×

மறுக்கப்படும் நீதி!

நன்றி குங்குமம் தோழி

திருநங்கைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை குற்றமாக கருதக்கோரி திருநங்கைகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு எண் 375ஐ அவர்களுக்கும்  பொதுவானதாக மாற்றக் கோரி கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த வழக்கில் தலையிட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என உச்சநீதிமன்றம் கூறியிருப்பது பலரின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. சட்டப்பிரிவு எண் 375ன் படி பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குற்றவியல் தண்டனையாக கருதப்பட்டு தண்டனை வழங்கும் நடைமுறை அமலில் உள்ளது.

இதையடுத்து  நாடாளுமன்றத்தால் மட்டுமே சட்டப்பிரிவு எண் 375ஐ மாற்ற முடியும் என்றும், புதிய சட்டத்தை உருவாக்கவோ, ஏற்கனவே இருக்கும் சட்டத்தை மாற்றவோ உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது. தேவைப்பட்டால் நாடாளுமன்றம் மட்டுமே இந்த சட்டத்தில் மாற்றம் கொண்டு வர இயலும் என கூறியிருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக திருநங்கை கிரேஸ் பானுவிடம் பேசியபோது.“சமீப காலமாக உச்ச நீதிமன்றம் திருநங்கைகளுக்கு ஆதரவாக பல நல்ல தீர்ப்புகளை வழங்கி இருக்கிறது.

ஆனால் இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கிறது. பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் பற்றி பேசுகிறவர்கள் திருநங்கைகளும், திருநம்பிகளும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அது குறித்து ஏற்கனவே வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. திருநங்கைகள் மற்றும் திருநம்பி கள் சந்திக்கும் பாலியல் வன் கொடுமைக்கு காரணமாக இருக்கும் ஆண்கள், பெண்கள் மீதும் குற்றம் சாட்டுவதற்கான சூழல் வேண்டும் என்பது தான் இந்த வழக்கின் நோக்கம்.

உச்ச நீதிமன்றம் எங்களின் கோரிக்கையை நியாயமானதாக ஏற்றுக் கொண்டாலும், இந்திய தண்டனைச் சட்டம் எண் 375ன் படி, பெண்கள் ஆண்களுக்கு எதிராக கொடுக்கப்படும் புகார்களை மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும் என்று கூறியிருக்கிறார்கள். பாராளுமன்றத்தில் வேண்டுமானால் சட்டத்திருத்தத்தை கொண்டு வரலாம் என்று தெரிவித்துள்ளனர். 2014ல் திருநங்கைகளுக்கான அங்கீகாரத்தை கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்ததை இந்த நேரத்தில் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.

அதன் அடிப்படையில் பார்க்கும் போது திருநங்கைகளை பெண்களாக கருத வேண்டும் என்றுதான் நாங்கள் பதிவு செய்திருக்கிறோம். அப்படியானால் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு எண் 375ஐ திருநங்கைகளுக்கு பொருந்தும் என்று தீர்ப்பு வழங்கியிருக்க வேண்டும். திருநங்கைகளை  பொதுப்பிரிவில் சேர்க்க வேண்டும் என்று கூறியதை உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. ஏன் எங்களை பொதுப்பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் எழுப்பாதது வேதனை அளிக்கிறது. தெளிவான புரிதல் இல்லாத காரணத்தால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்றுதான் பார்க்க வேண்டும்’’ என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் கிரேஸ் பானு.
    
- ஜெ.சதீஷ்

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!