வந்துவிட்டது ஆர்கானிக் பால்!

விவசாயம் தான் நம்முடைய ஆணிவேர். நம் முன்னோர்கள் விவசாயம் செய்த காலத்தில் நாம் அனைவரும் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தோம். ஆனால் ஃபாஸ்ட் ஃபுட் மற்றும் மேற்கத்திய உணவுக்கு நாம் பழகிய பிறகு விவசாயம் மட்டுமல்ல நம் ஆரோக்கியமும் முற்றிலும் அழிந்து வருகிறது என்று தான் சொல்லவேண்டும். ஆனால் விவசாயத்தின் மகத்துவம் புரிந்த சிலர் மீண்டும் அதனை புதுப்பித்து உயிர் கொடுத்து வருகிறார்கள். ஐ.டி துறையில் கை நிறைய சம்பளத்தோடு வேலை பார்த்து வந்த சசிக்குமார், அதை ஒரே நொடியில் துறந்துவிட்டு விவசாயிகளுக்காக ‘அக்ஷயகல்பா’ என்ற பெயரில் ஆர்கானிக் பாலினை உற்பத்தி செய்து வருகிறார்.‘‘நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். என்னுடைய அப்பா இன்றும் கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். விவசாயம் தான் என்னை படிக்கவும் வைத்தது. வானம் பார்த்து தான் விவசாயம் என்ற நிலையால், மழை இருந்தால் நல்ல மகசூல் இருக்கும், இல்லாத போது, விளைச்சல் இருக்காது. இப்படி நான் பல ஏற்றத் தாழ்வுகளை பார்த்து தான் வளர்ந்தேன். அப்பா ஒவ்வொரு பயிரையும் தன் குழந்தை போலத் தான் பாவிப்பார். மண் வாசனையோடு வளர்ந்த எனக்கு படிக்கும் காலத்தில் இருந்தே விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஓடிக் கொண்ேட இருந்தது. ஆனால் அப்பா தான் கஷ்டப்பட்டது போல் நாங்களும் கஷ்டப்படக்கூடாது என்று எங்களை நன்றாக படிக்க வைத்தார். நானும் படித்துவிட்டு  ஐ.டி துறையில் வேலைக்கு சேர்ந்தேன். 20 வருஷம் அந்தத் துறையில் வேலை பார்த்தேன். சிகாகோவில் வேலைப் பார்த்தபோது தான், வெளிநாட்டினருக்கு உழைத்தது போதும், நம் மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். ஏற்கனவே விவசாயம் குறித்து ஈடுபடவேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் அதில் என்ன செய்யலாம் என்று ஆய்வு மேற்கொண்டேன். 2010ல் சென்னைக்கு வந்தேன்’’ என்றவர் அதன் பிறகு ஆர்கானிக் பால் உற்பத்தி செய்யலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

‘‘நிலம் இருக்கும் பலர் ஆர்கானிக் விவசாயம் செய்கிறார்கள். சென்னை போன்ற மொட்ரோபாலிடன் நகரத்தில் வசிப்பவர்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் மாடித் தோட்டம் அமைக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் விவசாயிகள் எந்த நிலையில் பலன் அடைகிறார்கள். அதனால் அவர்களுடன் இணைந்து செயல்படவும் அவர்களையும் ஒரு தொழில் முனைவோராக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது தான் ஆர்கானிக் பால் திட்டம். இதற்கு முதலில் நான் விவசாயிகளை சம்மதிக்க வைக்க வேண்டும். காரணம் பலர் பிழைப்புக்காக பெங்களூர், சென்னை... போன்ற நகரத்தில் கார் டிரைவராகவும் அல்லது வேறு வேலை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களை நான் மறுபடியும் விவசாயம் மூலம் வாழ்வாதாரம் ஏற்படுத்தி தருகிறேன் என்று நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்’’ என்றவர் தற்போது 600 விவசாயிகளுடன் இணைந்து தன் ஆர்கானிக் பால் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார்.

்‘‘முதலில் சித்தூர் மற்றும் செங்கல்பட்டு சுற்றியுள்ள 900 கிராமங்களை ஆய்வு செய்தோம். ஒவ்வொரு விவசாயக் குடும்பமாக சென்று அவர்களிடம் மாடு மற்றும் சிறிய அளவில் நிலம் உள்ளதா என்று சர்வே எடுத்தோம். இவை இரண்டும் உள்ளவர்களை தேடிப் பிடித்தோம். அதில் பலர் குடும்பத்தை கிராமத்தில் விட்டு விட்டு நகரத்தில் டிரைவர் வேலை பார்த்து வந்தனர். அவர்களை எல்லாம் சந்தித்து மீண்டும் விவசாயம் செய்யுங்கள் என்று ஊக்கமளித்தோம். விவசாயம் மறுபடியுமா... ஓரளவு மீண்ட வாழ்க்கையை மீண்டும் பாதாளத்தில் தள்ள வேண்டுமா என்று பலர் தயங்கினார்கள். ஆனால் விவசாயம் மற்றும் எங்கள் வார்த்தை மேல் நம்பிக்கை கொண்டு நாங்க சந்தித்தவர்களில் பாதி பேர் எங்களை நாடி வந்தார்கள். முதலில் பத்து பேருடன் தான் எங்களின் திட்டம் ஆரம்பித்தோம்.முதலில் அவர்களின் நிலத்தினை இயற்கை நிலமாக மாற்றி அமைத்தோம். அந்த மண் ரசாயனமில்லாத இயற்கை நிலமாக மாற குறைந்த பட்சம் இரண்டு வருஷமாகும். அந்த நிலத்தில் இயற்கை உரம் கொண்டு மாட்டுக்கு தேவையான தீவினம் மற்றும் சில பயிர்களை விளைவிக்க ஆரம்பித்தோம். ஒரு பக்கம் இதற்கான வேலை நடந்து கொண்டு இருக்க. மறுபக்கம் அவர்கள் வீட்டில் உள்ள மாடுகளை பராமரிக்க ஆரம்பித்தோம். அந்த மாடுகளுக்கு இயற்கை முறையில் அவர்கள் நிலத்தில் விளைவிக்கப்படும் தீவினம் மட்டுமே உணவாக வழங்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறினோம். வேறு எந்த தீவினமும் ெகாடுக்க கூடாது. மாட்டின் உடல் நிலையை கவனிக்க மருத்துவரை நியமனம் செய்தோம்.

மாடுகளை கட்டிப் போடக்கூடாது மேலும் கன்று இருந்தால் அதற்கு தாய்ப்பால் மற்றும் தீவனம் நன்றாக தரவேண்டும். சுத்தமான தண்ணீர் தான் மாட்டுக்கு புகட்ட வேண்டும். அது தவிர தங்களின் மாடுகளை எவ்வாறு ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும் என்றும் அவர்களை சந்தித்து ஆலோசனை வழங்கி வந்தோம். முதல் இரண்டு வருஷம் நிலம் மட்டுமல்ல மாடுகளும் முற்றிலும் இயற்கை சார்ந்த உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக மாற குறைந்த பட்சம் இரண்டு வருஷமாகும். அது வரை அந்த மாட்டின் பாலை நாங்க வாங்க மாட்டோம். மாடு மற்றும் அவர்களின் நிலம் குறித்து அனைத்து சேவையும் நாங்க பார்த்துக் கொள்வோம். அதற்கு அவர்கள் தங்களின் மாட்டுப் பாலை எங்களிடம் விற்பனை செய்ய வேண்டும். இது தான் எங்களுக்கும் விவசாயிகளுக்கும் உள்ள ஒப்பந்தம். அவர்களுக்கு ஒரு லிட்டருக்கு கணிசமான தொகையும் கொடுக்கிறோம். மேலும் மாடுகளின் பராமரிப்பினை முற்றிலும் இலவசமாகத்தான் செய்து தருகிறோம். ஆரம்பத்தில் ஒன்று இரண்டு மாடுகள் வைத்திருந்தவர்கள் தற்போது 10, 15 மாடுகள் என சிறிய பண்ணை வைக்கும் அளவிற்கு இந்த பத்தாண்டுகளில் வளர்ந்திருக்கிறார்கள்’’ என்றவர் அதற்கான உதவியும் செய்து வருவதாக தெரிவித்தார்.

‘‘ஆரம்பத்தில் நாங்க பார்த்த போது அவர்களிடம் ஒன்று இரண்டு மாடுகள் இருக்கும். அதுவும் சரியான முறையில் பராமரிக்காமல் இருந்தது. நாங்க அதற்கு என்ன தீவனம் கொடுக்க வேண்டும் எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்க ஆரம்பித்த பிறகு அவர்களே தங்களின் மாடுகள் ஆரோக்கியமாக இருப்பதை உணர ஆரம்பித்தார்கள். அதன் பிறகு மேலும் மாடுகள் வாங்க வேண்டும் என்றால் அவர்கள் கையில் போதிய காசு இருக்காது. அதனால் வங்கியில் லோன் வாங்கி தர உதவினோம். அதை அவர்கள் சரியான முறையில் செலுத்த வேண்டும் என்று ஊக்குவித்தோம். அப்படித்தான் ஒவ்வொருவரின் பண்ணையும் விரிவடைந்தது. தற்போது செங்கல்பட்டை அடுத்து சென்னையிலும் இது போல் ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளது. இந்த வருடம் அதை செயல்படுத்த இருக்கிறோம்.

அடுத்த ஆண்டு ஹைதராபாத்தில் ஆரம்பிக்க இருக்கிறோம். தற்போது எங்களின் பால் சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள ஆர்கானிக் கடைகள் மற்றும் சூப்பர்மார்க்கெட்டில் கிடைக்கிறது. எங்களின் நிறுவன இணையதளம் மற்றும் ஆப் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம். பால் மட்டுமில்லாமல், நெய், வெண்ணெய், பனீர், தயிர், சீஸ் போன்ற பொருட்களும் ஆர்கானிக் முறையில் தயாரித்து வருகிறோம். பால் விற்பனையில் மட்டுமே தான் கவனம் செலுத்தி வருகிறோம். இதை மேலும் இந்தியா முழுக்க விரிவடைய செய்து ஒவ்வொரு விவசாயிகளையும் தொழில் முனைவோராக மாற்ற வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம்’’ என்றார் சசிக்குமார்.

Related Stories: