துள்ளட்டும் காங்கேயம் காளைகள்

நன்றி குங்குமம்

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சிறப்பு. அப்படி காங்கேயம் என்றவுடன் நினைவுக்கு வருவது காளைகள்தான். காங்கேயம் காளையைப் பாடாத புலவர் இல்லை. பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் சினிமா பாட்டு வரை அதன் சிறப்பைச் சொல்லாத கலைச் செல்வங்கள் இல்லை.

ஒரு காலத்தில் மேற்கு மாவட்டங்களில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ் நிலம் முழுதுமே காங்கேயம் காளைகள் துள்ளித் திரிந்தன. காங்கேயம் காளை வைத்திருக்கும் உழவர் என்றாலே அவருக்குத் தனி மவுசு இருந்தது.இன்றுதான் புதிய தொழில்நுட்பம் விவசாயம் வரை புகுந்துவிட்டது. குறைந்த நிலம், அதிக விளைச்சல் என்றாகிவிட்டதால் பழைய பாரம்பரிய விவசாய முறைகள் அருகிவிட்டன. விளைவு, நம் பாரம்பரியம் கொஞ்சம் கொஞ்சமாக நம் கையை விட்டு விலகுகிறது.

ஒரு காலத்தில் நம் விவசாயத்துக்கு அதிகம் கைகொடுத்தது நாட்டு மாடுகளும், காளைகளும்தான். “சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசுமாடு; பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு?” என்ற இந்த பாடல் வரிகள் வெறும் கவி நயத்தின் பொருட்டு எழுதப்பட்ட வரிகள் அல்ல; உண்மையில் மாடுகள், மனிதனுக்கு வழங்கும் நன்மைக்கு, பொன் கொடுத்தாலும் ஈடாகாது.

மாடுகளில், நாட்டு மாடுகள் மூலம் நமக்கு கிடைக்கும் பயன்கள் ஏராளம். ஆனால், இன்றைய விஞ்ஞான உலகில், புதிய வகை மாடுகள் நம்மை ஆட்கொள்வதால் நாட்டு மாடுகளின் இனம் படிப்படியாக அழிந்து வருகிறது.முன்பு ஒரு விவசாயக் குடும்பத்தில் குறைந்தது 10 முதல் 20 மாடுகள் வரை இருக்கும். மாட்டுச் சாணம் தொட்டியில் சேகரிக்கப்பட்டு, மக்கிய உரமாக விளைநிலங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. இதன்மூலம், இயற்கை விவசாயம் நடந்துவந்தது.

ஆனால், இன்று இரசாயன உரம் நம்மை ஆட்கொண்டு, விவசாயத்தின் ஆரம்பமே தவறுதலாக அமைந்துவிடுகிறது. இரசாயன உரம் வரத்து அதி

கரிப்பு மற்றும் மாடுகள் எண்ணிக்கை குைறவு காரணமாக இயற்கை விவசாயம் படிப்படியாக அழிந்துவருகிறது.தமிழர்களின் கலாசாரம் பாரம்பரியமானது. மனிதர்களுக்கும், மாடுகளுக்குமான தொடர்பு 8000 ஆண்டுகளுக்கு மேற்பட்டது. சிந்துவெளி நாகரிகத்துக்கு முன்பே தொன்றுதொட்டு நம்முடன் பயணப்பட்டு வருவது காளைகள். சிந்துவெளி நாகரிகத்தில் கண்டெடுக்கப்பட்ட திமில் கொண்ட காளை முத்

திரையை அனைவரும் அறிவோம். இது, நோக்குவதற்கு காங்கேயம் காளையைப் போல் உருவம் கொண்ட விலங்காகும்.

தைப் பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் என்பது நமக்கான பாரம்பரியத்தையும், காளைகளுக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவத்தையும் குறிப்பிடுகிறது. முன்பு எல்லாம், வீடுகளில் மாடுகள் நிறைந்திருப்பது பெரும் செல்வமாகக் கருதப்பட்டது. இன்று பெரும்பாலான மாட்டுத் தொழுவங்களில் டிராக்டர்கள் இளைப்பாறிக் கொண்டிருக்கின்றன. ஆனாலும், மாடுகள் மீது உள்ள நமது பாரம்பரிய பிணைப்பை அறுத்தெறிய விரும்பாத சிலர், இன்றைக்கும் மாடுகளைப் பராமரித்துவருகின்றனர். குறிப்பாக, ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பின் நாட்டுமாடுகளைப் பராமரிப்பது கணிசமாக அதிகரித்திருக்கிறது.

நாம் மறந்துபோன, பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் நாட்டு மாடுகளின் பங்களிப்பு அபாரமானது. இவற்றின் சிறப்பே, குறைந்த தீவனத்தை எடுத்துக்கொண்டு உழவுக்கு உதவி செய்வதோடு, கணிசமான அளவில் பால் கொடுப்பதுதான். கலப்பின மாடுகளின் பாலைவிட நாட்டு மாடுகளின் பாலுக்கு தனிச்சுவை உண்டு. அதிலிருந்து கிடைக்கும் தயிர், மோர், நெய்க்கும் தனிச்சுவை உண்டு என்பதை மறுக்க முடியாது.

தமிழகத்தின் நாட்டு இன மாடுகளாக காங்கேயம், உம்பளச்சேரி, புலிகுளம், ஆலம்பாடி, பர்கூர் ஆகியவை உள்ளன. இவை, அந்தந்த ஊரில் உருவானவை என்பதால் அந்த ஊர்ப் பெயரில் வழங்கப்படுகின்றன.

தமிழகத்தில் மணப்பாறை, பாலமலை மாடு, பெரம்பலூர் மொட்டை மாடு, தொண்டைப் பசு, புங்கனூர் குட்டை தேனீ, மலை மாடு என பல்வேறு இனங்கள் உள்ளன. இதில், உலகப்புகழ் பெற்ற ரகங்களில் ஒன்று காங்கேயம் மாடுகள். அழகிய கொம்புகள், மலைக்குன்று போன்ற திமில். ஊளைச் சதை இல்லாத உடல்வாகு, சாட்டை போன்ற வால், நீளமான கால்கள் என நோக்க கம்பீரமும் வசீகரமும் கொண்ட அழகான தோற்றம் உடையவை காங்கேயம் காளைகள். இந்த வகை மாடுகள், வலிமையானதாகவும், ஏர் உழுவதற்கு ஏற்றதாகவும் உள்ளன.

தமிழகத்தில் ஊத்துக்குளி வெண்ணெய் உலகப்புகழ் பெற்றது. காரணம், ஊத்துக்குளி வெண்ணெய் எடுக்க பயன்படுத்துவது முழுக்க முழுக்க காங்கேயம் பசுமாட்டுப்பால் ஆகும். ஆனால், இன்றைய காலத்தில் இவற்றின் எண்ணிக்கை மெல்ல ெமல்ல சரிவது பெரும் வேதனை தருகிறது.இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் எம்.ஜி.ராஜேந்திரன், ‘‘பால் உற்பத்தியைப் பெருக்க, செயற்கையாக கால்நடைகளின் விந்துகள் செலுத்தப்பட்டு இனப்பெருக்கம் செய்யும்முறை 1980ம் ஆண்டு துவக்கப்பட்டது.

இதன் பிறகு உள்ளூர் கால்நடை இனங்களைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 1998ம் ஆண்டுக்குப் பிறகு ‘பீட்டா’ அமைப்பு நம் பாரம்பரிய விளையாட்டுகளில் தலையிடத் தொடங்கியபிறகுதான் நம் நாட்டுக்காளை மாடு இனங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் நாட்டுக்காளை மாடுகளைக் கொண்டு நடத்தும் போட்டிகளைத் தடை செய்யப் போராடியதால், பல நாட்டுக்காளை இனங்கள் காணாமல் போயுள்ளன...’’ என்கிறார்.

இப்போதுள்ள நாட்டு இனக் காளைகளை மீட்டுக் காப்பதற்கு ஜல்லிக்கட்டு, ரேக்ளா போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்கிறார்கள் நம்மூர் விவசாயிகள். இப்படி ஊக்கம் அளிக்கும்போது, ஜெர்ஸி, ஹோல்ஸ்டைன், ப்ரீசியன், ரெட்டேன் போன்ற கலப்பின ரகங்கள் குறைந்துவிடும். கலப்பின மாடுகள் வரவால், நம் நாட்டு மாடுகள் இனங்கள் கிட்டத்தட்ட அழியும் தருவாயில் இருக்கின்றன. எனவே இது, நம் நாட்டு மாடுகளைக் காக்க வேண்டிய தருணமாகும்.

நாட்டுமாடுகளால் நாம் அடையும் நன்மைகள் ஏராளம். நாட்டுப் பசுவின் சாணத்தில் விவசாயத்துக்குத் தேவையான கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் நிறைந்து காணப்படுவதால், அதன் எரு, மண்வளத்தைப் பெருக்கி உயிர்ச் சூழலைக் காக்கிறது. இயற்கை விவசாயத்தைக் காக்கிறது. இயற்கை வேளாண்மையில் முக்கிய பங்கு வகிக்கும் இடுபொருளான ‘பூச்சி விரட்டிகள்’, நாட்டுப்பசுவின் சாணம், சிறுநீர், பால், தயிர், வெண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தி தயார் செய்யப்படுகிறது.

மேலும் நாட்டுப்பசுவின் சாணத்தில் இருந்துதான் பூஜைக்குப் பயன்படும் திருநீறும் தயாரிக்கப்படுகிறது. இப்படி உணவு முதல் பூஜை வரை நீளும் இந்த நாட்டுமாடுகளின் பயன்பாடுகள் ஏராளம். இத்தனை நன்மைகளையும் நமக்கு வழங்கும் நமது நாட்டு மாடுகள் இனங்கள் எதிர்காலத்தில் நம் சந்ததிகள் புத்தகத்திலும், புகைப்படத்திலும் மட்டுமே பார்த்துத் தெரிந்துகொள்ளும் நிலைக்குச் சென்று விடக்கூடாது என்பதே நம் ஆதங்கம்.

காங்கேயம் நல்லதம்பி

Related Stories: