நில் கவனி பயணி...

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

மகனின் உடல் உறுப்புக்களை தானம் செய்ய முன் வந்த தாய்!

கடந்த அக்டோபர் 30 காலை, சென்னை ஆவடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் +2 படித்து வந்த மாணவன் கோகுல்நாத், தன்  அப்பாவுடன் இருசக்கர வாகனத்தில் பின்னாள் அமர்ந்து பயணிக்க, வீட்டில் இருந்து கிளம்பிய பத்து நிமிடத்தில் சாலை விபத்தில்  சிக்கியிருக்கிறார். வண்டியோடு கீழே விழுந்த கோகுல்நாத்தின் அப்பா சுதாரித்து எழுவதற்குள், மாணவன் கோகுல்நாத் தலையில் அடிபட்ட  நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்திருக்கிறார். அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கோகுல்நாத்தின் நிலை  மோசமாக இருக்க, அங்கிருந்த மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில், உயிருக்குப் போராடிய கோகுல்நாத்தை சுமந்து சென்ற ஆம்புலன்ஸ்  வாகனம், அறிவிப்பு செய்தபடியே போக்குவரத்தின் எதிர் திசையில் பயணிக்க, 20 நிமிடங்களில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்டுள்ளார் கோகுல்நாத்.

ஆபத்தான கட்டத்தை கடக்காமலே, ஐந்து நாட்களும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தவரின் உடல்நிலை மேலும்  மோசமடைய, நவம்பர்  5ம் தேதி மாலை இறுதி கட்டத்தை நோக்கிச் சென்றிருக்கிறார்.மருத்துவர்கள் கோகுல்நாத்தின் பெற்றோர்களை அழைத்து அவருக்கு  மூளைச்சாவு(brain death) ஏற்பட்டுள்ள நிலையை விளக்கியுள்ளனர். பெற்றோர் விரும்பினால் உயிர் இருக்கும் போதே, உறுப்புக்களைத்  தானம் செய்யலாம் என ஆலோசனை சொல்லப்பட, கோகுலின் அப்பாவிற்கும், அண்ணனுக்கும் கோகுலின் உயிரோட்டம் இருக்கும்  நிலையில் உறுப்புகளை நீக்குவதில் தயக்கம் ஏற்பட்டுள்ளது.  ஆனால், அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியராய்  பணியில் இருக்கும் கோகுல்நாத்தின் அம்மாவான சசிகலா, சூழலை உணர்ந்தவராய் தன்னைத் திடப்படுத்தி தைரியமான முடிவை  எடுத்திருக்கிறார்.

சாலை விபத்தால் இறப்பை நோக்கி நழுவிக்கொண்டிருக்கும் என் மகனின் உயிரற்ற உடலை பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தித்தான்  மருத்துவர்கள் ஒப்படைக்கப் போகிறார்கள். எனவே மூளைச் சாவு அடைந்த நிலையில், அவன் உயிர் இருக்கும்போதே உறுப்புகளை தானம்  கொடுத்துவிடலாம் என முடிவு செய்து சம்மதித்துவிட்டேன் என விசும்பத் தொடங்கினார் சசிக்கலா. சசிகலாவின் தைரியமான முடிவால்,  மண்ணுக்குள் மக்கப் போகும் மகனின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு இன்று 6 உயிர்கள் வாழ வழி கிடைத்திருக்கிறது.

விபத்தினால் கோகுல் நாத்தின் இதயமும் ஒரு கண்ணும் பாதிப்படைந்திருக்க, அவரது ஒரு கண், இரண்டு சிறுநீரகம், லிவர், வால்வு என  அவரின் உடலில் இருந்து ஆறு உறுப்புக்கள் தானமாகப் பெறப்பட்டுள்ளது.

விபத்து குறித்து மேலும் பேசிய கோகுல்நாத்தின் அம்மா சசிகலா… ‘‘என் கணவர் பெயர் நாகராஜன். எனக்கு ஜெகன்நாத், கோகுல்நாத் என  இரண்டு மகன்கள். பெரியவன் பொறியியல் படிக்கிறான். என் சின்ன மகன் கோகுல் மிகவும் நன்றாகப் படிக்கும் மாணவன். அவனுக்குள்  எத்தனையோ கனவுகள். ஆசைகள். போட்டோ எடுப்பது அவனுக்கு மிகவும் பிடித்தமான வேலை. +2 முடித்து விஷுவல் கம்யூனிகேஷன்  படிக்க விரும்பினான்.எனக்கு பெண் குழந்தை இல்லை என்கிற நிலையை அவன்தான் தீர்த்து வைத்தான். வீட்டு வேலைகளில் எனக்கு  நிறைய உதவியாக இருப்பான். எங்கள் குடும்பத்திற்கே அவன் செல்லப் பிள்ளையாக இருந்தான். வீட்டுக்குள் நுழையும்போதே அம்மா  பசிக்கிது என்று சொல்லிக்கொண்டேதான் நுழைவான். எப்போதும் சிரிப்பதுதான் அவனின் அடையாளம். யாரையும் கஷ்டப்படுத்த  நினைக்கவே மாட்டான்.

அன்றைய தினமும் வழக்கம்போல் பள்ளிக்கு கிளம்பியவனை நான்தான் வழியனுப்பி வைத்தேன். அவனது அப்பாதான் இருசக்கர  வாகனத்தில் அவனை அழைத்துச் சென்றார். இத்தனைக்கும் அவர்கள் சென்ற வண்டி பெண்கள் ஓட்டும் கியர்லெஸ் வண்டிதான். என்  வீட்டுக்காரர் மிகவும் மெதுவாக நிதானமாகத்தான் வண்டியை செலுத்துவார். விபத்து நடந்த நேரத்தில் நாய் ஒன்று குறுக்கே வர, இவர்  பிரேக்கை பிடித்திருக்கிறார். அப்போது ஆட்டோ ஒன்று இருசக்கர வாகனத்தில் இடிக்க, நிலைதடுமாறி வண்டியோடு இருவரும் கீழே  விழுந்துள்ளனர். என் கணவர் லேசான காயங்களோடு சுதாரித்து எழுந்து பார்த்தபோது, கோகுல் ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்திருக்கிறான்.  உடலில் எங்கும் அடிபடாத நிலையில், அவனது தலையின் வலது பகுதியில் மூளை இருக்கும் பக்கத்தில் ஸ்கல் ஓப்பனாகி ரத்தம் அதிகமாக வெளியேறியுள்ளது.

விபத்து நடந்த இடம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த குறுகிய சாலை. அந்தப் பகுதியில் மூன்று டாஸ்மாக் கடைகள் உள்ளன. டாஸ்மாக்  கடைக்கு மது அருந்த வருபவர்களின் வாகனங்கள் எப்போதும் இரண்டு பக்கமும் நிறுத்தப்பட்டு சாலைகளை ஆக்கிரமித்துக்  கொண்டிருப்பதால் மாலை நேரமான நான்கரை மணி முதல் இரவு பத்து மணி வரை போக்குவரத்து நெரிசல் அங்கு அதிகமாகவே  இருக்கும்.  அதேபோல் ஆவடி வேல்டெக் இஞ்சினியரிங்  கல்லூரி மாணவர்கள் அதிகமாக அந்தச் சாலையில் பயணிப்பதால் காலை ஏழு மணி முதல் ஒன்பதரை மணிவரை அந்தப்  பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசலோடு இருக்கும். சாலையின் நடுவில் டிவைடர் கிடையாது. எதிரில் வரும் வண்டிகளால் ஆபத்துக்கள் எப்போதும் நிறையவே இருந்தது. கல்லூரி மாணவர்களும் அடிக்கடி  விபத்துக்குள்ளாவார்கள்.

