வாள்வீச்சு போட்டியில் தேசிய விருது

நன்றி குங்குமம் தோழி

தடைகளை உடைத்த மாணவி

தன் 2 வயதில் இருந்தே சிலம்பம் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் பர்ஜானா தான் தாண்டி வந்த தடைகளை பற்றிப் பகிர்ந்து கொண்டார். “என்னுடைய தாத்தா, அப்பா இருவருமே சிலம்பம் பயிற்சியாளர்கள். என்னோட இரண்டு அக்காவும் சிலம்பம் பயிற்சி பெற்றது இல்லாமல் பல விருதுகளை வாங்கியிருக்காங்க. என்னோட அக்கா இருவரும் பயிற்சி எடுக்கும் போது நான் சும்மா வேடிக்கை பார்ப்பேன். அப்ப எனக்கு இரண்டு வயசுதான் இருக்கும். அவங்க கம்பு சுத்துவதை பார்த்து நானும் அக்காக்களோடு கம்பு எடுத்து விளையாடுவேன். என்னுடைய ஆர்வத்தை பார்த்து அப்பா எனக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பிச்சார்.

அப்பா மட்டுமில்ல தாத்தாவும் அவரோட அனுபவத்தை எனக்கு சொல்லிக் கொடுத்தார். கம்பு சுற்றும் போது காற்றில் ஏற்படும் விசிக், விசிக் என்ற சத்தம் எனக்குள் ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்தியது. அந்த சத்தம்தான் எனக்குள் சிலம்பம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது’’ என்று சொல்லும் பர்ஜானா விடியற்காலையே தன் பயிற்சியை ஆரம்பித்துவிடுவாராம்.‘‘தினமும் காலையில் நான்கு மணிக்கு எழுந்திடுவேன். முதலில் சின்ன உடற்பயிற்சிகள். அப்பதான் தசைகள் ரிலாக்ஸாகி சிலம்பு சுற்ற எளிதா இருக்கும்.

காலை ஆறு மணிக்கு பயிற்சியை தொடங்குவேன். பிறகு பள்ளிக்கு கிளம்பிடுவேன். இதே போல மாலையும் பயிற்சி இருக்கும். 6 ஆம் வகுப்பு படிக்கும் போது பள்ளி அளவில் நடந்த சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கேன். அப்பா சிலம்பம் பயிற்சியாளர் என்பதால், என்னைப் போல நிறைய பேர் அப்பாகிட்ட கத்துக்க வருவாங்க. அவங்களோடு ஒருத்தராதான், நானும் அப்பாவிடம் இன்றும் பயிற்சி பெற்று வருகிறேன். மகள் என்பதற்காக அப்பா எனக்கு எந்த சிறப்பு சலுகையும் கொடுக்க மாட்டார். தப்பு செய்தா திட்டவும் தயங்க மாட்டார். சிலம்பம் மட்டும் இல்லை எனக்கு எல்லா விளையாட்டு போட்டிகள் மீதும் ஆர்வ முண்டு.  

பள்ளியில்  ஜூடோ,  கபடின்னு எந்த போட்டியையும் விட்டு வைக்க மாட்டேன். அனைத்து போட்டியிலும் கலந்து கொண்டு விளையாடுவேன். விளையாடும் போதும் சரி, கம்பு சுற்றும் போதும் சரி நிறைய அடிபடும். அதை கண்டு பயப்படாமல், ஒவ்வொன்றையும் என்னுடைய வெற்றிப்படிகளாதான் நான் பார்த்தேன்’’ என்று சொல்லும் பர்ஜானா வெற்றிக்கனியை சுவைக்க பல பிரச்னைகளை சந்தித்துள்ளார்.‘‘பெண்கள் சாதாரணமாக ஏதாவது ஒரு கலையை கற்றுக் கொள்ள முன் வந்தால், அதை பற்றி விமர்சனம் செய்பவர்கள்தான் அதிகம்.

அப்படி இருக்கும் போது இதைப் போன்ற தற்காப்புக் கலைகளை பெண்கள் கற்றுக் கொள்ள முன் வரும் போது விமர்சனங்கள் பற்றி சொல்லவா வேணும். எங்க உறவினர்களே என்னைப் பற்றியும் என் சகோதரிகள் பற்றியும் பல விமர்சனம் செய்து இருக்காங்க. அதுவும் அங்க சமூகத்தில் வயதிற்கு வந்த பிறகு அதிகம் வெளியே செல்ல அனுமதிக்க மாட்டாங்க. அப்படி இருக்கும் போது, என்னிடம் நேரடியாகவே,‘‘உனக்கு எதுக்கு இந்த விளையாட்டு எல்லாம். ஆண்பிள்ளை போல கம்பு சுழட்டிக்கிட்டு. ஒழுங்கா படிக்கிற வேலைய பாரு’’ன்னு வீட்டுக்கு வரும் போது அப்பா காது படவே செல்லுவாங்க.

எங்க சமூகத்தில் பெண்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகள் பத்தி தான் உங்களுக்கு தெரியுமே. இது ஒரு கட்டத்தில் எனக்கு பல பிரச்னைகள் ஏற்பட காரணமாக இருந்தது. தெரிந்தவங்க அப்பாவிடம் பெண் பிள்ளைக்கு எதுக்கு இதெல்லாம், குர்ஆன் படிக்க வைங்கன்னு சொல்லுவாங்க. அப்பாக்கு எங்க மார்க்கத்தின் மீதும் என்னோட வளர்ச்சியின் மீதும் மதிப்பு அதிகம். அவரோட உந்துதல்தான் என்னை இன்னும் இந்த தற்காப்புக் கலையில் தொடர்ந்து இயக்கி வருது. கம்பை கையில் எடுக்க ஆரம்பிச்சதுமே, மனசுல ஒரு தைரியம் வந்துவிடும். எனக்கு இதுநாள் வரை தனிமை கண்டு பயம் ஏற்பட்டதில்லை.

எங்கு சென்றாலும் எனக்கு ஒரு துணை வேண்டும் என்று நான் நினைச்சதும் கிடையாது. எனக்கு பெருந்துணையாக நான் கற்ற கலை இருக்கு” என்றவர் இந்த ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான வாள் வீச்சு போட்டியில் விருது பெற்றுள்ளார். “இந்த ஆண்டு ஜனவரி மாதம் தில்லியில் தேசிய அளவிலான வாள் வீச்சு போட்டி நடைபெற்றது. தமிழ்நாட்டில் இருந்து 50 பேர் கலந்து கொண்டோம். இந்தியாவில் இருந்து பல்வேறு மாநிலங்களில் போட்டியாளர்கள் வந்திருந்தாங்க. போட்டி கடுமையாதான் இருந்தது. இதுவரை மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியை எதிர் கொண்ட எனக்கு முதல் முறையா தேசிய அளவு போட்டியில் பங்கு பெற்றது கொஞ்சம் த்ரிலிங்கா இருந்தது.

மனசுல பயம் இருந்தாலும் அதை வெளியே காண்பிக்காம என்னோட வாள்வீச்சு திறமையை முழுமையா வெளிப்படுத்தினேன். முதல் பரிசும் பெற்றேன். ஒரு பக்கம் மகிழ்ச்சியா இருக்கு. அதே சமயம் இத்தனை போட்டியாளர்களையும் கடந்து வெற்றி பெற்றதுக்கு காரணம் என் குடும்பத்தினர் எனக்கு கொடுத்த சப்போர்ட் தான்’’ என்ற பர்ஜானாவுக்கு எதிர்காலத்தில் வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பது கனவாம். பர்ஜானாவை தொடர்ந்து அவரின் அப்பா மற்றும் பயிற்சியாளர் சையது ஹமீது தொடர்ந்தார். “எங்க குலத் தொழிலே சிலம்பம் கற்றுக் கொடுப்பதுதான்.

பாட்டன், முப்பாட்டன் என 7வது தலைமுறையாக பயிற்சி அளித்து வருகிறோம். தமிழ்நாடு காவல்துறையினருக்கும் நான் சிலம்பம் பயிற்சி அளித்து வரேன். தமிழ்நாடு இசைக்கல்லூரியில் தற்காப்புக் கலையின் சிறப்பு பேராசிரியராகவும் பணிபுரிகிறேன். ஏழை மாணவர்களுக்கு இலவச பயிற்சியும் அளிக்கிறேன். சென்னையில் மட்டும் தற்போது 300 மாணவர்கள் என்னிடம் பயிற்சி எடுத்து வர்றாங்க. சிலம்பம் மட்டும் இல்லாமல் யோகா, கராத்தே, நோக்குவர்மம், பாக்சிங், ஜூடோ, டேக்குவாண்டோ போன்ற தற்காப்புக் கலைகளையும் என்னுடைய பயிற்சி மையத்தில் சொல்லித்தரேன்.

என்னிடம் பயிற்சி பெற்ற பெண்கள் பலர் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்கள். 2 வயது குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை எங்களின் பயிற்சி கூடத்தில் பயிற்சி பெற்று வருகிறார்கள். என்னுடைய மூன்று மகளும் தேசிய விருது பெற்று சாதனை படைத்துள்ளனர். இது நம் பாரம்பரிய கலை. இதை ஆண்கள் மட்டும் இல்லை பெண்களும் கற்றுக் கொள்வது அவசியம்’’ என்றார் சையது ஹமீது.

- ஜெ.சதீஷ்

படங்கள் ஆ.வின்சென்ட்பால்

Related Stories: