×

நக்சலைட்களுக்கான கால்சென்டர்!

நன்றி குங்குமம் தோழி

அது ஒரு கால்சென்டர் நிறுவனம். அதில் பணியாற்றும் பெண்கள் கரடு முரடானவர்கள். கடந்த ஆண்டு வரை  வனப்பகுதியில்  ஆயுதங்களை கையில் ஏந்தி வலம் வந்தார்கள். இன்று இவர்கள் கைகளில் கம்ப்யூட்டர் புகுந்து விளையாடுகிறது. சட்டீஸ்கரின், பஸ்தார்  பகுதியில் இயங்கி வருகிறது ‘யுவா’ கால்சென்டர் நிறுவனம். இந்த கால்சென்டர் நிறுவனத்தை திருந்தி வாழ விரும்பும்  நக்சலைட்களுக்காக மாநில அரசே ஏற்படுத்தி தந்துள்ளது. சட்டீஸ்கரின் முதலமைச்சரான ராமன் சிங்க்தான் இதனை துவங்கி வைத்தார்.  இதன் மூலம் அவர்களை நல்வழிப்படுத்தவும் செயல்படுகிறது.

சட்டீஸ்கர்  என்றதும் நக்சல்கள்தான் நம் நினைவுக்கு வருகின்றனர். இங்கு நிலவும் வேலை வாய்ப்பின்மை மற்றும் வறுமையை ஒரு  கூட்டம் தவறாக பயன்படுத்தி அவர் களை நக்சல் தீவிரவாதிகளாக மாற்றி வருகிறது.   குறிப்பாக தண்டேவாடா, பஸ்தார், பிஜாப்பூர்,  நாராயண்பூர், கான்கர், தாண்டர் உள்ளிட்ட பகுதிகளில் நக்சல்  நடமாட்டம் அதிகம். தண்டேவாடா பகுதியில் பழங்குடியின மக்கள் அதிகம்.  அவர்களது வறுமையை பயன்படுத்தி தீவிரவாதிகளாக மாற்றுவதை தடுத்து அவர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் நோக்கில் கடந்த   ஆண்டு டிசம்பரில் மாநில அரசு பஸ்தார் பகுதியில் இந்த கால் சென்டரை தொடங்கியது. யுவா என்ற பெயரில்  தொடங்கப்பட்டுள்ள இந்த  கால் சென்டரில் இதுவரை 500க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.  

அவர் களுக்கு தகுதியான வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பா இளம் பெண்களுக்கு. ஆங்கில வார்த்தைகளும் அதன்  உச்சரிப்புகளும் இங்கு கற்றுக் கொடுக்கப்படுவதுடன் ஸ்கில் டெஸ்ட், கம்ப்யூட்டர், தட்டச்சு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. பின்னர்  ஐதராபாத் அழைத்து செல்லப்பட்டு, ஒரு மாத சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு, பணியில் அமர்த்தப்படுகின்றனர். பயிற்சியின் போது  ரூ.4,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதனால் அவர்களின் வாழ்வாதாரத்துக்கு பிரச்னை இல்லை. இந்த கால் சென்டர் உள்நாடு  மற்றும் வெளிநாட்டு வங்கிகளுக்கு பி.பி.ஓ சேவையும் வழங்குகிறது.

கால் சென்டரில் வேலை பார்க்கும் பெரும்பாலான பெண்கள் நக்சல் இயக்கத்தில் இருந்து திரும்பியவர்கள்.    ஆயுதங்களை கீழே போட்டு  விட்டு வரும் இந்த இளம் பெண்களுக்கு இப்போது புகலிடம் தருவது யுவா கால்சென்டர் தான். இளவயதினருக்கு வேலை வாய்ப்பை  வழங்குவதன் மூலம் தண்டேவாடாவில் நக்சல்களின் ஆதிக்கம் குறையும் என்று நம்புவதாகவும், சட்டீஸ்கரின் மிகப்பெரிய ‘கால் சென்டர்’  என்ற பெருமையையும் இந்த கால் சென்டர் பெற்றுள்ளதாகவும் பெருமையுடன் குறிப்பிடுகிறார் தண்டே வாடா கலெக்டர் சுரப் குமார்.  நக்சல்களை நல்வழிப்படுத்தும் ‘யுவா’வின் சேவை பாராட்டுக்குரியதுதானே!

-கோமதி பாஸ்கரன்

Tags : Naxalites ,
× RELATED சத்தீஸ்கர் கான்கேர் மாவட்டத்தில் 18...