கோகுல் விபத்துக்குள்ளான இரண்டே நாளில் கல்லூரிப் பேராசிரியர் ஒருவரும் அதே இடத்தில் விபத்தில் சிக்கியுள்ளார்’’ என முடித்தார்.துள்ளிக் குதித்து ஓடிவந்து பின் இருக்கையில் தன்னைப் பிடித்துக்கொண்டு ஏறியமர்ந்த மகன், தன் கண் முன்னால் சிதைந்துபோன  சோகத்தில் இருந்து வெளிவராத நிலையிலேயே இருந்தார் கோகுல்நாத்தின் தந்தை.கட்டுப்பாடின்றி வாகனங்களை ஓட்டி விபத்தை  ஏற்படுத்துவதும், விளைவைப் பற்றி சிந்திக்காமல் ஒரே பைக்கில் குழந்தைகளை சுமந்து கொண்டு பாதுகாப்பில்லாமல் குடும்பமாகப்  பயணிக்கும்போதும், எதிர்பாராமல் நிகழும் விபத்தால் வாழ்க்கையே திசைமாறிப் போவது நிதர்சனம்.போக்குவரத்து விதிகளும், சட்டங்களும்  நமக்கானவைதான். பாதுகாப்பாய் பயணிப்போம்.

-மகேஸ்வரி

படங்கள்:ஏ.டி.தமிழ்வாணன்

மூளைச் சாவு என்பது...

*    ஒருவர் உயிரோடு இருந்தாலும், மூளை முற்றிலும் செயல்படாத நிலையே மூளைச் சாவு.

*    மூளைச்சாவு மரணம் அடைதலுக்குச் சமம். ஒருவர் மீண்டு வர முடியாத நிலை. மூளைச்சாவு அடைந்தவர் இதயம் துடித்தாலும்  அவரால் சுயமாக மூச்சுவிட இயலாது.

*    பெரும்பாலான மூளைச் சாவுகள் விபத்து மூலம் ஏற்படுவதால், அனுமதி பெறுதல் இதில் மிகவும் முக்கியம். மருத்துவ  அதிகாரிகள் காவல் துறையிடமிருந்தும் தடயவியல் துறையிடமிருந்தும் அனுமதி பெற வேண்டும்.

*    அங்கீகரிக்கப்பட்ட நரம்பியல் நிபுணர், மருத்துவமனையின் தலைவர், நோயாளிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், இதில்  சம்பந்தப்படாத மூன்றாம் மருத்துவர் என நான்கு மருத்துவர்கள் கொண்ட குழு விலாவாரியான செயல்முறை மூலம் ஒருவர் மூளைச்  சாவை அடைந்துள்ளார் என உறுதி படுத்துவர்.

*    மூளையின் செயல்பாட்டை அறிந்து கொள்ள நரம்பு சம்பந்தப்பட்ட ஆய்வுகள், மூளைத்தண்டின் செயல்பாடு ஆகியவை  பரிசோதிக்கப்படுகிறது. பரிசோதனைகள் மீண்டும் மீண்டும் செய்யப்பட்டு, முடிவுகள் ஒரே மாதிரியாக வரும் நிலையிலேயே உறுப்பு தானம்  பற்றி குடும்பத்தாரிடம் ஆலோசகர்கள் பேசுவர்.

*    இதயம், இரண்டு நுரையீரல், கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், தோல், கருவிழி, தசை நாண்கள், எலும்புகள், குடல் என  பெரும்பாலும் எல்லா உறுப்புகளையும் தானமாக அளிக்க முடியும்.

*    ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் பேருக்கு சிறுநீரகங்கள் தேவைப்படுகின்றன. ஆனால், சுமார் 6,000 சிறுநீரகங்கள் மட்டுமே இருப்பில்  உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்லீரல், இதயம் ஆகியவற்றின் தேவையும் அதிகமாக உள்ளது.

Related Stories: