நீராலானது இவ்வுலகு

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

மேக் இன் இந்தியா - என்னதான் செய்யப் போகிறது!!

தமிழக அரசு சில மாதங்களுக்கு முன்பாக சேலம்-சென்னை இடையில் 6 முதல் 8 வழிப்பாதைகளை கொண்ட அதிவேக சாலைகளை அமைக்க இருப்பதாக அறிவித்ததை நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம். பாரத்மாலா திட்டத்தின் ஒரு பகுதியாக “சேலம் -சென்னை அதிவேக சாலை திட்டம்” நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. பாரத்மாலா திட்டம் என்பது சாகர்மாலா திட்டத்தின் முக்கிய அங்கம். பாரத்மாலா,  சாகர்மாலா இரு திட்டங்களும், “மேக் இன் இந்தியா” என்னும் தற்போதைய மத்திய அரசின் கொள்கையின் முக்கிய அங்கமாகும்.

மேற்கூறிய அனைத்து திட்டங் களும் உலக வர்த்தக கழகம் வகுத்துள்ள கொள்கைகளின் அடிப்படையில் கொண்டு வரப்படுகின்றன. உலக வர்த்தக கழகமோ “சந்தை பொருளாதாரம்” என்னும் கோட்பாட்டை முன் வைக்கிறது. சந்தை பொருளாதாரம் என்பது “சுதந்திர வர்த்தகம்” அடிப்படையில் செயல்படுகிறது. சந்தை பொருளாதார கொள்கைகள் உலகமயமாக்கல் என்னும் கவர்ச்சி பெயரில் நம் மீது திணிக்கப்படுகிறது. இந்த வலைப் பின்னலை புரிந்து கொள்வது மூலமே, சேலம் - சென்னை அதி வேக சாலை திட்டம் முதல் மேக் இன் இந்தியா திட்டத்திலுள்ள, பின் உள்ள அரசியல், பொருளாதார காரணங்களை நாம் அறிந்துக் கொள்ள முடியும்.

அதிலும் குறிப்பாக 25 ஆண்டு கால உலகமய கொள்கைகள் என்ன சாதனை செய்து உள்ளது என்பதையும் அறிந்து கொள்ள முடியும். வளர்ச்சி என்னும் கோட்பாடு இரண்டாம் உலகப் போரினால் நலிவுற்ற மேற்கத்திய நாடுகள் மீண்டும் எழுச்சி பெற 1944-ல் பிரிட்டன்யூட்ஸ் என்னும் இடத்தில் மாநாடு ஒன்றை கூட்டினர். இந்த மாநாட்டில், நாடுகளுக்கு இடையிலான தடையற்ற சுதந்திர வர்த்தகத்தின் மூலமே வளர்ச்சி பெற முடியும் என்றும், அத்தகைய தடையற்ற வர்த்தகம் நிலவ, தடைகளாக உள்ள சட்டங்கள், சுங்கவரி போன்றவற்றை முறைப்படுத்த வேண்டும் என்றும் முடிவெடுத்து அதற்கு வசதியாக மூன்று அமைப்புகளை ஏற்படுத்தினர்.

அவை சர்வதேச வர்த்தக நிறுவனம் (International Trade Organisation), சர்வதேச மறுகட்டுமானம் மற்றும் வளர்ச்சிக்கான வங்கி (International Reconstruction And Development Bank) மற்றும் சர்வதேச நிதியம் (International  Monetary Fund). காலப்போக்கில் சர்வதேச வர்த்தக நிறுவனம் செயல்படாமல் போனது. சர்வதேச மறுகட்டுமானம் மற்றும் வளர்ச்சிக்கான வங்கி, உலக வங்கியாக உருமாற்றம் பெற்றது. இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட கொள்கைகளுக்கு உருவம் தர 1947-ல் காட் [General Agreement On Trade And Tariff (GATT)] என்னும் உடன்படிக்கை உருவானது.

மேலும் தொழில்துறையில் அரசின் தலையீட்டை மறுக்கும் சுதந்திர வர்த்தக  கொள்கையை பின்பற்றவும் இந்த மாநாட்டில் முடிவானது. இந்த மாநாட்டில் சுதந்திர இந்தியாவும் கலந்து கொண்டு உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டது. அதன்தொடர்ச்சியாக பல காட் மாநாட்டு பேச்சு வார்த்தைகள் உலக நாடுகளிடையே தொடர்ந்து நடந்து வந்தன. சோவியத் சிதைவு காலகட்டத்தில் உருகுவே நாட்டில் 1987-ல் துவங்கி 1994 வரை நடைபெற்ற 9-வது காட் சுற்று பேச்சு வார்த்தைதான் உலகமயமாக்கலின் துவக்கப்புள்ளி. இந்த பேச்சுவார்த்தையில் தான் உலக வர்த்தக நிறுவனத்தை (World Trade Organisation) ஏற்படுத்த முடிவானது.  

இந்நிறுவனத்தின் மூலம் புதிய பொருளாதார கொள்கைகள் என 90களில் தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல் இந்தியாவில் அறிமுகமாகின.  சோவியத்தின் வீழ்ச்சி உலகில் ஒரே ‘வல்லரசாக’ அமெரிக்காவை மாற்றியது. இதன் காரணமாக சோசலிச பொருளாதார கொள்கைகள் பின்னுக்கு தள்ளப்பட்டு முதலாளித்துவ சந்தை பொருளாதார கொள்கைகள் உலகெங்கும் பல நாடுகளில் பின்பற்றப்பட்டன. 1990-களில், நரசிம்மராவ் தலைமை யிலான அப்போதைய காங்கிரஸ் அரசு இந்தியாவில் புதிய பொருளாதார மாற்றங்களை கொண்டு வந்தது. இதன் காரணமாக பல அரசு நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டன.

பல துறைகளில் அந்நிய முதலீடுகள் அனுமதிக்கப்பட்டன. உலகமய கொள்கைகள் முழுமையாக பின்பற்றப்பட்டன. இவை அனைத்தும் மக்கள் மன்றமான நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதம் இன்றி, மக்களின் கருத்துகளை கேட்டறியாமல் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவில் உலகமய கொள்கைகள் 1991ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு புதிய தொழில் கொள்கையை அறிவித்தது. பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் துவங்க வழி வகுத்தது இந்த கொள்கை மாற்றம். ராணுவம், அணுசக்தி, நிலக்கரி, இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலிய கனிமங்கள், ரயில்வே போக்குவரத்து மற்றும் அணுசக்தி துறைக்கு கீழ் உள்ள கனிம வளங்கள் ஆகியன மட்டும் பொதுத்துறைக்கானவையாக ஒதுக்கப்பட்டன.

இதனை தவிர்த்து உணவு, மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டன. இந்த பொருட்களின் உற்பத்தியில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டன. இரும்பு மற்றும் எஃகுத் தொழில், இரும்புத் தாதுச் சுரங்கங்கள் போன்ற இயற்கை வளங்கள் தனியார்மயமாக்கப்பட்டன. காங்கிரஸ் அரசிற்கு பின்பு ஆட்சிக்கு வந்த தேவகவுடா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு, பொருளாதார கொள்கையாக குறைந்தபட்ச பொதுத் திட்டத்தை அறிமுகம் செய்தது. காங்கிரஸ் அரசு ஏற்கனவே இந்திய நிறுவனங்களில் அந்நிய முதலீட்டுக்கான உச்சவரம்பை 40% லிருந்து 51% க்கும் பிறகு 74% க்கும் இறுதியாக 100% க்கும் உயர்த்தியது.

அதே பாதையில் ஐக்கிய முன்னணி அரசும் தொடர்ந்து சென்றது. 1996ம் ஆண்டு, அனல் மின் திட்டங்கள், நீர்மின் திட்டங்கள், மரபு - சாரா ஆற்றல் திட்டங்கள் ஆகியவற்றில் 100% அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டது. இந்திய இரும்பு உற்பத்தி நிறுவனமான ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா, இயற்கை எரிவாயு எடுக்கும் இந்திய நிறுவனமான கேஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டன. மேலும் சுரங்க தொழிலிலும் தனியார்கள் அனுமதிக்கப்பட்டனர். குறிப்பாக, இரும்பு தாதுச் சுரங்கம், மாங்கனீசு, குரோமைட், பாக்சைட், தாமிரம் ஆகிய தாதுச் சுரங் கங்கள் மற்றும் உலோகமற்ற தாதுக்களின் சுரங்கங்கள் தனியார்மயமாக்கப்பட்டன.

அதாவது, இயற்கை வளம், எரிசக்தி, மின்சாரம் சார்ந்த பொதுத்துறைகள் தனியார்மயமாக்கப்பட்டன. இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கும் மக்களுக்கான இயற்கை மீதான உரிமை மறுக்கப்பட்டு, தனியார்களின் உடமையாக இவை மாறின என்பதே இதன் பொருள். இவர்களுக்கு பின்பு வந்த பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசும் உலகமய பொருளாதார கொள்கையையே பின்பற்றியது. மோடி தலைமையிலான இன்றைய மத்திய அரசு வரை இந்த பொருளாதார கொள்கையே தொடர செய்கிறது. 1998 பின் நடந்த பொருளாதார மாற்றங்களும், இயற்கைவளங்கள் மீது தொடுக்கப்பட்ட தனியார்மய தாக்குதல்களும் பல பல. அவற்றை அடுத்த பதிவில் விவாதிப்போம்....  

Related Stories: