நீங்கள் பயன்படுத்தும் ஆணுறை ஏற்கனவே இன்னொருவர் பயன்படுத்தியதா..? :அதிர்ச்சி ரிப்போர்ட்

நன்றி குங்குமம்

நீங்கள் பயன்படுத்தும் ஆணுறை ஏற்கனவே இன்னொருவர் பயன்படுத்தியது என்றால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?!பயப்பட வேண்டாம். நல்ல வேளை இன்னமும் இந்த நிலை இந்தியாவில் வரவில்லை என நம்புவோம்.

அனைத்து விதமான தொழிலுக்கும் முதல் விற்பனைத் தளம் இந்தியா என்பதாலும் தேவை அதிகம் இருப்பதாலும் எந்தவொரு பொருளின் உற்பத்தியும் அதிகம். இதுவே பஞ்சம், வறட்சி, பொருளாதார அளவில் பின்தங்கிய ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் ஆணுறைக்குக் கூட மக்கள் செலவிட முடியாத அளவிற்கு வாடுகின்றனர் என்பதே சோகம். இதனால் குப்பையில் சேகரிக்கப்பட்ட ஆணுறைகளை மீண்டும் மறுசுழற்சிக்கு உட்படுத்தி மறுவடிவம் கொடுத்து விற்பனைக்கு வைக்கிறார்கள் என்னும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

அப்படித்தான் வியட்நாமில் உள்ள போலீசார் ஹோ சி மின் நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு கிடங்கில் சோதனை நடத்தியுள்ளனர், அங்கு பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் தண்ணீரில் கொதிக்கவைக்கப்பட்டு, உலர வைக்கப்பட்டு, மரத்தால் ஆன டில்டோஸ் உதவியுடன் மறுவடிவமைக்கப்பட்டு, சட்டவிரோதமாக விற்கப்பட்டு வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையில் பயன்படுத்தப்பட்ட 3 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆணுறைகள் பறிமுதல் செய்யப்பட்டன. உரிமையாளர் என்று நம்பப்படும் 34 வயது பெண் கைது செய்யப்பட்டார்.

அந்தப் பெண்ணிடம் நடத்திய விசாரணையில், மறுசுழற்சி செய்யப்பட்ட ஆணுறைகள் ஒரு கிலோவிற்கு இந்திய ரூபாயில் ரூ.13க்கு விற்பதாக சொல்லியிருக்கிறார். இதன் அடிப்படையில், பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் ஒருவரிடமிருந்து மாதாந்திர அடிப்படையில் வாங்கப்பட்டுள்ளன.

பயன்பாட்டிற்குப் பிறகு குப்பைகளில் போடப்படும் ஆணுறைகளை சிறுவர்களைக் கொண்டு சேகரித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் இம்மாதிரியான சட்ட விரோத செயல்கள் நடக்க வாய்ப்பு உண்டா... என்ற கேள்வி எழவே சிலரை தொடர்பு கொண்டோம்.

பெயர் குறிப்பிட விரும்பாத பாலியல் தொழிலாளி ஒருவர் இத்தகவலைக் கேட்டு முதலில் அதிர்ந்தார். ‘‘நாங்கள் ஒரு குழுவாக ஏஜென்சியில் தொழில் செய்வதால் அங்கே இந்த ஆணுறைகள் தனியாக ஓரிடத்தில் சேகரிக்கப்படுவது வழக்கம். ஆனால், பயன்படுத்தப்பட்ட அந்த ஆணுறைகள் எங்கே எடுத்துச் செல்லப்படுகின்றன என்று தெரியாது.

எங்களிடம் வரும் நபர்கள் பெரும்பாலும் அவர்களே ஆணுறைகளை கொண்டு வருவார்கள். அல்லது எங்களை அழைத்துச் செல்லும்போது வழியில் வாங்குவார்கள். இதுதவிர எங்கள் கைவசம் எப்பொழுதும் நாங்கள் ஆணுறைகளை வைத்திருப்போம். மற்றபடி பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் மறுசுழற்சியில் புதிய ஆணுறைகளாக வருகின்றன என்ற தகவல் இதுவரை நாங்கள் கேள்விப்படாதது... நினைத்தும் பார்க்காதது...’’ என்றார்.

உண்மை நிலை அதுவே. நம் போன்ற மக்கள் தொகை அதிகமாக உள்ள நாடுகளில் ஆணுறை அத்தியாவசியம் என்பதால் விலையும் குறைவு. இதனால் பயன்படுத்தப்பட்ட ஆணுறை விற்கும் அவசியம் இங்கே இல்லை. அதேபோல் சானிட்டரி நேப்கின்களுக்குக் கூட ஜிஎஸ்டி உண்டு, ஆனால் ஆணுறைக்கு இங்கே வரி கிடையாது.

சரி; ஆணுறையைப் பொறுத்தவரை நம் நாட்டின் மனநிலை எப்படி இருக்கிறது, ஒருவேளை பயன்படுத்திய ஆணுறைகளை மற்றொருவர் பயன்படுத்துகையில் எவ்விதமாக பிரச்னைகள் முதலில் பெண்களுக்கு ஏற்படும்... அதை எப்படி எப்படித் தடுக்கலாம் என விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் காவ்யா கிருஷ்ணகுமார்.

‘‘இந்தியாவைப் பொறுத்தவரை குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷனைக் கூட பெண்களே ஏற்றுக்கொள்கின்றனர். ஆண்கள் இன்றளவும் அதற்கு தயார் இல்லை. இரண்டு குழந்தை பிறந்துவிட்டால் பின் பெண்தான் தன் பெண் தன்மையைக் கட்டுப்படுத்திக் கொண்டாக

வேண்டும். அதேபோல் சில ஆண்கள் தாம்பத்தியத்தின்போது முழுமையான சுகம் கிடைப்பதற்காக ஆணுறை பயன்பாட்டை விரும்புவதில்லை. இதனால் ஆணுறையால் உண்டாகும் பிரச்னை இங்கே குறைவுதான்.

ஒருவேளை ஒருவர் பயன்படுத்திய ஆணுறையை இன்னொருவர் பயன்படுத்தினால் அதன் மூலம் பாலியல் தோற்றுகள் உண்டாக வாய்ப்புகள் அதிகம். பெண்ணுறுப்பில் அரிப்புத் துவங்கி, வெடிப்புகள் என பிரச்னைகள் வளர்ந்து கர்ப்பப்பை கிருமித் தொற்று வரை கூட இந்தத் தொற்று நீளும்.

இதில் அதிகம் பாதிப்பு பெண்களுக்கே. காரணம், பெண்ணின் உறுப்புதான் உடலுக்குள் இருக்கின்றது. கர்ப்பப்பை மட்டுமின்றி அதன் சுற்று உறுப்புகளும் கூட இதனால் பிரச்சனைக்கு ஆளாகலாம்.

குழந்தைக்காக முயற்சி செய்யும் தம்பதியர்களுக்கு பிரச்னை இல்லை. எது எப்படியோ, ஆணுறை உபயோகித்தால் எப்போதுமே உறவிற்குப் பின் தகுந்த முறையில் சுத்தம் செய்வது நல்லது. இப்போது வேறு பல ஃபிளேவர்கள், வகைகள் என வருவதால் அதில் பயன்படுத்தப்படும் ஃபிளேவர்கள் கூட சில பெண்களுக்கு பிரச்னை உண்டாக்கலாம் என்பதால் எப்போதும் நீர் கொண்டு சுத்தம் செய்வது நல்லது.

இதற்கென பிரத்யேக வாஷ்கள் பெண்களுக்காக இருக்கின்றன. அவற்றைக் கொண்டும் சுத்தம் செய்து கொள்ளலாம்...’’ என்றார். ஆண்களில் இவை எப்படிப்பட்ட பிரச்னைகளை உண்டாக்கும் என பகிர்ந்தார் சிறுநீரக மற்றும் ஆண்ட்ரோலஜிஸ்ட் மருத்துவர் சிவசங்கர்.

‘‘மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டம் 1940 - 1945ன் படி ஆணுறைகள் நம் நாட்டில் முறைப்படி விற்கப்படுகின்றன. அனைத்து ஆணுறைகளும் IS/ISO தரச்சான்றுகளுடன்தான் விற்கப்படுகின்றன. நிரோத்கள் அல்லது ஆணுறைகள் என அழைக்கப்படும் இவற்றை லேட்டக்ஸ் மெட்டீரியல்களில் தயாரிக்கின்றனர்.

பெரும்பாலும் கடினமான டெக்சர்கள் உள்ள ஆணுறைகளைவிட டெக்சர்கள் இல்லாதவை கொஞ்சம் நம்பகத்தனமானவை. ஏற்கனவே பாக்கெட்டுகள் பிரிக்கப்பட்டிருக்கின்றனவா எனப் பார்த்து வாங்குவது நல்லது. மேலும் ஆணுறை பேக்குகள் பஞ்சராகியோ அல்லது மிருதுத் தன்மை இழந்து வறண்டோ இருந்தால் அதை வாங்காமல் இருப்பது நல்லது.  

போலவே காலாவதியாகும் தேதி பார்த்து வாங்க வேண்டும். இரண்டு வருட காலம் வரை அதிகபட்ச கால அவகாசம் இருக்கும். ஒவ்வொரு முறையும் புதிதான ஆணுறை பயன்பாடு முக்கியம். பழுதடைந்த அல்லது பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் மூலம் பாலியல் நோய்கள் தொற்று முதல் எச்ஐவி தொற்று வரை கூட ஏற்படலாம். எனினும் நம்மூரில் இம்மாதிரியான மறுசுழற்சி வகை ஆணுறைகள் கிடையாது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில்தான் அவை புழக்கத்தில் இருக்கின்றன.

மேலும் நம் நாட்டில் அரசாங்கமே குறிப்பிட்ட சுகாதார மையங்கள் மூலமாகவும், மலைவாழ் பிரேதசங்கள் உள்ளிட்ட இடங்களில் சமூக அமைப்புகள் மூலமாகவும் இலவச ஆணுறைகளை வழங்குகின்றன.எனவே, நம்மூரில் இப்போதைக்குப் பிரச்னை இல்லை என்று மட்டுமே சொல்ல முடியும்...’’ என்கிறார் டாக்டர் சிவசங்கர்.

ஷாலினி நியூட்டன்

Related Stories:

>