×

இவங்க வேற மாதிரி அம்மா!

இடுப்புவலி தாங்காமல் அந்த மாட்டுத் தொழுவத்தில் வந்து விழுந்தாள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அந்த இருபது வயது பெண்.“அம்மா” என்று அடிவயிற்றில் இருந்து குரலெடுத்து கதறிய அவளது கதறலை செவிமடுக்க, அக்கம் பக்கத்தில் ஆளரவமே இல்லை.மாட்டுத் தொழுவத்தில் இயேசுநாதர் மட்டும் பிறக்கவில்லை. அவளது மகளும் அங்கேதான் பிறந்தாள்.குழந்தையை கையில் எடுத்துப் பார்த்தாள். தொப்புள் கொடி தாயையும், சேயையும் இணைத்திருந்தது.வீட்டில் பிரசவம் நடந்திருந்தால் விபரம் தெரிந்தவர்கள் யாராவது பத்திரமாக அகற்றியிருப்பார்கள். உலகம் அறியா அந்த சின்னப் பெண்ணுக்கு என்ன தெரியும்? அருகிலிருந்த கூரான கருங்கல்லை எடுத்து…

இந்த ‘கதை’யை வாசிக்கும்போதே நாடி, நரம்பெல்லாம் பதறுகிறது இல்லையா? கதையல்ல, நிஜம்.மகாராஷ்டிராவின் வார்தா மாவட்டத்தில் இருக்கும் குக்கிராமமான பிம்ப்ரியில், நவம்பர் 14, 1948 அன்று சிந்துதாய் சப்கல் பிறந்தார். குழந்தைகள் தினமன்று பிறந்திருந்தாலும், அவர் பெற்றோருக்கு தேவையற்ற குழந்தை.ஒரு குதிரை லாயத்தில் சொற்ப கூலிக்கு பணியாற்றிக் கொண்டிருந்த அப்பா அபிமான்ஜிக்கு அக்குழந்தையை நல்லபடியாக வளர்க்க வேண்டுமென்று ஆசைதான். ஆனால் வாழ்க்கை நெருக்கடி அப்படியில்லையே. எல்லோரும் அக்குழந்தையை ‘சிந்தி’ என்றுதான் அழைத்தார்கள்.
‘சிந்தி’ என்றால் மராத்தி மொழியில் ‘கிழிந்த துணி’ என்று அர்த்தம். பெற்றோருக்கு கூடுதல் சுமையாக வந்து பிறந்ததால், அந்த செல்லப் பெயர்.

‘அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு?’ என்பது அம்மாவின் வாதம். ஆனால் அப்பா அபிமான்ஜிக்கோ தன் மகள் படித்து பெரிய ஆள் ஆவாள் என்று நம்பிக்கை. பலகை வாங்கித்தரக்கூட வக்கில்லை என்றாலும் பள்ளிக்கு அனுப்பினார். நான்காம் வகுப்பு வரைதான் படித்தார் சிந்து.அவருக்கு பத்து வயதாக இருக்கும்போது குடும்பத்தினரின், உறவினர்களின் வற்புறுத்தலால் திருமணம் நடந்தது. கணவர் ஹரி சப்கலுக்கு வயது அப்போது முப்பது.“ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையில் இரண்டே இரண்டு முக்கியமான நிகழ்வுகள்தான் இருக்கிறது என்று எனக்கு கற்பிக்கப்பட்டது. முதல் நிகழ்வு திருமணம். அடுத்தது மரணம். எனக்கு முதல் நிகழ்வு நடந்து நவர்கான் காட்டுக்குள் இருந்த வார்தா என்கிற ஊருக்கு வாழப்போனேன்” என்று அந்நாட்களை நினைவுகூர்கிறார் சிந்து.குடித்துவிட்டு வந்து அடிப்பதுதான் ஹரி, சிந்துவோடு நடத்திய பத்து வருட தாம்பத்யம். மூன்று மகன்கள். நான்காவதாக நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது வீட்டை விட்டு, இரக்கமேயின்றி நடு இரவில் அடித்து
துரத்தினார்.

ஒரு பண்ணையாரோடு சிந்துவுக்கு தொடர்பிருந்தது, அவரது குழந்தையைதான் வயிற்றில் சுமக்கிறார் என்று அபாண்டமாக குற்றம் சாட்டினார் ஹரி. அதன் பின்னர்தான் கட்டுரையின் தொடக்கத்தில் வரும் சம்பவம் நடந்தது.குழந்தை பெற்ற பச்சை உடம்புக்காரியாக இருந்த நிலையிலும், கைக்குழந்தையோடு சில கிலோ மீட்டர்களுக்கு வெறும் காலோடு நடந்து அம்மா வீடு போய் சேர்ந்தார் சிந்து. “கணவனோடு வருவதாக இருந்தால் வீட்டுக்குள் கால் வை. இல்லா விட்டால் எங்கேயாவது போய் ஒழி” என்று பிறந்தவீடு தன் பொறுப்பை நிராகரித்தது.புகுந்த வீட்டுக்கும் போக சாத்தியமே இல்லை என்கிற நிலையில் தற்கொலை உணர்வுக்கு ஆளானார். தண்டவாளத்தில் தலை வைக்க போனபோது புதியதாய் பிறந்திருந்த மழலையின் சிரிப்பு அவர் மனதை மாற்றியது. பிச்சையெடுத்தாவது பிழைக்கலாம் என்கிற எண்ணத்துக்கு வந்தார்.

ரயில்வே பிளாட்ஃபாரங்களில் குழந்தையை தரையில் கிடத்தி உணவுக்காக கையேந்தினார். கால் வயிறு, அரை வயிறு நிரம்பியது.அப்போதுதான் கவனித்தார். தான் மட்டுமே அனாதை அல்ல. ரயில்வே நிலையம் முழுக்கவே அனாதைகளாலும், பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளாலும் நிறைந்திருந்தது. ‘பசிக்கிறது’ என்று உச்சரிக்கக்கூட கற்றுக்கொள்ளாத வயது வந்த குழந்தைகளும் கூட அவரோடு பிச்சையெடுத்துக் கொண்டிருந்தது.“உயிர்வாழ உணவுக்காக தெருவில் பிச்சை எடுக்கும்போதுதான் உணர்ந்தேன். எங்கேயும் போக வழியில்லாத எண்ணிலடங்காதோர் இருக்கிறார்கள். நான் முடிவெடுத்தேன். பிச்சை எடுத்தாவது அனைவரையும் காப்பேன் என்று”1973ல் யாருமற்றவர்களை வயது வித்தியாசமின்றி, பால் வேறுபாடின்றி தத்தெடுக்க ஆரம்பித்தார் சிந்து. குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு கல்வி, திருமணம் என்று வாழ்க்கையில் நிலைநிறுத்த அத்தனை உதவிகளையும் (யாசகம் பெற்றுதான்) செய்ய ஆரம்பித்தார். வயதானோருக்கு உணவு, மருத்துவ வசதிகள் போன்ற ஏற்பாடுகளை செய்தார்.

இந்த வகையில் இன்றுவரை 1,500க்கும் மேற்பட்டோரை தன் குழந்தைகளாக உருவாக்கி உலக சாதனை படைத்திருக்கிறார் சிந்து. அனைவருமே இவரை ‘மா’ (அம்மா) என்றுதான் அழைக்கிறார்கள். இவரிடம் வளரும் ஒரு குழந்தையைகூட யாருக்கும் இதுவரை தத்து கொடுத்ததில்லை. ஆனால், தன் சொந்த மகள் மம்தாவை மட்டும் தத்து கொடுத்துவிட்டார். ஏனெனில் குழந்தைகளிடம் காட்டும் பாசத்தில் வேறுபாடு வந்துவிடுமோ என்கிற அச்சத்தில். மகள் மம்தா சப்கல்லும் தாய்வழியிலேயே இப்போது ஆதரவற்றவர்களுக்கு இல்லம் அமைத்து, ‘மா’வுக்கு ஆதரவுக்கரம் நீட்டி வருகிறார்.
‘மா’வின் குடும்பம் எவ்வளவு பெரியது தெரியுமா?இருநூறுக்கும் மேற்பட்ட மருமகன்கள், ஏறத்தாழ நாற்பது மருமகள்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேரன் பேத்திகள். ‘மா’விடம் வளர்ந்தவர்களில் இன்றும் டாக்டர்களும், வழக்கறிஞர்களும், என்ஜினியர்களும் கூட உண்டு.

“இவர்களை வளர்க்க நான் பிச்சைதான் எடுத்தேன். ஆனால் தெருவோரங்களிலும், ரயில்வே பிளாட்ஃபாரங்களிலும் அல்ல. எனக்கு நன்றாக பேசவரும். ஒவ்வொரு ஊராக போய் பேசினேன். பசி என்னை பேசவைத்தது. எங்களுக்கு பிச்சை கொடுங்கள். நாங்கள் வாழவேண்டும். எங்கள் குழந்தைகள் வளரவேண்டும் என்று மனமுருக கேட்டேன்” என்று வருமானத்துக்கு தான் தேர்ந்தெடுத்த வழியை சொல்கிறார்.இப்போது இவரது பெயரில் ஆறு ஆதரவற்றோர் இல்லங்கள் நடைபெறுகிறது. அரிய சேவைக்காக ஐநூறுக்கும் மேற்பட்ட விருதுகளை வென்றிருக்கிறார். இவரது வாழ்க்கை ‘மீ சிந்துதாய் சப்கல்’ என்கிற பெயரில் மராத்தியில் படமாகி, தேசிய விருதும் வென்றிருக்கிறது.




Tags : Mom!
× RELATED சொல்லிட்டாங்க...