நண்டு... நண்டு....

நன்றி குங்குமம் டாக்டர்

உணவே மருந்து

‘‘சமைப்பதும், சாப்பிடுவதும் சற்று சிரமம் என்பதாலோ என்னவோ நண்டுக்கு பல சமயங்களில் இரண்டாம் இடம்தான். தீவிர அசைவ உணவு விரும்பிகளாக இருந்தாலும் சரி... கடல் உணவுகளின் காதலர்களாக இருந்தாலும் சரி... நண்டுக்கு அவர்களது மெனுவில் இரண்டாம் கட்ட இடமாகத்தான் பெரும்பாலும் இருக்கும். நண்டுவின் மகத்துவம் பலருக்கும் தெரிந்தால் முதல் இடத்தைப் பிடித்துவிடும்’’ என்கிறார் உணவியல் நிபுணர் ப்ரீத்தா சங்கர்.

நண்டுவில் அப்படி என்ன சத்துக்கள் இருக்கிறது?

நண்டு மிக பழமையான கடல்வாழ் உயிரினங்களில் ஒன்று. இவை உலகம் முழுவதும் பரவலாகக் காணப்படும் ஓர் உணவுப் பொருள். நண்டுகளில் மிகுந்த கலோரிகளும், உடலுக்குத் தேவைப்படும் கொழுப்புச்சத்தும் உள்ளது. நண்டுகளில் Blue crab, Dungeness crab, King crab, Horse crab, Stone crab, Rock crab போன்ற பல வகைகள் உண்டு.100 கிராம் நண்டில் உள்ள சத்துக்கள் விபரம்கலோரிகள் - 59 kcal, கார்போஹைட்ரேட் - 33 கிராம், புரதம் - 8.9 கிராம், கொழுப்பு - 1.1 கிராம், கனிமங்கள் - 3.2 கிராம், கால்சியம் - 1370 மி.கி, பாஸ்பரஸ் - 150 மி.கி, இரும்புச்சத்து - 21.2 மி.கி அடங்கியுள்ளது.

மேலும் நம் உடலுக்கும் மூளையின் செயல்பாட்டுக்கும் தேவையான ஒமேகா - 3, கனிமங்கள் மற்றும் புரதச்சத்துக்களையும் அதிகம் கொண்டுள்ளது. இதில் ஒமேகா-3 அமிலம், காப்பர், வைட்டமின் பி2, செலினியம் போன்றவை மூளை செயல்படவும், நரம்பு மண்டலம் செயல்பாடுகளுக்கும் உதவி செய்கிறது. ரத்த அழுத்தம் மற்றும் உடலில் உள்ள கொழுப்பினை சீர் செய்யவும் நண்டு பயன்படுகிறது.

கால்சியம் நிறைந்த உணவு என்பதால் எலும்பு தேய்மானங்கள் கொண்டவர்கள் நண்டினை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்ளலாம். நண்டு உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்வது எலும்பு தேய்மானம் போன்ற பிரச்னைகளை வர விடாமலும் தடுக்கும்.நோய் எதிர்ப்பு சத்துக்களும் நண்டுகளில் மிகுந்து காணப்படுகிறது. அது மட்டுமின்றி நண்டினை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது, சிறுநீரகத்தின் சிறப்பான செயல்பாட்டுக்கும் நமக்கு உதவி செய்கிறது.

நண்டில் உள்ள இன்னும் சில முக்கிய சத்துக்கள்

கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், சிங்க், காப்பர், மாங்கனீஸ், செலினியம் போன்ற கனிமங்களும் ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி 12 ஆகியவைகளைக் கொண்டுள்ளது நண்டு.

நண்டு பயன்படுத்தும் முறை

நண்டு சமைக்கும்போது சேர்மான பொருட்களாக மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பூண்டு, மஞ்சள், தக்காளி சேர்த்து சூப் போன்று நன்கு கொதிக்க வைத்து சாப்பிடுவது நல்லது. ஜலதோஷம் இருக்கும்போது இவ்வாறு சாப்பிட்டால் உடனடி தீர்வு கிடைக்கும். அத்தோடு சளித் தொந்தரவுகளையும் போக்குகிறது. முக்கியமாக, நண்டில் உள்ள கனிமங்கள் தம்பதிகளின் செக்ஸ் ஹார்மோன்களைத் தூண்டுவதற்கு பெரிதும் உதவுகிறது.

குழந்தைகளுக்கு சளித்தொல்லை இருக்கும்போது நண்டு சமைத்து கொடுப்பது நல்லது. நண்டில் செலினியம் அதிகமாக உள்ளது. இவை நம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பயன்படுகிறது. இதுவே நம் செல்களையும் திசுக்களையும் சேதம் ஏற்படாமல் காக்கிறது. செலினியம் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பை பலப்படுத்துவதோடு தைராய்டு வளர்சிதை மாற்றம் வராமலும் தடுக்கும்.

மழைக்கால உணவு பட்டியலில் நண்டு சேர்ப்பது நன்று. உடலுக்கு சூடு கொடுக்கும். அதனால் மழைக்காலங்களில் உண்ணும்போது குளிரை எதிர்த்து போராட உதவும். வெயில் காலங்களில் குறைந்த அளவு எடுத்துக் கொள்வது நல்லது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள், ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர்கள் குறைந்த அளவே நண்டினை உணவில் சேர்த்துக் கொள்ளல் வேண்டும். நண்டினைத் தவிர்ப்பதும் நல்லது.நண்டு வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகடல்வாழ் நண்டுகள் மற்றும் நன்னீர் நண்டுகள் குறிப்பிடப்பட்ட நண்டுகள் சாப்பிட உகந்தவையாகும்.

உயிருள்ள நண்டுகளை வாங்குவதே நல்லது. நண்டின் மேல் உள்ள ஓடு நன்கு தடிமனாக இருத்தல் வேண்டும். எது நல்ல நண்டு என்று அதன் வாசனையை முகர்ந்து பார்த்து வாங்குவதும் சிறந்தது. அழுகிய நாற்றம் வந்தால் அவை உண்ண
உகந்தவை அல்ல.

நண்டு சமைக்கும்போது...

மேல் உள்ள ஓட்டினை கவனமாக நண்டின் தசைப்பகுதியில் இருந்து பிரித்து எடுக்க வேண்டும். அதன் பின் கால்களை எடுத்து விட வேண்டும். நண்டினை எண்ணெயில் பொறிக்காமல் சூப், குழம்பு, மசாலா, நண்டு வறுவல் போன்ற வகைகளில் சமைத்து சாப்பிடுவதன் மூலம் நண்டின் முழுமையான ஊட்டச்சத்து நமக்கு கிடைக்கும்.

- க.இளஞ்சேரன்