பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில் சதம் அடித்த முருங்கைக்காய்: உச்சமடையும் கத்தரிக்காய் விலை

நெல்லை: பொங்கல்பண்டிகையை முன்னிட்டு காய்கறி வரத்து அதிகரித்தாலும் முருங்கை, கத்தரிக்காய் போன்றவைகளின் விலை உச்சம் பெற்று வருகின்றன. தைப்பொங்கல் பண்டிகை 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. 2 நாட்களே உள்ள நிலையில் காய்கறிகள் விற்பனை சந்தைகளில் சூடுபிடித்துள்ளன. அதே நேரத்தில் சில காய்கறிகளின் வரத்து குறைவாக உள்ளதால் அவற்றின் விலை ஏறுமுகமாக உள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.70 முதல் ரூ.80 என்ற விலையில் விற்பனையானது. இந்த நிலையில் இதன் விலை நேற்று நெல்லை மாவட்ட உழவர் சந்தைகளில் ஒரு கிலோ ரூ.100 ஆக உயர்ந்தது. பிற சந்தைகளில் ரூ.110ஆக உயர்ந்துள்ளது.

இதன் விளைச்சலும் குறைவாக உள்ளதால் வரத்தும் குறைவாக உள்ளது. இதுபோல் கத்தரிக்காய் விளைச்சலும் குறைந்துள்ளதால் இதன் விலையும் உயர்ந்துள்ளது. இன்று உழவர் சந்தையில் ஒரு கிலோ முதல் ரக கத்திரிக்காய் ரூ.80ஆக விற்பனையானது. 2ம் ரகம் ரூ.40க்கு விற்கப்பட்டது. அடுத்து வரும் இரு நாட்களிலும் விலை தொடர்ந்து உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறினர். மாங்காய் கிலோ ரூ.55க்கும், பல்லாரி ரூ.50க்கும், சின்ன வெங்காயம் ரூ.74க்கும் விற்பனையானது. சேனைக்கிழங்கு ரூ.26, சேம்பு ரூ.40, கருணைக்கிழங்கு ரூ.45, சிறுகிழங்கு ரூ.60, வள்ளிக்கிழங்கு ரூ.50, பனங்கிழங்கு ரூ.50 என்ற விலையில் விற்பனையாகிறது.

வெளிச்சந்தைகளில் இவற்றின் விலை மேலும் உயர்வாக உள்ளன. இதனிடையே தென் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்யும் மழையால் காய்கறி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. சந்தைகள் மற்றும் பிற பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் கடைவிரிக்கமுடியாமல் விவசாயிகள், வியாபாரிகள் சிரமப்படுகின்றனர். சந்தைகள் பகுதியில் உள்ள சாலைகளும் சேரும் சகதியுமாக காட்சியளிக்கின்றன.

Related Stories: