சரும பளபளப்புக்கு ஓட்ஸ்

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

மழைக்காலம் வந்து விட்டாலே குளிரும் உடன் வந்து விடும். குளிரினால் சிலருக்கு உதடுகளில் வறட்சி ஏற்பட்டு பிளவுகள் உண்டாகும்.  கை கால் வறண்டு போகும். சருமத்தைக் கீறினால் வெள்ளை வெள்ளையாக கோடுகள் தென்படும். சிலருக்கு முகம் கறுத்துப் போகும்.  மழைக் காலத்தில் நம் அழகைப்  பாதுகாக்க நாம் என்னவெல்லாம் செய்யலாம்... என்ன செய்யக்கூடாது என்று விளக்குகிறார் அழகியல்  நிபுணர் வீணா குமரவேல்.

*    மிதமான சூட்டில் குளிக்க வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒரு முறை தலைக்கும் மிதமான சூடுள்ள நீரில் குளிக்க வேண்டும்.  ரொம்ப சூடான நீரில் குளிக்க வேண்டாம். அது உங்கள் தலைமுடியை பாதித்து பலவீனமாக்கிவிடும், மற்றும் தோலையும் பாதிக்கும்.

*    ரசாயன கலப்பு அதிகமில்லாத ஊட்டச்சத்து மிகுந்த ஷாம்புவையும் கண்டிஷனரையும் பயன்படுத்த வேண்டும்.

*    இறுக்கமாக பின்னல் போடுவதோ அல்லது இறுக்கிக் கட்டுவதோ வேண்டாம். முடியை தளர்வாக பின்னலிடலாம்.

*    மழையில் நனைந்துவிட்டால் அப்படியே தலையை காயப்போடாமல் தலைக்குக் குளித்துப் பின் முடியை நன்கு துவட்டி விடுவது நல்லது.

*    நம் உடலைப் போலவே தலைக்கும் நீர்ச்சத்து தேவை. அதனால் தண்ணீர் அதிகம் குடித்து உடலை நீர்ச்சத்துடன் வைப்பது  தலைமுடிக்கும் நல்லது.

*    மழைக்காலத்தில் காற்றில் இருக்கும் ஈரப்பதம் மண்டையோட்டை எண்ணெய் பசை உடையதாகவும், முடியை சிக்காக்கும்  தன்மையும் கொண்டது. எனவே ஈரப்பதமற்ற தலை முடி இருப்பவர்கள், அரிப்பு மற்றும் பொடுகு பிரச்னை இருப்பவர்கள், பாதாம் எண்ணெய்  அல்லது தேங்காய் எண்ணெயில் வேப்பெண்ணெய் (வேப்பெண்ணெய் ஒரு ஆன்டிபாக்டீரியல்) கலந்து தலைமுடிக்குத் தேய்த்து வரவேண்டும்.

*    மழை நேரத்தில் முடி உடையாமல் இருக்க, பெரிய பற்கள் கொண்ட சீப்பை பயன்படுத்த வேண்டும்.

*    இந்த சீசனில் தலை முடி மிகவும் எளிதில் உடைய அல்லது உதிரக்கூடிய நிலையில் மிகவும் பலவீனமாக இருக்கும். எனவே  தலைமுடியை காய வைக்க மிக அதிகமான சூட்டைப் பயன்படுத்தாதீர்கள். மிதமான சூட்டில் வைத்து ஹேர் ட்ரையரை பயன்படுத்தவும்.  அல்லது முடி பாதி உலர்ந்ததும் ட்ரையரை நிறுத்திவிடவும்.

*    மழை சீசனை பொறுத்த மட்டில் முடி பலவீனமாவது மட்டுமில்லாமல் சிக்காகிவிடும். எனவே தலைக்குக் குளிக்கும் முன்  தலையில் எண்ணெய் வைத்து ஊற வைக்க வேண்டும். உங்கள் முடிக்கு ஊட்டச்சத்தளிக்க பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய்  எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி உச்சந்தலை மற்றும் தலைமுடியின் முழு நீளத்துக்கும் அதாவது முழுமையாக தடவி 45 நிமிடங்களுக்கு  ஊற வைத்துப் பின் தலைக்குக் குளிக்க வேண்டும். பொடுகை தவிர்க்க சிறிதளவு வேப்பெண்ணெயும் கலந்து கொள்ளலாம். தலையின்  ஈரப்பதத்தை தவிர்க்க சலூனுக்குச் சென்று ஹேர் ஸ்பா அல்லது ஆயில் மசாஜ் செய்து கொள்ளலாம். இது மண்டையோடு மற்றும்  முடியின் ஆரோக்யத்திற்கு உதவும்.  

*    எண்ணெய் பசையுடைய சருமம் கொண்டவர்கள் ஓட்ஸ் மற்றும் தேன் கலந்து முகத்தில் பரவலாக மென்மையாக தேய்க்க  வேண்டும். இதனை பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் ஃபேஸ் பேக் போல அப்படியே விட வேண்டும்.

*    உலர்ந்த சருமம் உடையவர்கள் ஓட்ஸ் மற்றும் தேனுடன் இரண்டு துளிகள் பாதாம் எண்ணெய் போட்டு பேஸ் பேக் போல சிறிது  நேரம் விட்டுவிட வேண்டும். அதன் பிறகு குளிர்ந்த நீரில் முகம் கழுவ வேண்டும். ஓட்ஸ் இறந்த செல்களை நீக்கி விடும். தேன்  முகத்திற்கு பளபளப்பைக் கொடுக்கும். எண்ணெய் சருமத்திற்கு ஊட்டச்சத்தைக் கொடுக்கும். மழைக்காலத்திற்கு ஏற்றபடி உங்கள் சருமம்  மாறும். வாரம் ஒரு முறை இந்த முறையை கையாளலாம். அரிசிக் கழுவிய  நீரை கூட முகத்தைக் கழுவ பயன்படுத்தலாம். அரிசியில்  ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகம் இருப்பதால் வயதாவதால் ஏற்படும் முகச் சுருக்கங்களை தவிர்த்து இளமையான தோற்றத்தைக் கொடுக்கும்.

*    மழைக்காலத்தில் அழகை பாதுகாக்க முக்கியமாக நம் கைவசம் வைத்திருக்க வேண்டிய இரண்டு விஷயங்கள் லிப் பாம் மற்றும்  சன்ஸ்கிரீன் கிரீம். உலர்ந்த சருமத்தில் கோடுகள் (பிளவு அல்லது விரிசல்) ஏற்படும். எனவே உங்கள் சருமம் மற்றும் முடியினை  ஈரப்பதத்துடன் வைப்பது மிக நல்லது.

*    உதடுகள் உலர்ந்து பிளவு ஏற்பட்டால் உதடுகள் மென்மையாக இருக்க வெண்ணெய் அல்லது நெய்யில் சர்க்கரை கலந்து  மென்மையாக தேய்க்க வேண்டும். அதனை இரண்டிலிருந்து மூன்று நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருக்க வேண்டும். பிறகு  வெதுவெதுப்பான நீரில் நனைத்த பஞ்சினால் துடைக்க வேண்டும்.

*    கடுமையான சோப்புகளை பயன்படுத்த வேண்டாம். சருமம் உலராது இருக்க மைல்டு பாடி வாஷ், மாய்ச்சரைஸிங் சோப்  அல்லது கிளிசரின் சோப்பை பயன்படுத்தலாம்.

*    கால்களை மறைக்கும் காலணிகள் (ஷூ) அணிவதால் பூஞ்சை மற்றும் பாக்டீரியல் தொற்றுகள் உருவாகும். கால்களை  மறைக்காத காற்றுப் போகும்படியான காலணிகளை அணிவது நல்லது. வெளியே போய்விட்டு வீட்டுக்கு வந்தவுடன் கை, கால், முகத்தை  கட்டாயம் கழுவ வேண்டும். கை, கால்கள் உலர்ந்து இருக்க வேண்டும். ஈரமாக இருந்தால் சேற்றுப்புண் வரலாம்.

*    பாதங்களையும் சுத்தமாகவும் உலர்வாகவும் எப்போதும் வைத்திருப்பதன் மூலம் பூஞ்சை மற்றும் பாக்டீரியல் தொற்றுகளை  தவிர்க்க முடியும். பெடிக்யூர் செய்யலாம். ஆன்டி பாக்டீரியல் ஸ்ப்ரே பயன்படுத்தலாம்.

*    நிறைய தண்ணீர் குடிப்பது மற்றும் நல்ல ஆரோக்கியமான உணவு உட்கொள்வதால் சருமம் மற்றும் தலைமுடிக்கு தேவையான  ஊட்டச்சத்து கிடைக்கும்.

*    வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். குளிக்கும் நீரில் ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால்  சருமத்திற்கான ஈரப்பதம் கிடைக்கும்.

*    ஒரு ஸ்பூன் காபித்தூளில் ஒரு ஸ்பூன் சர்க்கரை கலந்து ஒரு ஸ்பூன் ஆலிவ் அல்லது பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய்  கலந்து உடம்பில் தேய்க்கும் போது உடலில் உள்ள இறந்த செல்கள் வெளியேறும். தேவையான ஈரப்பதமும் கிடைக்கும்.     

                             

-ஸ்ரீதேவி மோகன்

Related Stories: