மனசை லேசாக்கும் அரோமா தெரபி!

நன்றி குங்குமம் தோழி

அடுப்பில் சாம்பார் கொதிக்கும் போது, அந்த வாசனை நம் நாசியை வருடுவது மட்டுமில்லை, பசியையும் தூண்டும். ஒவ்வொரு  நறுமணத்திற்கும் ஒரு உணர்வுண்டு. ‘‘மூளையோட ஒரு பகுதியை தாக்கி நம்ம உடல்ல மாற்றங்களை ஏற்படுத்தறதுல மணத்துக்கு  முக்கிய பங்கிருக்கு...’’ என்கிறார் டாக்டர் பிளாசம் கொட்சர். கடந்த இருபத்தேழு வருடமாக அரோமா தெரபியில் தனக்கென ஓர் இடத்தை  பிடித்துள்ளார்.

‘‘வாசனை வழியா மூளை, சருமம், மனம் மூன்றையும் ஒருங்கிணைப்பது தான் அரோமா தெரபி. ஒவ்வொரு வாசனைக்கும் தனித்தன்மை  உண்டு. ஒவ்வொன்றும் நம்ம உடல் உறுப்புகளை ஊக்குவித்து, உடல் பிரச்னைக்கு தீர்வு அளிக்குது. இந்த சிகிச்சைக்கு முக்கிய மருந்தே  பலவகையான எண்ணெய்கள் தான். ஒவ்வொரு எண்ணெயும் நம் உடல்ல சேரும் போது ஒரு பலனை அளிக்கும். இந்த சிகிச்சையை முதன்  முதல்ல கடாபோஸ் என்ற பிரென்ச் விஞ்ஞானி கண்டுபிடிச்சார். ஒருமுறை அவர் ஆராய்ச்சில இருந்த போது கைல நெருப்புக் காயம்  ஏற்பட்டது. தன்னை அறியாம பக்கத்துல இருந்த எண்ணெய் பாத்திரத்துல கையை விட்டார்.

அது லாவண்டர் எண்ணெய். அதன் பின் நடந்தது எல்லாம் மேஜிக். வடுவே இல்லாம அந்த காயம் சிக்கிரமே குணமாச்சு. அதை தொடர்ந்து   பல ஆய்வுகளை மேற்கொண்டார். இயற்கை பொருட்களான பூ, காய், கனி மற்றும் மரப்பட்டைன்னு எல்லா எண்ணெய்களையும் தயாரிச்சார்.  ஒவ்வொரு எண்ணெயும் ஒரு நோய்க்கு பயன்படுத்தினார். இதன் அடுத்தக் கட்டமா முதல் உலகப் போர்ல காயம் பட்ட ராணுவ வீரர்களுக்கு  அரோமா தெரபி வழியா சிகிச்சை அளித்தார்.அதன் பிறகு இந்த தெரபி உலகம் முழுதும்  ஃபேமஸ் ஆச்சு...’’ என்று சொல்லும் பிளாசம்,  இந்தத் துறைக்கு வர காரணமே அவருக்கு அழகுக் கலை மேல் இருந்த ஈடுபாடுதான்.

‘‘பிறந்தது வளர்ந்தது எல்லாம் நீலகிரி மாவட்டம். அது குளிர்பிரதேசம், வீட்ல எப்பவும் யூகலிப்டஸ் தைலம் இருக்கும். சளி பிடிச்சா  உடனே அம்மா அந்த தைலத்தை மூக்குல தடவுவாங்க. அதே மாதிரி பரீட்சை சமயத் துல டென்ஷனா இருப்பேன். அப்போ  தலையணையில லாவண்டர் ஆயிலை ஒரு சொட்டு விடுவாங்க. காலைல ஃப்ரெஷ்ஷா இருக்கும். இப்படி வாசனையோட வளர்ந்த எனக்கு  பள்ளில படிக்கிறப்ப அழகுக்கலை மேல ஆர்வம் வந்தது. அப்ப பெங்களூர்ல ஹாஸ்டல்ல தங்கி படிச்சுட்டு இருந்தேன். என் தோழிக்கு  நீளமான முடி. அதை கொஞ்சம் கத்திரிக்கும்படி சொன்னா. நானும் டிரிம் செய்தேன். அது நீளமும் குட்டையுமா இருந்தது. போராடி சரி  செய்தேன். அப்பதான் சாதாரணமா முடி வெட்டறது இவ்வளவு கஷ்டமா. இது பற்றி நாம படிச்சா நிறைய பேர் நம்மை தேடி வருவாங்க.  அவங்கள அழகு செய்யலாம்ன்னு தோணுச்சு. அம்மாகிட்ட இது பத்தி சொன்னேன்.

‘‘முடி வெட்டறது பெண்கள் வேலை இல்ல. வேணாம்ன்னு சொல்லிட்டாங்க’’ என்று சொல்லும் பிளாசம், திருமணத்திற்கு பிறகுதான்  அழகுக்கலையை படித்துள்ளார்.‘‘என் கணவருக்கு ராணுவத்துல வேலை. அங்க ராணுவ அதிகாரிகளின் மனைவிகளுக்கு சிறப்பு பயிற்சி  அளிப்பாங்க. அதுல அழகுக்கலையும் இருந்தது. என்னோட பள்ளிக்கால கடைசியில் நிறைவேறியது. அழகுக்கலையோட சிகை  அலங்காரமும் படிச்சேன். பொதுவா எந்த பயிற்சி எடுத்தாலும் அதை முறையா செயல்படுத்தும் போதுதான் முழுமையா அதை தெரிஞ்சுக்க  முடியும். ராணுவ குடியிருப்புல இருந்த குழந்தைகளுக்கு முடி வெட்ட ஆரம்பிச்சேன். ஒருமுறை ஒருத்தருக்கு புருவத்தை திருத்தறேன்னு  மொத்தமா புருவத்தையும் நீக்கிட்டேன். என்ன செய்யறதுனு தெரியலை. புருவம் வரையற பென்சிலை கொடுத்து, ‘சாரி... இதை வைச்சு  சமாளிங்க’னு சொன்னேன். ‘தப்பு செய்தாலும் அதுக்கான தீர்வு என்னனு உனக்கு தெரியுது. நீ கண்டிப்பா ஜெயிப்பே’ன்னு சொன்னார்’’ என்று  சிரிக்கும் பிளாசம், எந்த வாசனை என்ன பலனை தரும் என்று பட்டியலிட்டார்.

‘‘எண்ணெய்களை நுகரும்போது, சருமத்துல தடவும்போது அதுல இருக்கிற மருத்துவ குணம் நம்ம உடலுக்கு தேவையான நன்மைகளை  செய்யும். டென்ஷனோடு இருக்கும் போது லாவண்டர் எண்ணெய் மனசை ஃப்ரெஷ்ஷாக்கும். மல்லிகைப் பூ வாசனை மனசுக்கு இதம் தரும்.  இதையே குளிக்கும் நீரில் பயன்படுத்தினா சருமம் நெகிழாமல் இருக்கும்.ஆரஞ்சு பழத்திலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் மன  உளைச்சலுக்கு நல்லது. தலை முடிக்கு ரோஸ்மேரி. குளிச்ச பிறகு தண்ணீர்ல ரெண்டு சொட்டு எண்ணெயை ஊற்றி அலசினா, முடி  கொட்டாது. பளபளப்பா இருக்கும். சருமத்துல உள்ள காயத்தை லாவண்டர் போக்கும். தழும்பு ஏற்படுவதை தவிர்க்கும். இந்த எண்ணெ ய்கள்  எல்லாம் ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்படுவதால், அழகு சாதன பொருட்களுடன் பயன்படுத்தலாம்.  ரசாயன பொருட்கள் இல்லை  என்பதால் சரும பாதிப்பு ஏற்படாது.

அழகுக்கு மட்டும் இல்லை காயங்களுக்கும் நல்ல மருந்து. கரும்புள்ளி, வெட்டுக்காயம், தீ காயங்களுக்கு முன்னாடியே சொன்ன மாதிரி  லாவண்டர் நல்லது. இந்த எண்ணெய்கள் அடர்த்தியா இருக்கும். ஸோ, தண்ணீர் அல்லது கிரீம்ல தடவி பயன்படுத்தலாம். முக்கியமான  விஷயம், ஒவ்வொரு சருமத்துக்கு ஏற்ப சிகிச்சையும் மாறுபடும். அதனால உரிய ஸ்காலர்ஸ் கிட்ட கேட்காம உபயோகிக்கக் கூடாது’’ என்ற  பிளாசம், வீட்டிலேயே சில எண்ணெய்களை தயாரிக்கலாம் என்றார்.‘‘நம்ம பாட்டி, அம்மா காலத்துல தலைக்கு தேய்க்கும் எண்ணெயை  வீட்டில்தான் காய்ச்சுவாங்க. கறிவேப்பிலை, தேங்காய் மாதிரியான பொருட்களை ஒண்ணா கலந்து தயாரிப்பாங்க.

கறிவேப்பிலை முடியை கருமையா வைக்கும். அதனாலதான் சாப்பாட்டுல அதிகமா கறிவேப்பிலையை சேர்த்துக்கறோம். சின்ன  வெங்காயத்தை அரைச்சு தலைல தடவினா, முடி உதிர்வது குறையும். மூக்கடைப்புக்கு லட்சுமி துளசி நல்லது. லெமன் கிராஸ்  எண்ணெயை வீடுகள்ல, பல்புகள்ல தடவலாம். கொசுவோ, சின்னச் சின்ன பூச்சிகளோ வராது. சுருக்கமா சொல்லணும்னா இந்த  எண்ணெய்கள் எல்லாமே அந்தக் காலத்துல நம்ம வீடுகள்ல இருந்ததுதான். நம்ம மூதாதையர்கள் பயன்படுத்தினது. நாகரிகம் என்ற பேர்ல  அதை நாம மறந்துட்டோம். மறுபடியும் நாகரிகம் என்ற போர்வையிலேயே இதை வீடுகளுக்குள்ள கொண்டு போகணும். அதுதான் என்  ஆசை’’ என்கிறார் அரோமா தெரபி நிபுணர் டாக்டர் பிளாசம் கொட்சர்.

-ப்ரியா

Related Stories: