வேகமாக வாசிப்பது எப்படி?

இன்று வாசிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது என்பது எல்லோருமே அறிந்த உண்மைதான். 4ஜி, 5ஜி என்று தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே போவதால் எல்லாமே வீடியோவாக மாறிவிட்ட உலகில் ஒரு பிரதியைப் படிப்பதும், அதனை நினைவில் வைத்திருப்பதுமே பெரிய சவால்.குறிப்பாக ஆய்வு மாணவர்களுக்கு இந்தச் சவால் கடும் மன உளைச்சலைத் தருகிறது. படிக்க முடியவில்லை. படித்தாலும் மனதில் நிற்பதில்லை. வேகமாக வாசிக்க முடியவில்லை என்று இன்றைய ஜென் Z தலைமுறைக்கு படிப்பு தொடர்பாய் பல புகார்கள்.வேகமாக வாசிப்பது என்பது புரிந்து வாசிப்பது என்பதோடு தொடர்புடையது. நாம் எவ்வளவு  நுட்பமாக ஒரு விஷயத்தை மனம் குவித்துக் கவனிக்கிறோமோ, அவ்வளவு வேகமாக அதனை உள்வாங்குகிறோம். அதற்கு ஏற்ப வாசிப்பும் வேகமாக அமைகிறது.

கவனம் குவித்து வாசிக்காவிடில் வாசிக்கும் வேகத்தையும் இழக்கிறோம்.

எனவே, கவனக் குவிப்புதான் வேகமான வாசிப்புக்கு முதல் நிலை. கவனக் குவிப்பை அதிகரிக்க தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம். சுடோகு, குறுக்கெழுத்துப் புதிர்கள் போன்ற மூளைக்கு வேலைதரும் பயிற்சிகள் கவனக் குவிப்புக்கும் கிரகிக்கும் தன்மை அதிகரிக்கவும் உதவும். இவற்றின் மூலம் கவனக் குவிப்பையும், வேகமாக கிரகிக்கும் தன்மையையும்,  நினைவாற்றலையும் மேம்படுத்தியபின், வேகமான வாசிப்புப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.உதாரணமாக, வாசிக்கும்போது, ஒவ்வொரு சொல்லாக பார்த்துக்கொண்டே வாசித்துப் போவது ஒரு நிலை. அடுத்த நிலையாக ஒரே பார்வையில் இரண்டு இரண்டு சொற்களாக கவனித்து வாசித்துச் செல்லலாம். இது இன்னும் வேகமாக வாசிக்க உதவும். ஒரு வரியில் உள்ள மூன்று மூன்று சொற்களாக வாசிப்பவர்கள், ஒவ்வொரு வரியாக ஒரே பார்வையில் கண்டு மிக வேகமாக வாசிப்பவர்கள் எல்லாம் இங்குண்டு. இதற்கு முறையான பயிற்சி இருந்தால் போதும். திட்டமிட்ட பயிற்சிகள் மூலம் வேகமான வாசிப்பை சாத்தியமாக்கலாம்.

Related Stories: