நாட்டு நடப்பு தெரியாத கமல் : அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

தண்டையார்பேட்டை: சென்னை ராயபுரம் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு நேற்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இலவச மிதிவண்டிகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வேளாண் சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை விமர்சிக்கக்கூடாது. தீர்ப்பு குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்யும். வேளாண் சட்டம் குறித்து தமிழக முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். அதில், விவசாயிகளுக்கு பாதிப்பில்லை என தெளிவுபடுத்தி இருக்கிறார்.

அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். அதிமுக கூட்டணியில்தான் பாமக உள்ளது. கூட்டணி வேறு, கொள்கை வேறு. வன்னியர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பாக, ஜாதிவாரி கணக்கெடுப்பு முடித்து அரசுக்கு அறிக்கை வந்த பிறகுதான் முடிவு செய்யப்படும்.நாட்டு நடப்பு தெரியாமல் கமல்ஹாசன் பேசி வருகிறார். அவர் அன்றன்று நடைபெறும் செய்திகளை பார்க்காமல், டிவி நிகழ்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Related Stories: