அங்கன்வாடியில் கலெக்டர் மகன்!

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

அரசு, தனியார், ரெசிடென்ஷியல் என பள்ளிகளில்தான் எத்தனை ரகம். இதில் போட்டி போட்டுக் கொண்டு நாம் நம் குழந்தைகளை சேர்க்கிறோம். ஆனா எந்த ஒரு டென்ஷனும் இல்லாமல் தன் மகனை அங்கன்வாடியில் சேர்த்துள்ளார் உத்தரகாண்ட் மாநிலத்தின், சமோலி மாவட்ட கலெக்டர் ஸ்வாதி பதவுரியா தம்பதியினர். இவரின் கணவர் நித்தின் பதவுரியாவும் ஐ.ஏ.எஸ். அதிகாரிதான். கணவன், மனைவி இருவரும் கலெக்டராக இருக்கும் பட்சத்தில் கை நிறைய சம்பளம், அரசு பங்களா, மாவட்டத்தையே ஆளும் அதிகாரம் என அத்தனை வசதிகள் இருந்தும் இருவரும் இணைந்து இந்த துணிச்சலான முடிவினை எடுத்துள்ளனர்.

காரில் பவனி வரும் பலர், தன் பிள்ளைகள் கான்வென்டில் படித்தால்தான் தனக்கு பெருமை என்று நினைக்கும் இந்த காலத்தில், ஐ.ஏ.எஸ். தம்பதியினரின் செயல் பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஸ்வாதி, உத்தரகாண்ட் மாநில சமோலி மாவட்டத்தின் கலெக்டராக இருப்பவர். அதே மாநிலத்தின் அல்மோரா மாவட்ட ஆட்சியராக இருப்பவர் இவரின் கணவர் நித்தின் பதவுரியா. இவர்களுக்கு அபயுதா என்ற இரண்டு வயது மகன். இந்த தம்பதிகள் நினைத்தால் பிரபல பள்ளியில் தன் மகனை படிக்க வைத்திருக்க முடியும்.

ஆனால் நாம் முன்னுதாரணமாக இருந்தால்தான் அங்கன்வாடியில் பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளை சேர்க்க முன்வருவார்கள் என கருதி இந்த முடிவை இருவரும் இணைந்து எடுத்துள்ளனர். அங்கன்வாடியில் சேர்ப்பதாக முடிவு செய்தவுடன், இந்த தம்பதி இருவரும் சமோலி மாவட்டத்தில் கோபேஷ்வர் நகரில் உள்ள அங்கன்வாடிக்கு படை எடுத்தனர். இருவரையும் ஒன்றாக அங்கு பார்த்தவுடன் அங்கன்வாடியில் உள்ள ஊழியர்கள் கலெக்டர் ஆய்வுக்கு வந்துவிட்டதாக கருதி பீதியடைந்துள்ளனர். அவர்களை சமாதானப்படுத்திய ஸ்வாதி ஊழியரிடம் தன் மகனை இந்த அங்கன்வாடியில் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதன் பிறகு தான் அங்கன்வாடி ஊழியர்கள் பெரு மூச்சே விட்டனர். இது குறித்து கலெக்டர் ஸ்வாதி கூறும்போது, "அங்கன்வாடியில தரும் உணவு, சத்து மாவு ஆகியவற்றை சாப்பிட்டு வீடு திரும்பும் என் மகன் மிகவும் மகிழ்ச்சியா இருக்கான். என் மகனுக்கு ஆடம்பர வாழ்க்கை தேவையில்லை. சமூகத்துடன் ஒன்றி வாழும் போது தான் அவன் மனதளவிலும், உடல் ரீதியாகவும் பலமாக இருக்க முடியும். குழந்தையின் சமூக வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம், அவர்கள் மற்ற குழந்தைகளுடன் இணைந்து ஒன்றாகப் படிப்பது. தனியாக வீட்டில் விளையாடும் குழந்தையால் வெளி உலகத்தில் நடக்கும் விஷயங்களை கற்றுக் கொள்ள முடியாது.

குழுவாக இணைந்து செயல்படும் போது தான் ஒரு குழந்தை ஆரோக்கியமாக வளர முடியும். ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இன்றி குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டு அடிப்படை கல்வி இங்கு கற்றுத்தருகிறார்கள். ஆங்கிலம் மற்றும் ஹிந்தியிலும் பாடங்கள் நடத்துகிறார்கள். குழந்தைகள் விளையாட பொம்மைகளும் உள்ளது. இங்கு 23 குழந்தைகள் படிக்கிறார்கள். அவர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு அளிக்கப்படுகிறது. அதை என் மகனும் அவர்களுடன் சேர்ந்து பகிர்ந்து சாப்பிடும் போது மனசுக்கு சந்தோஷமா இருக்கு. என் மகனும் ஒரு நல்ல குடிமகனா வளர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அங்கன்வாடியை எனது மகனின் ஆரம்ப கல்வி நிலையமாக தேர்ந்தெடுத்தோம்’’ என்கின்றனர் கலெக்டர் தம்பதியினர்.

- கோமதி பாஸ்கரன்

Related Stories: