×

இது பெண்களின் ஆட்டோ!

நன்றி குங்குமம் தோழி

சென்னையைப் பொறுத்தவரை ஆட்டோ டிரைவர்கள் என்றாலே அடாவடி பேர்வழிகள், சாலை விதிகளை மதிக்க மாட்டார்கள், மீட்டர் போட மாட்டார்கள் என்ற கண்ணோட்டம் மக்கள் மத்தியில் உள்ளது.  இப்படியான பிம்பத்தை சமீபகாலங்களாக உடைத்து எறிந்திருந்தது ‘மக்கள் ஆட்டோ’ (நம்ம ஆட்டோ) குழு.

 தற்போது இக்குழு MAuto என்னும் பெயரில் மொபைல் ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதில் சிறப்பே பெண்களுக்கென பிரத்யேகமான ஆப்ஷன்கள் கொண்ட WPride (Women Pride) தான். பெண்களால் பெண்களுக்காக மட்டுமே இயங்கும் பிரத்யேக ஆட்டோ... Mauto குழுவின் முதன்மை செயல் அதிகாரி (CEO) திருமதி. யாஸ்மின் ஜவஹர் இது குறித்து பேசத் துவங்கினார்.

‘‘2013ல மன்சூர் அலிகான் என்பவரும் அவருடைய நண்பர்களும் சேர்ந்துதான் நம்ம ஆட்டோவை ஆரம்பிச்சாங்க. அதுவரை சரியான மீட்டர் பயன்பாடு கொண்ட ஆட்டோக்களே கிடையாது. அதன் பிறகு தான் அரசாங்கமே ஆட்டோவில் மீட்டரை பயன்படுத்த வேண்டும் என்ற சட்டத்தை அமல் செய்தது. 2014ம் ஆண்டில் ஆட்டோக்களில் மானிட்டர்களை பொருத்தி பாட்டு, விளம்பரம் இதெல்லாம் ஒளிபரப்பாகிற மாதிரி  டிஜிட்டலா மாற்றி அமைத்தோம். அதே வருஷம் 100 பெண்களை ஆட்டோ டிரைவர்களாகவும் வேலைக்கு அமர்த்தினோம்.

இப்போ 2019ல், 330 பெண் ஆட்டோ டிரைவர்கள் எங்களிடம் வேலைப் பார்க்கிறார்கள். எனக்குத் தெரிஞ்சு இந்த எண்ணிக்கை குறைவு தான். ஆட்டோ டிரைவர் வேலைன்னாலே இன்னமும் ஒரு மரியாதைக்குரிய வேலையா பார்க்குற மனப்பான்மை மக்கள் மனதில் குறைவாகதான் இருக்கு.

அதிலும் பெண்களுக்கு சொல்லவே வேண்டாம். பெண்கள் தைரியமா ஆட்டோ டிரைவர் வேலைக்கு வந்தாலும் சுற்றி இருக்கவங்க அவங்கள சுதந்திரமா வேலை செய்ய விடுவதில்லை’’ என்றவர் பல பெண்கள் இந்த வேலையை கையில் எடுக்க தயங்க முக்கிய காரணம் நேரம்.

‘‘ஆட்டோ ஓட்டுவதில் இவர்கள் சந்திக்கும் அடுத்த சிக்கல் நேரம். பொதுவாக ஆட்டோ டிரைவர்களின் முக்கிய வேலை நேரம், காலை 10 மணிக்குள், அல்லது மாலை 6 மணிக்கு மேல். இந்த இரண்டு நேரமும் பெண்கள் சிரமமாக கருதுகிறார்கள். ஆனால் எங்களின் WPride கான்செப்ட்டில் அலுவலக நேரம் போலவே காலை 10 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை ஆட்டோ ஓட்டலாம். அதுலேயே இவர்கள் குறைந்தது ரூ.1000 துவங்கி ரூ.2000 வரை வருமானம் பார்க்கிறாங்க. எங்களுடைய குறிக்கோள் ஏழை மக்கள் தான். போதுமான படிப்பு இல்லாம எந்த வேலைக்கு போகுறதுனு தெரியாம கஷ்டப்படற பெண்களை தேர்வு செய்து அவங்களுக்கு ஆட்டோ ஓட்ட பயிற்சி கொடுத்து, ஆட்டோ வாங்குவதற்கு லோனும் ஏற்பாடு செய்து உதவுறோம்.

பெண்களின் நிலை சமுதாயத்தில் மாற ஆரம்பிச்சிருக்கு. நிறைய கல்லூரி பெண்கள் பார்ட் டைம், ஆட்டோ டிரைவர் வேலைக்கு விண்ணப்பம் கொடுத்திருக்காங்க. 2000க்கும் மேலான விண்ணப்பங்கள் வந்திருக்கு. நாங்க எங்களுடைய டிரைவர்களை பைலட்னுதான் சொல்வோம். எங்களுடைய 330 வுமன் பைலட்களில் சிலர் இரவு நேர பிக்கப் கூட எடுக்குறாங்க. இரவு நேர வேலைக்கு போகும் பெண்கள், ஏர்போர்ட் செல்லும் பெண்கள், அலுவலக வேலையை முடித்துவிட்டு இரவு தனியாக வரும் பெண்கள்... போன்றவர்களுக்கு எங்களின் வுமன் பைலட்கள் தான் துணை. எங்க வுமன் பைலட் குழுவில் திருநங்கைகளும் உள்ளனர். இன்னைக்கு வேலைவாய்ப்பில் முக்கியத் தேவை யாருக்கு என்று பார்த்தால் இவர்களுக்கு தான்.

கஷ்டப்பட்டு படிச்சிருந்தாலும் நல்ல வேலை அவங்களுக்குக் கிடைக்கிறதில்லை. அவங்களுக்கும்  வாழ்வாதாரம் ஏற்படுத்திக் கொடுக்கிறோம். சென்னை மட்டும் இல்லாமல், மதுரை, கோவை பகுதிகளிலும் வுமன் பைலட்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். சென்னை மாதிரி நகரத்திலேயே பெண்களை இந்த வேலைக்கு கொண்டு வருவது சிரமமாக இருக்கும் நிலையில் மதுரை, கோவை போன்ற நகரங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த மேலும் சிரமப்படவேண்டும்’’ என்னும் யாஸ்மின் பெண் கஸ்டமர்களுக்கும் ஆச்சர்யமான சலுகைகள் இருப்பதாகச் சொல்கிறார்.

 ‘‘MAuto ஆப்ல நீங்க WPride என்றுள்ளது. அதைக் கிளிக் செய்தா ஆண், பெண், திருநங்கை எந்த டிரைவர் வேணும் என்று பட்டியலிடும். உங்களுக்கு தேவையான டிரைவர்களை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். அடுத்து நாங்க கல்லூரி மாணவிகள், வேலைக்குப் போகும் பெண்களுக்கு போஸ்ட்பெயிட் (post paid) கட்டண வசதி கொடுத்திருக்கோம். அதாவது மற்ற டாக்ஸி அல்லது ஆட்டோ பயன்படுத்தும் போது நீங்கள் ஒரு தொகையை முன்கூட்டியே அக்கவுண்டில் ெசலுத்த வேண்டும்.

ஆனால் Mauto - Wpride வசதியைக் கொண்டு ஒரு மாதம் நீங்கள் பயணம் செய்த பிறகு அந்த மாதத்திற்கான உங்களின் ஆட்டோ கட்டணத்தை நீங்க செலுத்தலாம். அந்த பணம் அப்படியே டிரைவர்களுக்கு சென்றடைந்துவிடும். அதே போல SOS வசதி வெறும் பாதுகாப்புக்கு மட்டும் இல்லை, மருத்துவ பிரச்னைகளுக்கான உதவிகள் கிடைக்கும்படி செய்திருக்கோம். எங்களுடைய டிரைவர்கள் எல்லாருக்குமே அடிப்படை முதலுதவி பயிற்சியும் கொடுத்திருக்கோம். ஒருவேளை மருத்துவ பாதுகாப்பு தேவை என்றால், நீங்க SOS வசதியை பயன்படுத்தலாம். அதில் காவல் உதவி அல்லது மருத்துவ உதவி தேவையானதை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

மற்ற கார்ப்பரேட் ஆப்கள் போல் இல்லாமல் நீங்க நேரடியாவும் மக்கள் ஆட்டோ அலுவலகத்துக்கு தொலைபேசி மூலம் ஆட்டோ புக் செய்யலாம். காரணம் ஆட்டோ புக் செய்யறவங்க பெரும்பாலும் வீட்டுப் பெரியவங்க, ஹாஸ்பிட்டல் போகணும்னு நினைக்கிற உடல்நிலை சரியில்லாத மக்கள், வீட்டுப் பெண்கள், கோவிலுக்கு போகிற நபர்கள்தான்.

இவங்க எல்லாராலும் ஆண்ட்ராய்டு ஃபோன் பயன்படுத்தி ஆப் மூலம் புக்கிங் செய்வது கடினம். எங்களின் டார்கெட் ஆண்ட்ராய்டு பயன்படுத்தாத வாடிக்கையாளர்களும்தான். மேலும் எங்க முகநூல் பக்கத்தில் மெஸ்ஸெஞ்சர் மூலமாகவும் ஆட்டோ புக் செய்துக்கலாம்’’ என முடித்த யாஸ்மின் ஜவஹரும் ஒரு பெண் பிஸினஸ் வுமன் தான்.

‘‘நானும் குடும்ப தலைவி தான். எனக்கொரு சின்ன குழந்தை இருக்கா. என்னால ஆபீஸ் வர முடியாது, வேலை செய்ய முடியாது இப்படியெல்லாம் சொன்னா எனக்கான அடையாளத்தை நான் இழந்துடுவேன். வீட்டு வேலை, குழந்தைகள், குடும்பம் இதையெல்லாம் தாண்டி நமக்கும் ஒரு சுய வாழ்க்கை இருக்கு. குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு செல்ல தயங்கும் பெண்களைப் பார்க்கும் போது எனக்கு வருத்தமாக தான் இருக்கிறது. தன்னைத் தானே ஏமாத்திக்கிறாங்க.

இன்றைய சூழலில் இரண்டு பேரும் வேலைக்குப் போனாதான் குடும்பத்தை, குழந்தைகளை நல்ல நிலையில் பார்த்துக் கொள்ள முடியும். அப்படியான பெண்களுக்கும் நாங்க அவங்களுடைய நேரத்துக்கு ஏற்ப ஆட்டோ ஓட்டவும் வாய்ப்புக் கொடுக்கறோம். நேர்மையா செய்கிற எந்த வேலையும் தப்பில்லை’’ என்கிறார் 25 வயது நிரம்பிய இந்த இளம் CEO.

ஷாலினி நியூட்டன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

Tags : auto lady ,
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!