இந்தியாவுடன் நீண்ட தொடரில் இங்கிலாந்து விளையாட உள்ளது. அதற்கு இலங்கையுடனான இத்தொடர் நல்ல பயிற்சியாக அமையும்.

Related Stories:

>