×

அன்பார்ந்த தாய்க்குலமே!

பொது இடங்களில் சில விஷயங்களை பேசக்கூடாது என்று ஒரு மரபுசார்ந்த நாகரிகம் நமக்கு இருக்கிறது.
அவற்றில் பெரும்பாலான விஷயங்கள் உடல் தொடர்பானவை.இதுவரை பேசாப் பொருளை யெல்லாம் பேசியாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கும் காலம் இது.நகர்ப்புற தெருக்களில் அடிக்கடி காணும் காட்சிதான் இது. சாலையோரமாக நடந்துச் செல்லும்போது குப்பைத்தொட்டிக்கு அருகில் உபயோகப்படுத்தப்பட்ட ‘சானிட்டரி நாப்கின்கள்’ சிதறிக் கிடக்கும். தெருவோர நாய்கள் அவற்றை பிய்த்து உள்ளிருக்கும் ரத்தம் தோய்ந்த பஞ்சினை வெளியே எடுக்க முயற்சிக்கும்.

இந்தக் காட்சியைப் பார்த்ததுமே சிலர் அருவருப்பு அடைகிறார்கள்.இளவட்டப் பயல்களாக இருந்தால் கேலியாக ஏதேனும் கமெண்ட் அடிப்பார்கள்.இது ஆண்மனம்.உதிரத்தை உறிஞ்சிய சானிட்டரி நாப்கின்கள், மனிதகுலப் பெருக்கத்துக்கு அடிப்படையான அன்றாட நிகழ்வின் சாட்சி. ‘அந்த மூன்று நாட்கள்’ என்றேனும் ஒரு காலக்கட்டத்தில் பெண்களுக்கு நிகழாமல் போனால், மனித இனமே பூமியில் இருக்காது.மேற்கண்ட காட்சியை காணும் பெண்களுக்கு உடனடியாக ஏற்படக்கூடிய ஒரே ஒரு உணர்வு வேதனை. தன்னைப் போன்ற வேறொரு பெண் உபயோகித்த நாப்கின் தெருவில் சிதறிக் கிடப்பதைக் காணும் பெண் குற்றவுணர்ச்சியுடன் கூடிய நாணத்தையும் உடனே அடைகிறார். கூட ஆண் யாராவது (நண்பனோ, கணவனோ, சகோதரனோ யாராக இருந்தாலும்) இருந்தால் கோபம்கூட அடைகிறார்.

படித்த பெண்களாகவே இருந்தாலும் கடைகளில் சானிட்டரி நாப்கினை கொஞ்சம் தயக்கத்தோடுதான் கேட்டு வாங்க வேண்டியிருக்கிறது.மற்ற குப்பைகளை ஒப்பிடும்போது, உபயோகப்படுத்தப்பட்ட நாப்கின் குப்பை என்பது சமூக மனத்தடை தொடர்பான பிரச்சினையாகவும் இருக்கிறது.ஒரு பெண் தன் வாழ்வில் சராசரியாக 17,000 நாப்கின்களை குப்பையில் போடவேண்டியிருக்கிறது. ஒவ்வொரு மனிதருக்கும் குப்பை கொட்டுவது என்பது அவர்களது பிறப்புரிமையாக இருந்தாலும், குறிப்பாக இந்த குப்பையை எறியும்போது மட்டும் ஒவ்வொரு பெண்ணும் இனம்புரியா குற்றவுணர்ச்சியை உணர்கிறார்கள்.

டயாக்ஸின், ரேயான், பூச்சிக் கொல்லிகள், செயற்கை நறுமண ரசாயனங்கள் போன்றவை நாப்கின் உருவாக்க தேவைப்படும் கச்சாப்பொருள்கள். இவை சுற்றுச்சூழலுக்கும், அதை உபயோகிப்பவரின் உடலுக்கும் ஏற்படுத்தக்கூடிய கேடுகளை விவரிக்கவே இரண்டு நாட்களாகும். நிலத்தில் எறியப்படும் ஒரு சானிட்டரி நாப்கின் மக்குவதற்கு 500 முதல் 800 ஆண்டுகள் ஆகுமென்று சொல்கிறார்கள். குப்பையில் எரியும்போது அவை வெளியிடும் ரசாயனங்கள் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் ஆபத்து ஏற்படுத்தக்கூடியவை. அப்படி எனில், எத்தகைய விபரீதத்தை ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்நாளில் பதினேழாயிரம் முறை இடுப்பில் கட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது என்று எண்ணிப் பாருங்கள்.

ஆனால், வேறு வழியில்லை.
இப்போது இருப்பதிலேயே அந்த மூன்று நாள் பிரச்சினையில் அவர்களுக்கு பெரிய நிவாரணமாக இருப்பவை சானிட்டரி நாப்கின்கள்தான். குறிப்பாக வேலைக்குச் செல்லும் / படிக்கும் பெண்களுக்கு நாப்கின் இல்லாத வாழ்க்கையை நினைத்தே பார்க்க முடியாது.அவற்றை பெண்கள் கவுரவமான முறையில், யாருடைய கேலி கிண்டலுக்கும் உள்ளாகாமல் அகற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.நம்மூரில் பெரும்பாலான டாய்லெட்டுகளில் குப்பைகளை போட குப்பைக்கூடை வசதியும் ஏற்பாடு செய்யப்படுவதில்லை. எனவே, அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் சிலர், இவற்றை வாஷ்ரூமில் ‘ப்ளஷ்’ செய்துவிடுவதால் கழிவுநீர் பாதைகள் அடிக்கடி அடைத்துக் கொள்வதும் ஒரு முக்கியமான பிரச்சினை.

சுகாதாரத்துறையில் பணியாற்றக் கூடியவர்கள்தான் இதற்கான தீர்வினை சிந்திக்க முடியும். நம் நாட்டில் இன்னும் 70% பெண்களுக்கு நாப்கின் வாங்கி பயன்படுத்தக்கூடிய வசதியோ, விழிப்புணர்வோ இல்லை. நகர்ப்புற பெண்களுக்கு மட்டுமின்றி கிராமப்புற பெண்களுக்கும் சுகாதாரமான வாழ்வியல் பண்புகளை கற்றுத்தரும் கடமையை மிகச்சிறப்பாகவே நம் சுகாதாரப் பணியாளர்கள் செய்து வருகிறார்கள். உபயோகித்த சானிட்டரி நாப்கின்களை பாதுகாப்பான முறையில் அகற்றுவதை குறித்த விழிப்புணர்வையும் இவர்கள்தான் ஏற்படுத்த முடியும

பல முன்னேறிய நாடுகளில் sanitary napkin disposal unitகள் அந்தந்த அரசுகளாலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன. உயர்வெப்பத்தில் எரிக்கப்பட்டு இப்பிரச்சினை தீர்க்கப்படுகிறது. வீடுகளில், அலுவலகங்களில் பயன்படுத்தக்கூடிய சிறிய அளவிலான sanitary napkin disposal machineகளை நாம் நிறுவுவதைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்.பெண்களும் தற்போது பயன்படுத்தப்படக்கூடிய நாப்கின்களுக்கு மாற்று ஏற்பாடுகளை பரிசீலிக்கலாம்.திரும்பத் திரும்ப பயன்படுத்தக்கூடிய ஆர்கானிக் துணிகள், ஆர்கானிக் சானிட்டரி நாப்கின், ‘she cup’ போன்ற முறைகள் பாதுகாப்பானவை.

குறிப்பாக சிலிக்கானில் உருவாக்கப்படும் menstrual cup எனப்படும் she cup பயன்படுத்த எளிது. செலவும் மிக மிக குறைவு. பக்கவிளைவுகளும் எதுவுமில்லை. நல்ல தரத்திலானcupன் விலை ஆயிரம் ரூபாய்க்குள்தான் இருக்கும். ஒரு cupஐ பல வருடங்களுக்கு பயன்படுத்தலாம்.

Tags : Motherland , தாய்க்குலமே
× RELATED தாயக விடுதலைக்காக தன் குடும்பம்,...