×

அரசியல் எனக்கு பிடிக்காது!

நன்றி குங்குமம் தோழி

பூமா அகிலா ப்ரியா, வயது 29. ஆந்திரப் பிரதேச சுற்றுலாத்துறை அமைச்சர். இளமையான அரசியல்வாதி என்பதால், அரசியல் சாசனத்தில் சந்திக்கும் பின்னடைவுகள் மற்றும் விமர்சனங்களை புன்சிரிப்போடு எதிர்கொள்கிறார். தன் மாநில சுற்றுலா துறைக்கு ஒரு புது முகத்தை அமைப்பதில் மிகவும் ஆர்வமாக செயல்பட்டு வரும் ப்ரியா, தான் அரசியலுக்கு வந்த பாதையை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். இளம் பெண்ணான ப்ரியாவிற்கு, அரசியலின் மேல் பெரிய ஈடுபாடு எல்லாம் இல்லை. ஆனால் இவர் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக அரசியலில் ஊரிப்போன குடும்பத்தை சேர்ந்தவர்.

ப்ரியாவின் அப்பா நாகி ரெட்டி 1992ல் ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996ல் நந்தியால் லோக் சபா சட்டமன்றத் தேர்தலில் பிரதம மந்திரி பி.வி.நரசிம்மராவுக்கு எதிராக தெலுங்கு தேச கட்சி வேட்பாளராக போட்டியிட்டார். அம்மா ஷோபா நாகி ரெட்டி 2012 ஆம் ஆண்டு வரை ஆந்திர மாநில சட்டப் பேரவையில் அலாகாடா (Allagadda) தொகுதியில் பிரதிநிதியாக இருந்தார். அவர் ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகத்தின் தலைவராக பணியாற்றினார். பிரஜா ராஜ்ஜியம் (Prajarajyam) கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்தார்.

அதற்கு முன்னர் தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராகவும். பொதுச் செயலாளராகவும் இருந்தார். 2012ல், பிரஜா ராஜ்ஜியம் கட்சியை விட்டு விலகி, புதிதாக உருவாக்கப்பட்ட YSR காங்கிரஸில் இணைந்தார். பின்னர் கட்சியில் ஏற்பட்ட பூசல் காரணமாக அரசியலில் இருந்து முழுதுமாக விலகிக் கொண்டார். வீட்டில் எப்போதும் அரசியல் வாசம் வீசிய காரணத்தால் ப்ரியாவின் பள்ளிக் காலங்கள் ஊட்டி கான்வென்டில் கழிந்தது. படிப்பு முடிச்சிட்டு உலகம் முழுக்க பயணிக்க வேண்டும் என்பது ப்ரியாவின் ஆசை. ஆனா அவர் வாழ்க்கையில் விதி வேறு விதமாக விளையாடியது.

நாம் ஒரு கணக்கு போட்டா, மேலிருப்பவன் வேறு கணக்கு வைத்திருப்பான். அது ப்ரியாவின் வாழ்வில் உண்மையானது. அரசியல் வாசமே வேண்டாம் என்று ஒதுங்கி இருந்த ப்ரியா, இப்போது ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர். வாழ்க்கை அவருக்கு பல பாடங்களை கற்றுக் கொடுத்து இருந்தாலும், மக்களின் நலனுக்காக தன்னை ஒரு கூர்மையான அரசியல்வாதியாகவும், ஆந்திரப் பிரதேசத்தை உலக தரம் வாய்ந்த சுற்றுலா தலமாக மாற்ற முயற்சித்து வருகிறார். 2014ல், ப்ரியாவின் தாயார், அவரை இடைத்தேர்தலுக்காக பிரச்சாரம் செய்யும் படி கேட்டுக் கொண்டார்.

அம்மாவின் பேச்சை தட்ட முடியாமல் அவருக்காக ப்ரியா பிரச்சாரம் செய்ய ஒப்புக் கொண்டார். “தேர்தலுக்கு பத்து நாள் இருக்கும். அம்மா பிரச்சாரத்துக்கு போன போது, கார் விபத்தில் இறந்துட்டார். அந்த சம்பவம் எங்க குடும்பத்தையே புரட்டி போட்டது. நான், அக்கா, தம்பி எல்லாரும் மனதால் ரொம்பவே பாதிக்கப்பட்டோம். என்ன செய்றதுன்னு புரியல. எங்களை சுற்றி எல்லாம் இயங்க மறுத்துவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. ஆனா அம்மாவின் இழப்பை நினைத்து எங்க மூவரால் அழ கூட நேரமில்லை.

காரணம் அம்மா பாதியில் விட்டு சென்ற பிரச்சார சுமை எங்கள் தோள் மீது விழுந்தது’’ என்று அந்த நிகழ்வை பற்றி பேசிய ப்ரியாவின் வார்த்தைகள் கரகரத்தன.‘‘அம்மா அரசியல்வாசியாக இருக்கலாம். ஆனா எங்களுக்கு அவங்க அம்மாதான். அரசியலில் ஈடுபட்டு இருந்தாலும் ஒரு நல்ல இல்லத்தரசியாகவும், எங்களுக்காகவே வாழ்ந்தார்னு சொல்லலாம். அலாகாடா பகுதியில் அம்மாவுக்காக பிரச்சாரம் செய்ய போன போது, அந்த தொகுதி மக்கள் அவர் மேல் எவ்வளவு மரியாதை வைத்துள்ளனர் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எல்லார் வீட்டிலும் அம்மாவின் புகைப்படம் இருந்தது.

அங்கு அவர் அரசியல் தலைவராக இல்லை, ஒவ்வொரு வீட்டின் உறுப்பினரா வாழ்ந்துள்ளார்’’ என்ற ப்ரியா அம்மாவின் இடத்தை அவர் நிரப்புவார் என்று அப்போது நினைக்கவில்லை. அலாகாடா மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்ததோடு, 18,000 வாக்குகள் பெற்று அவரின் அம்மா தேர்தலில் வெற்றி பெற்றார். ‘‘தேர்தல் முடிவுக்கு பிறகு, அம்மாவின் இடத்தில் யாரை நியமிக்கலாம் என்ற குழப்பம் ஏற்பட்டது. வேறு யாரையோ நியமிப்பதற்கு, அப்பாவுக்கு நான் அந்த இடத்தில் அமரணும்னு எண்ணம் இருந்தது. அவர் விருப்பத்தை என்னிடம் சொல்ல, என்னால் அவரின் பேச்சை தட்ட முடியவில்லை.

அந்த தொகுதி மற்றும் மக்களை பத்தியோ எனக்கு எதுவுமே தெரியாது. அந்த சமயம் அரசியல் நிலைமையும்  வித்தியாசமா இருந்தது’’ என்றார் ப்ரியா. ‘‘அப்பா என் மேல ரொம்பவே நம்பிக்கை வைத்து இருந்தார். பெண்கள் அரசியலுக்கு வந்தால் தான் உண்மையான நில வரம் என்ன என்று கண்டறிந்து அதற்கு ஏற்ப மாற்றங்களை கொண்டு வர முடியுன்னு நினைத்தார். அரசியல் எனக்கு புது அனுபவமா இருந்தது. அப்பா அரசியலில் இருந்தாலும் என்னுடைய சாசனத்துக்குள் நுழையவில்லை. எல்லா முடிவையும் என்னையே எடுக்க சொன்னார். புரியாத களம்  என்பதால் தவறுகள் நடப்பது இயல்பு.

நானும் தவறுகள் செய்தேன். அப்பாவோ தவறுகள் மூலம் தான் கற்றுக்கொள்ள முடியும்னு சொன்னார்’’ என்ற ப்ரியா மறுபடியும் ஒரு பேரிடியை சந்திப்பார் என்று அப்போது நினைக்கவில்லை. மாநில தேர்தல்கள் நடக்க இருந்தது. இவரின் அப்பா நந்தியால் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட இருந்தார். தன் தொகுதி மக்களுக்கு சாலைகளை விரிவுபடுத்துவதாகவும், 13 ஆயிரம் வீடுகள் கட்டித் தருவதாக வாக்களித்து இருந்தார். துரதிருஷ்டவசமாக தேர்தலுக்கு முன் மாரடைப்பால் காலமானார். ‘‘மக்களின் முகத்தில் பயத்தை பார்க்க முடிந்தது.

அவர்களுக்கு எப்படி நம்பிக்கை கொடுப்பதுன்னு எனக்கு தெரியல. ஒரு பக்கம் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் மறுபக்கம் அப்பாவின் இரங்கல் கூட்டம். நான் அங்கு பேச முடிவு செய்தேன். முதன் முதலில் சட்டசபையில் என் தந்தையின் இரங்கல் கூட்டத்தில் தான் பேசினேன். நான் அங்கு வருவேன், பேசுவேன்னு யாரும் எதிர்பார்க்கல. கூட்டத்தில் என் பெற்றோரின் கனவுகளை நினைவாக்குவதாக முடிவு செய்தேன். என் தொகுதி மக்களுக்கு நான் இருக்கேன்னு நம்பிக்கை கொடுத்தேன்’’ என்ற ப்ரியாவுக்கு, சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் மாநில சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் பொறுப்பு வழங்கப்பட்டது.

பெற்றோரின் கனவை நினைவாக்க பொறுப்பை ஏற்றுக் கொண்டது மட்டும் இல்லாமல் அதில் வரும் பிரச்னைகளை எதிர்க்கவும் தயாரானார். ஆந்திரப்பிரதேசத்தை உலகளாவிய சுற்றுலா தளமாக மாற்றி அமைக்க  முழுமூச்சாக வேலைப் பார்த்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக 24 மெகா சுற்றுலா நிகழ்வுகளை நிகழ்த்தியுள்ளார். ஒவ்வொரு நிகழ்ச்சியும் தனிப்பட்டு அமைக்கப்பட்டு இருந்தது.

அராக்குவில் (Araku) ஹாட் ஏர் பலூன் விழாவும், அமராவதியில் சமூக ஊடக உச்சிமாநாட்டில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கச்சேரி என ஆந்திர மாநிலம் விழாக்கோலமாக உள்ளது. சுற்றலா துறை சார்ந்த புது கொள்கைகள் வரவேற்கப்படுகின்றன என்றவரிடம் பெண்களால் பல்வேறு பாத்திரங்கள், பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள முடியுமா என்ற கேள்வியினை வைத்த போது, உடனடியாக, ‘‘ஏன் முடியாது, அவர்கள் அந்த திறமையுடன் பிறக்கிறார்கள்” என்றார் திடமாக பூமா அகிலா ப்ரியா.
           
- ப்ரியா

Tags :
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!