ஆவி பறக்கும் டீ கடை

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

பொழுது விடிந்து ஜன்னல் வழி சூரியன் எட்டிப்பார்த்ததும், தேநீர்  கோப்பையினை  கையில் பிடித்தால்தான் பலருக்கும் பொழுதே விடியும். சுவைக்கு நம்மை அடிமையாக்கி, நமது நாளை புத்துணர்ச்சியாக்கும் சூடான தேநீரின் தரத்தை எப்படி கண்டறிவது?

உயரமான பைன் மரங்களோடு மலைக் குன்றுகள் இணைய, பச்சைக் கம்பளம் போர்த்திய அழகில் மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் பரவிக் கிடக்கும் தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவே, தீநாடு கிராமத்தில் தங்களின் நரிக்கல் தேயிலைத் தொழிற்சாலையை வெற்றிகரமாக நடத்தி வரும் அதன் இயக்குநர்களில் ஒருவரான பிரபுவைச் சந்தித்தபோது… நம் கேள்விகளுக்கு விளக்கமாகவே பேசினார்.

‘‘தேயிலையில் பல ரகங்கள் சந்தைகளில் விற்பனையில் இருந்தாலும், ஒரு நல்ல டீயினை கண்டறிவது மிகவும் சுலபம். டீ தூளை கொஞ்சமாக எடுத்து சாதாரணத் தண்ணீரில் போடும்போது, நீரின் நிறம் மாறாமல் அப்படியே இருந்தால் அது நல்ல டீ. தண்ணீரின் நிறம் சட்டென மாறினால் அது சாயம் ஏற்றப்பட்ட டீ. அது நம் உடலுக்கு நல்லதல்ல. அந்த மாதிரியான டீக்களை குடிப்பதைத் தவிர்த்தல் வேண்டும்.

ஒரு நல்ல தேயிலை என்பது இரண்டு இலை ஒரு மொக்கு அல்லது மூன்று இலை ஒரு மொக்கு என்ற கணக்கில், இலை துளிர்க்கத் துவங்கிய பத்து முதல் பனிரெண்டு நாட்களுக்குள் செடியில் இருந்து இலையினைப் பறித்துவிட வேண்டும். இந்த தேயிலையே மிகவும் தரமானது. இதில் இருந்து தயாராகும் டீக்களைப் பருகும்போது உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். வேண்டும் என்றால் விரும்பிய சுவைக்காக இத்துடன் புதினா, துளசி, இஞ்சி, தேன் போன்றவற்றை ருசிக்காகவும், மணத்திற்காகவும், உடல் ஆரோக்கியத்திற்காகவும் சேர்த்துக் கொள்ளலாம்.

டீயினைத் தயாரிக்கும்போது டீ தூளைப் போட்டு தண்ணீரைக் கொதிக்க விடக் கூடாது. அது மிகவும் தவறான தயாரிப்பு. தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அடுப்பை அணைத்த பிறகு அதில் டீ தூளை போட்டு மூடி வைக்க வேண்டும். சிறிது இடைவெளி விட்டு அதை வடிகட்டி தேவையான ருசியுடன்  சேர்த்துக் குடிப்பதே சிறந்த தயாரிப்பு. இந்த தேநீரே உடலுக்கு நல்லது.தொழிற்சாலைகளில் தேயிலை தயாரிப்பில் இரண்டு விதமான முறைகள் பயன்பாட்டில் உள்ளது. ஒன்று சி.டி.சி.

(CTC-crush-tear-curl) முறை. மற்றொன்று ஆர்த்தோடக்ஸ் (orthodox) முறை. இதில் ஆர்த்தோடக்ஸ் முறைக்கு பத்து முதல் பனிரெண்டு நாட்களில் துளிர்த்த இலையினை மட்டுமே பயன்படுத்த முடியும். பெரும்பாலும் ஏற்றுமதி தரம் வாய்ந்த தேயிலைகள் ஆர்த்தோடக்ஸ் முறையிலேயே தயாராகின்றன.இவற்றில் க்ரீன் டீ, வொயிட் டீ, ஆடட் டீ போன்றவை கிடைக்கும். வெதரிங்  ரோலர்  பில்டர் டிரையர் க்ளீனிங் பிராசஸ் ஃபைனல்  பேக்கிங்என்கிற முறையில் தேயிலை தயாரிப்பு நடைபெறும்’’ எனச் சுருக்கமாக முடித்தார்.

-மகேஸ்வரி,

கோவை ரஞ்சித்

Related Stories: